வியாழன், 8 மார்ச், 2018

சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்

ஒரு பாதி நிலம்
ஒரு பாதி நீர்
ஒரு பாதி ஆகாயம்
ஒரு பாதி காற்று 
ஒரு பாதி நெருப்பு  என
நம்மின் பஞ்ச பூதங்களிலும்
சரி பாதி அவள்

அவளின் இயக்குதலில் 
அவளைப் பற்றிச் சுழன்றபடியிருக்கிறது நம் பூமி

எப்போதாவது அவளுக்கு ஒரு துணை தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு விரல் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு தோள் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு சொல் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு 

அப்போது மட்டும் அவளுக்கான நம்மைக் கொடுப்போம்
மற்றபடி அவள்
தனியள்

மகளிர் தின வாழ்த்துகள்


திங்கள், 5 மார்ச், 2018

அப்பாவின் நினைவுக்கு ஆண்டு ஒன்று

காடு மேடுகளிலெல்லாம்
தோளிலும் முதுகிலும் 
தூக்கிச் சுமந்த
அப்பாவை
நினைவுகளில் மட்டுமே
சுமந்தலையும் படி
விதி செய்து
ஆண்டொன்றும் ஆகிப்போனது


___________________

அம்மாவின் கருவறையிலிருந்து
வெளியேறிய கணம் முதல்
கோர்த்துக் கொண்டு உடனழைத்து வந்த
விரல்களை திடுதிப்பென்று
விடுவித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் அப்பா.

பணமதிப்பிழப்பு வரிவிதிப்பு
எரிபொருள் பேருந்து கட்டணம் ஏற்றம்
என என் பொடனியில் அடித்தபடியிருக்கிறது அரசு.
சகல சூழல்களிலும் உடனிருப்பேன் உடனிருப்பேன்
என்றவள்
என்றாவதொருநாள் தான் உண்மையில் இருக்கிறாள்
முதுகில் தடவிக்கொடுத்தபடியே இருந்த
கைகள்
இத்தனை காலம் வளர்த்துக்கொண்ட
நகங்களால் ஆழக்கீறி குருதிபார்க்கின்றன
ஏன் கவிதை எழுதவில்லை
எனக் கேட்டபடியிருக்கும் குரல்களுக்கான
பதிலை
எப்போதும் உச்ச வெப்பநிலையில் கொதிகொதித்தபடியே இருக்கும்
மனதின் அடியாழத்துக்குக் கடத்திவிடுகிறேன்
எல்லாவற்றிலிருந்தும் கவிதைகளின் வழியே
தப்பியோடிக் கொண்டிருந்தவன்
எல்லாவற்றிடமும் கவிதைகளின் வழியே
சிக்கிக் கொள்கிறேன்
இப்போதெல்லாம்

____________________

அப்பாவுக்கு மனிதர்களைத் தெரிந்திருந்தது யாரை விடவும்.
எங்களின் கற்பிதங்களைக் கலைத்து
யார் யார் என்னென்ன முகமூடிகளுடன் வருகிறார்கள் என்பதைத் தெளிவாக்குவார்.
அப்பாவுக்கு கடவுள்களைப் பற்றியும்
தெரிந்திருந்தது.
எந்தெந்தக் கோவிலில் எதெதற்குப் பரிகாரம்
எந்தக் கடவுளுக்கு என்ன சிறப்பு என அடுக்குவார்.
விலங்கினங்களையும் அறிந்தவர்
ஆடு எந்த நாளின் எந்நேரத்தில் குட்டி ஈனும்
மாட்டின் ஈனக் குரல் எதன் பொருட்டு
சுவர்ப்பல்லி ஏன் கத்துகிறது
காகம் ஏன் கரைகிறது என்பதாக.
மரம் செடி கொடிகளையும் இப்படித்தான்
தெரிந்து வைத்திருந்தார்.
எங்களையும் முழு முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார்
எல்லாரையும் போலவே
எல்லாம் தெரிந்த அப்பாவுக்கு
எல்லாரையும் போலவே
தனது மரணம் தெரிந்திருக்கவில்லை
ஆகவே தான் அந்தக் கருப்பு இரவிலும்
கேட்டபடியிருந்தார்
" ஏம்பா, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கள்ல ?"

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

பசிக்கு மரணத்தையா உண்ணத் தருவது ?

