திங்கள், 17 நவம்பர், 2014

கோடிக் கணக்கில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் குழந்தைகள்...

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடி முடித்த கையோடு இந்த அதிர்ச்சியான தகவல்கள் நம் அடிவயிற்றில் நெருப்பள்ளிப் போடும்...

தர்மபுரி அரசு மருத்துவமனையில் இது வரை ஒன்பது பச்சிளம் குழந்தைகள் காரணம் தெரியாமல் இறந்திருக்கின்றனர்.. இந்த நிமிடம் வரை அரசு தரப்பிலிருந்து பெரிதாக யாரும் இதைப் பற்றிப் பேசவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை என்பது மழலைகளின் மரணத்தை விடவும் வேதனையானதல்லவா. இந்நேரம் , தமிழ் நாட்டின் முக்கிய குழந்தைகள் மருத்துவர்களின், ஆய்வர்களின் குழு அங்கு குவிந்திருக்க வேண்டாமா. Root cause எனப்படும் அடிப்படைக் காரணத்தைச் சரியாக உடனடியாகக் கண்டுபிடித்து அதைச் சரி செய்வதின் மூலம் மேலும் பல மரணங்களை உடனடியாகத் தடுத்துவிட வேண்டும் அல்லவா. அதை விடுத்து, அறிக்கை விடுவதும், கடிதம் அனுப்புவதும், ஜால்ரா தட்டிக் கொண்டும் என அரசு படு மோசமான மெத்தனத்துடன் இருப்பது ஒரு வித அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. பெரிய தனியார் மருத்துவமனைகளில் பார்க்க வசதியில்லாதவர்கள் ( சிறிய மருத்துவமனைகளில் கூட பிரசவம் பார்க்க சொத்தில் பாதியை விற்க வேண்டும் என்பது தனிக் கதை ) அரசு மருத்துவமனைகளை நம்பி வருகிறார்கள். குழந்தைகளை இழந்துவிட்டு, அதற்கான காரணமும் தெரியாமல் பரிதவித்து நிற்கும் ஏழைப் பெற்றோர்களுக்கு என்ன பதில் இருக்கிறது அலட்சியமான அரசு மருத்துவர்களிடமும் அரசிடமும்..?

குழந்தைகள் பிறந்து இறந்தது பெரிய சோகம் எனில், பிறப்பதற்கும் முன்பே குழந்தைகளை நாம் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர கீழ்க்கண்ட செய்தியை வாசித்துவிட்டு வாருங்கள்...



ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஒண்ணே கால் கோடி சிசுக்களை நசுக்கி அழிக்கிறோம் என்பதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

எனக்கு நிறையத் தம்பதிகளைத் தெரியும், ஒரே ஒரு குழந்தையின்றி திருமணமாகி பல ஆண்டுகளாகியும் அழுது, தொழுது ஆற்றிக் கொண்டிருப்பவர்களை.

ஒவ்வொரு மாதமும் மாத விலக்கு ஆன நாளின் இரவில் தனியறையில் கதறி அழும் மனைவியையும் அவளைத் தேற்ற முடியாமல் சமயங்களில் கூட அழுதும், விரக்தியாகிக் கத்தியும் ஆற்றாமல் இருக்கும் கணவர்களையும் தெரியும்.


இவர்கள் குழந்தை வரம் வேண்டிப் போகும் மருத்துவமனைகளில் தான் இவர்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் கருவிலேயே குழந்தைகளைக் கொலை செய்யச் சொல்லி மனுப்போட்டுக் காத்திருக்கின்றனர்.

மருத்துவர்களும் சும்மா போனவுடன் வாங்க என்று கலைத்துவிடுவதில்லை, நிறையக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், நடைமுறைகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், இவற்றுக்குப் பயந்து மருத்துவமனைக்குப் போகாமல் வெவ்வேறு வழிகளில் தங்கள் கருக்களை அழித்துவிடுபவர்கள் இந்தக் கணக்கில் சேரமாட்டார்கள்.