பசிக்கு மரணத்தையா
உண்ணத் தருவது ?
ஆதிவாசி என்றொரு
சொல்லுக்குள் அடங்கி விடுபவனா மது ?
எத்தனை ஆண்டுகாலப் பசியை
எத்தனை ஆண்டுகாலக் கொடுமையை
ஆதிக்கத்தின் ஆணவத்தை
ஒரே பார்வையில் உரக்கச் சொல்லிவிட்டாய் மது
உனது வனத்தைத் திருடிக்கொண்டு
உனது உணவைத் திருடிக்கொண்டு
உனது இருப்பிடத்தைத் திருடிக்கொண்டு
உனது வாழ்வைத் திருடிக்கொண்டு
உனக்குப் பசியைப் பரிசளித்தோம்.
பசிக்கு நீ திருட திரும்ப எப்படி அனுமதிப்போம் ?
ஆனாலும்
உன்னைக் கொல்லும் கணத்தில்
இப்படிப் பார்த்திருக்கக் கூடாது நீ
பார்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
எங்கள் மனசாட்சியை
இப்படி
வெறித்துப் பார்த்து
வெறித்துப் பார்த்து
உலுக்கித் தொலைப்பாயோ ...செய்தி :

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள கடுகுமண்ணா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மது (27). அந்தப் பகுதி கடைகளில் புகுந்து திருடியதாக அவர்மீது வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், சமீபத்தில் ஒரு கடையில் நடந்த திருட்டு தொடர்பாகச் சந்தேகப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் காட்டின் உள்சென்று அந்த இளைஞரை சிறைபிடித்ததுடன், அவரை நகர் பகுதிக்கு அழைத்து வந்த பொதுமக்கள் அவரின் உடைமைகளைச் சோதித்தனர். 
ஒருகட்டத்தில் அவரின் கைகளைக் கட்டி அடித்த பொதுமக்கள் பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காவல்நிலையம் அழைத்து சென்றபோது போலீஸ் வாகனத்தில் இளைஞர் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவர் பாதியிலேயே உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மதுவை அடித்துக் கொன்றதுடன் அச்சமயம் அதை தற்படம் எடுத்தும் மகிழ்ந்திருக்கிறார்கள் .. கொடுமை


ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

நான்

உங்கள் காதுகளில்
மிக ரகசியமாகச்
சொல்லப்பட்டிருக்கலாம்.
நான் சாத்தானின்
சிற்றுருவென.
எனது கொம்புகளை
ஒளித்து வாழ்கிறேனென
எப்போதேனும் எதிர்ப்படுகையில்
நீங்கள் ஒரு முறை
கை குலுக்கிப் பாருங்கள்
கட்டியணைத்தும்
ஒரு முத்தமிட்டும்
எதிர் நின்றொரு புன்னகைத்தேனும்
பாருங்களேன்
பிற்பாடு மனமுவந்து அந்த ரகசியத்தை
நீங்கள் ஒரு சாக்கடையில்
எறிந்து விட்டு வரும் வழியில்
போலியற்ற உங்களுக்கான
எனதன்பைக்
கண்களில் தேக்கிக் காத்திருப்பேன்
உங்கள் ப்ரியத்துக்குரிய
வளர்ப்பு விலங்கைப் போல


தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருது

தேனியில் இயங்கி வரும் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின்
சிறந்த இலக்கிய செயல்பாட்டாளருக்கான எச்.ஜி.ரசூல் நினைவு விருது எனக்கு வழங்கப்பட்டது..

கடந்த 03.02.2018 அன்று தேனியில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் ரோஹிணி அவர்களும் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களும் இணைந்து இந்த விருதை
எனக்கு வழங்கினர்.


உடன் விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மேடைக்கு நன்றி

திங்கள், 1 ஜனவரி, 2018

சென்றுவா 20172017 நகர்ந்துவிட்டது 2018 பிறந்துவிட்டது

எத்தனை அனுபவங்கள், எத்தனை படிப்பினைகள், எத்தனை புன்னகைகள், எத்தனை கண்ணீர்த்துளிகள் என ஒவ்வொரு நாளையும் பரமபதமென விளையாடிப்போயிருக்கிறது இந்த ஆண்டு. சில ஏணிகள், சில பாம்புச் சறுக்கல்கள். ஆயினும் ஆட்டம் முடியவில்லை.

2017 பல மகிழ்ச்சிகரமான நாட்களை அளித்தது. ஆனால் அத்துணை மகிழ்ச்சியையும் துளியேனும் அனுபவிக்கவிடாத அளவுக்கு பேரிழப்பு ஒன்றையும் பெரும் மன வலிகளையும் நிறையத் தந்துவிட்டிருந்தது.

2016ல் வெளியான எனது கவிதைத் தொகுப்பான " ஆதிமுகத்தின் காலப்பிரதி " கவிதை நூலுக்காக மூன்று விருதுகளும் 2017ல் கிடைத்தன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, நாங்கள் இலக்கியகத்தின் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் விருது ஆகிய விருதுகள் கிடைத்தன. தேனியில் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் வளரும் படைப்பாளருக்கான விருதும் கிடைத்தது.

இவற்றையெல்லாம் பெறுவது மகிழ்ச்சி ஆனால் கொண்டாடினேனா என்றால் இல்லை. சென்ற ஆண்டின் துவக்கத்திலேயே சற்றும் எதிர்பாராது எங்கள் குடும்பத்தின் ஆணிவேரான அப்பாவை இழந்துவிட்டேன். இன்று வரைக்கும் அதிலிருந்து முற்றிலும் வெளிவர இயலாமல் தவிக்கிறேன்.