இத்தனை கோடிக் குழந்தைகளைக் கொல்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும், இருப்பினும் வரும்முன்னர்க் காக்க நிறைய வழிகளிருந்தும், வந்த பின்னர் , அதுவும் வளர்ந்த பின்னர் அழிப்பது எத்தனை வேதனையானது. செயற்கையான முறையில் கருவைக் கலைப்பதனால், பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆண்டாண்டு காலங்களுக்கு ஆபத்து உண்டு என்று மருத்துவ உலகம் சொல்லிக் கொண்டிருந்தாலும் இந்த எண்ணிக்கை குறைந்தபாடில்லை..

எனக்கு ஒரு அக்கா அறிமுகம் ஆனார்கள், அவர்களது கதை பெரும் சோகக் கதை, திருமணமாகி ஐந்தே மாதங்களில் கர்ப்பம். ஆனால் கணவனை விட்டு மனைவி மட்டும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும்படி சூழல், கருக்கலைத்துவிட்டார்கள். ஒரு வருடத்தில் திரும்ப வந்துவிட்டார்கள், பின்னர் சரியாக ஒன்பது வருடங்களாகக் குழந்தை இல்லை. எப்படித் துடித்திருப்பார்கள்..? பிறகு நிறைய வைத்தியத்தின் உதவியால் ஒரு குழந்தை கிடைத்ததால் அவர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டார்கள்.

மிகச் சமீபத்தில் இரண்டு வாரம் முன்பு, பக்கத்து கிராமத்தில் நடந்த சம்பவம், 19 வயதுப் பெண் அவள். அருகிலிருக்கும் மில்லுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தவள். திடீரென ஒரு நாள் விஷமருந்தி இறந்து விட்டாள். வீட்டிலேயே இறந்திருந்தால் என்ன ஏது என்று கூடத் தெரிந்திருக்காது, அவளது நேரம் இழுத்துக் கொண்டிருக்கிறாள் என்று மருத்துவமனைக்குக் கூட்டிப் போயிருக்கிறார்கள் பிரயோஜனமில்லை. அங்கு தான் மிகப்பெரிய அதிர்ச்சியை அவர்கள் உடைத்திருக்கிறார்கள். இறந்த பெண் ஆறு மாதக் கர்ப்பமாம். வீட்டுக்குத் தெரியவேயில்லை. ஒல்லியான உடல்வாகுள்ள பெண் என்பதால் தெரியாமல் இருந்திருக்கலாம். பிறகு காவல்துறையிடம் செல்ல, அவளது செல்பேசியை ஆராய்ந்ததில் அவள் இறப்பதற்கு முன்னர் பல முறை ஒரே எண்ணில் பேசியிருக்கிறாள். அது திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் ஒரு ஆணின் எண். இப்போது அவனைக் கைது செய்திருக்கிறார்கள்.

கருக்கலைப்பு என்பதும் ஒருவகைக் கொலைதான் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதன் பின் விளைவுகளை நாம் பூதக்கண்ணாடியின் மூலம் பெரிதாக்கி விளக்கியே ஆகவேண்டும். கொத்துக் கொத்தாக இத்தனை உயிர்களை ஆண்டுதோறும் கொல்வதைக் குறைத்து விட வேண்டும்.

பாலியல் கல்வியின் ஒரு பகுதியாகவே இதைக் கருதலாம். பாலியல் கல்வியை நமது சூழலில் கொண்டுவர இயலாத அல்லது இன்னும் நாட்கள் பிடிக்கும் நிலையில் கருக்கலைப்பு, பாலியல் நோய்கள் போன்ற முக்கியமான விஷயங்களையாவது சிறப்பு வகுப்புகளின் மூலம், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிலிருந்தே சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம். அது ஒரு விழிப்புணர்வைத் தரும்.



வேறென்ன சொல்ல , வெறுப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

வெள்ளி, 14 நவம்பர், 2014

குழந்தைகள் தின வாழ்த்துகள் ... குழந்தைகள் அழகாக்குகிறார்கள் அசூயையான இந்த வாழ்க்கையை


பெரியவளானதும் மருத்துவராக வேண்டும் என்பதே மகளின் கனவாம். கரப்பான்பூச்சிக்கு பயந்து கத்திய நாளில் அம்மா கேட்டார்; இதற்கே பயந்தால் எப்படி மருத்துவராவது. பதினொன்னாம் வகுப்பிலேயே கரப்பான் பூச்சி, தவளையெல்லாம் அறுத்துப் பழக வேண்டும் என்று. அரண்டு போன மகள் எதற்கெனெக் கேட்டாள். மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான பயிற்சி. உதாரணத்துக்கு மனிதனின் வயிற்றில் கட்டி என்றால் வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்துவிட்டு மீண்டும் தைக்க வேண்டும் என்ற போது, என்ன தைக்க வேண்டுமா ஊசி, நூல் வைத்தா என்று சிரித்தபடியே கேட்டாள். ஆமாம் அதற்கென்று தனியா ஊசி நூல் இருக்கு என்றேன். அப்ப அதை வாங்கிக் குடுங்க. முதல்ல துணில தச்சு பழகறேன் என்று சிரித்தபடி ஓடினாள். வாங்கிக் கொடுத்தால் எதாவதொரு பொம்மைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்து விடுவாள் வழக்கம்போல …


அவமானப்படுவதும் பல்பு வாங்குவதும் அப்படி ஒன்றும் புதிய காரியமோ அல்லது ஆச்சர்யமான நிகழ்வோ அல்ல நமக்கு (என்னைச் சொன்னேன் )..

அன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை என்பதால் ஒன்பது மணிவரை தூங்கிவிட்டு எழுந்து பார்க்கும் போது படுக்கைக்கு அருகில் மடிக்கணினியில் மகள் விளையாடிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் கண்களை மூடிப் படுத்துவிட்டு மீண்டும் விழித்துப்பார்த்தால் விளையாடிக் கொண்டுதானிருந்தாள். “ பாப்பா, ரொம்ப நேரம் மடியில வச்சு விளையாடக் கூடாது, டெஸ்க்ல வச்சு விளையாடு என்றேன் " ஏம்பா" என்றாள் அப்பாவியாக, " லேப்டாப் ல ரொம்ப சூடு வரும் அது உடம்புக்கு நல்லது இல்லை " என்றேன். “ ஏம்பா, லேப்டாப்புனாலே லேப் ல வச்சு வேலை செய்றதுக்குத்தான..? அதுக்குத்தான இதை டிசைன் பண்ணி இருப்பாங்க?” என்று சொல்லிவிட்டு சிரித்தாள், சிரித்தாள், பெரிதாகச் சிரித்தாள். சமையலறையிலிருந்து இன்னொரு சிரிப்புச் சத்தமும் சேர்ந்து வந்தது துணைக்கு. விடுமுறை நாளை முன்னிட்டு இந்த பல்பு நமக்குத் தேவைதான் என்று நொந்தபடி திரும்பிப் படுத்துக் கொண்டான் பூபாலன்.


ஒருமுறை தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம், உருக்கமான காட்சி. இந்த மாதிரிக் காட்சிகளுக்கெல்லாம் மனைவி எப்போதும் தாரை தாரையாக அழுது விடுவாள். அன்றும் அப்படித்தான் கன்னம் வரைக்கும் கண்ணீர் வடிய மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். நானும், மகளும் பார்த்து விட்டோம். நாங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டோம் அவளைப் பார்த்து. மகள் சொன்னாள் " ஏம்மா, நடிப்பு தான மா, இதுக்குப் போய் இப்படி அழறிங்களே என்று" மனைவி " ஆமா, உனக்கும் உங்க அப்பாக்கும் தான் கல் மனசு எனக்கு மென்மையான மனசு " என்று சீண்டிவிட்டுப் போய்விட்டாள்.

யோசிக்கிறேன் மகள் கொஞ்சம் மெச்சூர்டு, ஆனால் வயதுக்கு மீறிய மெச்சூர்டா என்று. நான் இந்த வயதில் இது மாதிரிக் காட்சிக்கெல்லாம் நெகிழ்ந்து அழுது கொண்டுதான் இருந்தேன். இவளுக்கு நெகுழும், இரங்கும் குணம் இருக்காதோ என்று கூட அச்சமானது.