நண்பர்களின் புரிதலின்மையால் விளைந்த பிரிவுகள், சச்சரவுகள் மனச் சங்கடங்களும் இன்னும் சேர்த்து அழுத்தின. யாருக்காக ஓடுகிறோமோ அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. யாரைப் பெரிதும் நம்புகிறோமோ அவர்கள் வேறு முகங்களைக் காட்டினர் இப்படி எல்லாமே இழப்பு. எல்லாமே வலி.

பெரிதாக எதுவும் எழுதவில்லை, எதுவும் வாசிக்கவில்லை. வேலைப்பளுவும், மனத்தடையும் வேதனைகளும் சேர்த்து அழுத்தின.

முகநூல் பக்கம் வருவதில்லை. எப்போதாவது வந்தாலும் நண்பர்களுக்குப் பிறந்தநாள் பதிவு போட்டுவிட்டு சென்றுவிடுவது. இப்படித்தான் கழிந்தது.
முகநூலில் என்னை விமர்சித்து வந்திருந்த பதிவுகளைக் கூட நான் பார்க்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து தோழர்கள் சொன்ன பிறகு பார்த்தேன். சிரிப்பு வந்தது. நான் நம்பிய, நான் உதவிய , நான் விரும்பிய நண்பர்கள் கூட என்னை இப்படி நினைக்க முடியுமா என்ற விரக்தி மட்டும் மிஞ்சியது. அது தொடர்கிறது. எனது எண் இருக்கிறது எப்போது அழைத்தாலும் எடுக்கிறேன். அழைத்துப் பேசியிருந்தால் உண்மை தெரிந்திருக்கும் என்பதை நினைக்காமல் நான் பிழை செய்திருக்கக் கூடும் என்ற தவறான அனுமானத்தில் என்னை விமர்சிக்கும் யாருக்கும் என்னிடம் எந்த பதிலும் இல்லை. அவர்களுக்கும் சேர்த்து தான் நான் அன்பு செய்கிறேன்.


எப்போதும் தனிமையை விரும்புபவன் நான். அது ஒரு சுகத்தைத் தந்து கொண்டிருந்தது. ஆனால் சமீப நாட்களாக தனிமைக்கு பயப்படுகிறேன். அது மேலும் என்னை வதைக்கிறது. அது என்னை என் நினைவுகளை வைத்தே அழுத்திக் கொல்கிறது.

நிறைய நல்ல நண்பர்களை விட்டு விலகி இருந்திருக்கிறேன். யாரிடமும் பேசுவதில்லை. ஒரு மாதிரியான அழுத்தங்களும் சதா சர்வகாலமும் ஊசிக் குத்தலாய்க் குத்தும் இழப்புகளின் நினைவுகளுமாகவே கழிந்தது இந்த ஆண்டு. ஆனாலும் என்னை, எனது நிலையைப் புரிந்து கொள்ளும் நண்பர்கள் எப்போதும் போலவே அணைத்துக்கொள்கிறார்கள்.

இத்தனை வலிகளிலும் இருந்து தப்பிக்கொள்ளவும் சதா சர்வ காலமும் ஒரே ஒருத்தியின் சின்னஞ்சிறு ஒளிநிழலில் குறுகிப் படுத்துக்கொண்டேன்.
அவளுடனே எனது பொழுதுகள் அதிகம் கழிந்தன. பேசுவது, கதை கேட்பது,பாடல் கேட்பது, வெளியில் எப்போதாவது செல்வது என்பது தான் எனக்குக் கிடைத்த ஆறுதல்கள்.

சென்ற ஆண்டின் நிறைய நேரம் குடும்பத்துடன் செலவு செய்ய முடிந்தது. இலக்கிய வட்டப் பணிகளில் தொடர்ந்து வேகம் குறையாமல் இருக்க முடிந்தது. அது தான் கொஞ்சம் நிம்மதி.

சென்ற ஆண்டின் மனத்தடைகளிலிருந்து வெளிவர வேண்டும். இன்னும் சிறப்பாக இயங்க வேண்டும். எழுதவும் வாசிக்கவும் வேண்டும்


நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அன்பின் நிமித்தம் ...

கொலுசு மின்னிதழில் கவிஞர் மு.அறவொளி அவர்கள் எனக்கு போதித்தவர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதி வருகிறார். ஒவ்வொரு மாதமும் தன்னை பாதித்த மனிதர்களைப்பற்றிய பதிவுகளைப் பதிந்து வருகிறார்.

இந்த மாதம் அந்தப் பகுதியில் என்னைப் பற்றிப் பதிவு செய்துள்ளார்.
பகிர்கிறேன் இங்கு ...


அன்பின் நிமித்தம் நடைபெறும் அத்துணை செயல்களும் அன்பையே விதைக்கின்றன.

நன்றி திரு.அறவொளி அவர்களுக்கு.

இந்த உறவு நீளட்டும்

கொலுசு மின்னிதழில் வாசிக்க :

http://kolusu.in/kolusu/kolusu_dec_17/mobile/index.html#p=3