சில நாட்கள் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். செடிக்கு, நாய்க்கு, பிச்சைக்காரர்களுக்கு, பென்சில் கேட்ட சக தோழிக்கு, தின்பண்டம் பகிரக் கேட்ட தோழர்களுக்கு என எல்லார்க்கும் இரங்கித் தான் போகிறாள். மேலும் நாம் வேண்டுமென்றே யாரிடமாவது எரிந்து விழுந்தால், கேள்வி கேட்கிறாள். சமாதானமாகிக் கொண்டேன். கு.விநாயகமூர்த்தியின் ஒரு கவிதை வரிகளைப் போல என் வயதில் சிறுவர் கூட்டம் ஒரு திரைப்படத்தில் இறந்து போனவன் இன்னொரு திரைப்படத்தில் எப்படி உயிருடன் வந்தான் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தது, இப்போதைய குழந்தைகள் சிம்ரனுக்குக் குரல் கொடுப்பது சின்மயி என்பது வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

மாற்றங்கள் குழந்தைகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன..


பென்சில் சீவித் தர்றீங்களாப்பா ? என்று பாசமாகத்தான் கேட்டாள் இரவு 9 மணிக்கு. சரி என்று அமர்ந்தேன் சம்மணம் போட்டு. பவுச், டஸ்ட்பின், ஷார்ப்னர் எல்லாம் அவளே கொண்டு வந்து கொடுத்துவிட்டு கன்னத்தில் கைவைத்து அருகில் அமர்ந்து கொண்டாள்.

சீவுகிறேன் சீவுகிறேன் சீ....வி....க்... கொண்டே இருக்கிறேன். 24 கலர் பென்சில்கள், இரண்டு பென்சில்கள் சீவி சீவி கையே வீங்கிவிட்டது. ஒரு முறை சீவியிருந்தால் ஒன்றும் பெரிதாக இருந்திருக்காது, ஒவ்வொரு பென்சிலையும் இரண்டு மூன்று முறைகள்... ஏன்..? ஒருமுறை சீவியதும்.. “ அப்பா இன்னும் கொஞ்சம் ஷார்ப்பா என்பாள்.. இன்னும் கொஞ்சம் ஷார்ப் பண்ணும்போது உடைந்து விடும்... அவ்வ்வ்..... சாப்பிட்ட ரெண்டே ரெண்டு தோசைக்கு இவ்வளவு வேலை செஞ்சுட்டேன்.... முடியல..

# ஆமா, நான் படிக்கும்போது 12 கலர் பென்சில் தான இருந்துச்சு, எப்போ , எவன் 24 கலர் கண்டு பிடிச்சது...?????


நாளை குழந்தைகள் தினம் பாதி நாள் தான் பள்ளி என்று சந்தோசமாய்ச் சொன்னாள். குழந்தைகள் தினம் என்றால் என்ன என்று தெரியுமா எனக்கேட்டேன். நேரு மாமாவின் பிறந்த நாள் என்று சொல்லி அசரடித்தாள். அத்தோடு நிறுத்தியிருக்கலாம் என்னிடம் வழக்கம் போலவே கேள்வி கேட்டு வைத்தாள், ஏம்பா நேரு மாமாக்குக் குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும் அதனால அவர் பர்த் டே குழந்தைகள் தினமாக் கொண்டாடறோம், அப்படினா அப்துல் கலாம் சாருக்கும் குழந்தைகள் னா பிடிக்கும்ல, உங்களுக்கு, அப்புறம் நம்ம குழந்தைகள் கலைக் கொண்டாட்டத்துக்கு பொள்ளாச்சி இலக்கியவட்டத்துக்கு வந்த குமார்ஷா மாமா, ராம்ராஜ் மாமா, இனியன் மாமா எல்லாருக்கும் குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும்ல.. அவங்க பர்த்டேவ கொண்டாட மாட்டாங்களா...?

செம... இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் வரலாறு படிக்கல , ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன்.


பாரதியை ப்ரீ.கேஜி சேர்த்துவிட்ட புதிது, ஒரு நாள் வயிறு வலிக்கிறது என்று மிஸ்ஸிடம் போய் சொல்லியிருக்கிறாள். மிஸ் வயிறு வலிக்குது செல்போன் தாங்க எங்க அப்பாக்கு ஒரு போன் பண்ணிக்கறேன் என்று மிஸ் சிரித்துக் கொண்டே அப்பா உன்னை அழைத்துப்போக இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று சொல்லி இருக்கிறார். இவள், சரி போன் குடுங்க ஒரே ஒரு மெஸ்ஸேஜ் மட்டும் அனுப்பிக்கறேன் என்று சொல்லி இருக்கிறாள்.

போன பிறகு, மிஸ் இதைச் சொல்லிச் சொல்லி சிரித்தார்...






திங்கள், 10 நவம்பர், 2014

காதல் காதல் காதல், காதல் போயின்..?

நான் இதை எழுதலாமா என்று தெரியவில்லை.. பல முறை யோசித்துவிட்டுப் பதிகிறேன். கொஞ்சநேரமாக எனக்கு நானே சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை தினம் தினம் நமக்கு எத்தனை விசித்திரமான அனுபவங்களைத் தருகிறது.

சனிக்கிழமையன்று மகளுக்கு கேக் ஷாப்பில் சாப்பிட வாங்கித் தந்துவிட்டுக் கிளம்பும் போது எதிரில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். எனக்கு ரொம்பக் குழப்பம், மறதி என் மகாப் பலவீனம். யோசித்து ஒரு நிமிடம் குழம்பினேன் யாரென்று ஞாபகம் வந்து விட்டது அதற்குள் அவளே "அண்ணா நல்லா இருக்கீங்களா , என்னை ஞாபகம் இருக்கிறதா , இது உங்க பொண்ணா" என்று கேட்டாள். "ஆம்" என்றேன், அவளது கன்னத்தைக் கிள்ளிவிட்டு, தான் இப்போது ஆசிரியராகப் பணிபுரிவதாகவும், தனக்கு ஆறு மாதத்துக்கு முன்னர் தான் திருமணமானதாகவும் சொன்னாள். பார்த்தாலே தெரிந்தது. போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பிவிட்டேன்.

ஆம், இன்னும் எதற்குச் சிரித்துக் கொண்டிருக்கிறேன்...?

அதிகமில்லை இரண்டு வருடங்களுக்கு முன் தான் அவளைச் சந்தித்தேன். நன்றாகக் கவிதை எழுதுவாள், அழகாக ஓவியம் வரைவாள். ஒரே ஒரு முறை சந்திப்பு, பின்னர் இரண்டு முறை கவிதைகளாகக் கொஞ்சம் உரையாடல். நான்காம் முறை பேசியது அவள் என்னைப் பார்க்க வந்த போது. இந்தமுறை அவளிடம் ஒரு கடிதம் இருந்தது. என்னைப் பிடித்திருப்பதாக நேரடியாகவே சொல்லிவிட்டாள். நான் பதட்டப் படாமல் அவளிடம் செல்போனிலிருந்த எனது குழந்தையின் படத்தைக் காட்டிவிட்டு கொஞ்சம் தத்துவம் பேசினேன். தேம்பி அழுதாள். ரொம்பப் பாவமாக இருந்தது. நான் மிகப் பெரிய தவறு செய்ததைப் போல குற்ற உணர்ச்சி வந்தது. இரண்டு முறை பேசி இருக்கிறேன், இரண்டு முறையும் நான் கவிதைகளைப் பற்றியும், அவளது கல்லூரியைப் பற்றியும் மட்டுமே பேசினேன், வேறெதுவுமில்லை. அது கூடத் தவறுதானோ, அப்பொழுதே என் குடும்பத்தைப் பற்றி வலியச் சொல்லி இருக்க வேண்டுமோ என்று கூட நினைத்தேன். அந்தக் கடிதத்தில் நல்ல ஒரு கவிதை இருந்தது. இதுமாதிரியான கடிதங்களைப் பத்திரப்படுத்துவேன் ஏனோ இந்த முறை அவளிடமே கொடுத்து விட்டேன்.


அவள் அழுததற்கும், புலம்பியதற்கும் நான் ரொம்ப பயந்தேன். அடுத்த முறை அவளை நான் பார்க்கவே இல்லை. ஒரே முறை அழைத்து நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு வைத்துவிட்டாள். அதன்பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். நான் இல்லை என்றால், உலகமே இல்லை என்பது மாதிரிப் பேசியவள் இப்போது முதல் வார்த்தையிலேயே அண்ணா என்று அழைத்ததும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இன்னும் சிரிப்பாக வருகிறது.

ஒன்றும் பெரிய விஷயமெல்லாம் இல்லை என்றாலும், எனக்கென்னவோ சிரிப்பாக வருகிறது.

நாகராஜ் எவ்வளவு பெரிய காதலன், ஏனோ அவனது நினைவு வருகிறது. அப்போது ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறோம், அடிக்கடி என் வீட்டுக்கு வருவான். அப்போது என் வீட்டில் தோழியின் பெயர் எழுதிய வாழ்த்து அட்டையைப் பார்த்துவிட்டான். அவள் என்னோடு ஏழாம் வகுப்பிலிருந்து படிக்கிறாள், எனக்கு நெருக்கமான தோழி. இவன் என்னோடு ஒன்பதாம் வகுப்பில் இணைந்து நெருக்கமானவன். அந்த அட்டையை நான் தர மறுத்தபோதும் ஆசை ஆசையாகக்கேட்டு வாங்கி வைத்துக் கொண்டான். உருகி உருகி இரண்டு வருடங்கள் அவளைக் காதலிப்பதாகக் கூறினான். அவளுக்கு பாசி, பொட்டு என நிறைய வாங்கிக் கொண்டு வந்து தருவான். அவளும் மறுப்பே சொல்லாமல் " தாங்க்யூ பாய்ஸ்" என்று சொல்லி வாங்கி வைத்துக் கொள்வாள். பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் கடைசி நாளில் எல்லோரும் பேசிக் கொண்டதோடு சரி, அவள் கிளம்பி விட்டாள். இரண்டொருமுறை இவன் அவளைப் பார்க்கப் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருப்பான் அதன் பின் அவ்வளவுதான். கல்லூரியில் படிக்கும்போது ஒருத்தியைக் காதலித்ததாகவும் ஏமாற்றி விட்டதாகவும் புலம்பியிருக்கிறான் பேருந்தில் சந்தித்த ஒரு மாலையில். பின்பும் வேலை கிடைக்கும் முன்னரே அவனது உறவுக்காரப் பெண்ணைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போய்த் திருமணம் செய்து கொண்டான், ஒரு குழந்தை. வீடு சமாதானமாகி, மனைவியுடன் பிரச்சினையில் பிரிந்திருந்து சமாதானமாகி நல்ல வேலை கிடைத்து சில நாட்களில் பெருவிபத்தொன்றில் பறிபோய்விட்டான்.

கிரியும் இதே வகைதான், பத்தாம் வகுப்பில் எனக்கு ராக்கி கட்டிய தோழியை அவன் காதலித்துக் கொண்டிருந்தான், நண்பா என்று அழுத்தமாகக் அழைத்துக் கொண்டிருந்த நல்ல நண்பன், அதன் பின்பு மச்சான் என்று என்னை அழைக்கத் துவங்கியிருந்தது கொஞ்சம் அசெளகரியமாகவே இருந்தது. அவன், காம்பஸில் கையில் குத்தியே அவளது பெயரை ரத்தம் சொட்டச் சொட்ட ஒருமுறை எழுதி வைத்திருந்தான். இப்போதும் அவளை அவளது கணவனோடு அவ்வப்போது பார்க்கிறேன், பத்தாவதுக்குப் பின் கிரியைத்தான் பார்க்கவே இல்லை ஒருமுறை கூட. இப்போது ஐஸ்கிரீம் பார்லரும் மளிகைக் கடையும் வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்றும் இப்போதெல்லாம் கவிதைகள் எழுதுவதில்லை என்றும் கேள்விப்பட்டேன்.

கலாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், நான் ஏழாம் வகுப்பில் என்ன சொன்னாலும் கைதட்டுவாள், பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கும் போது கை குலுக்கி ( இது எனக்கு ஆச்சர்யம் அப்போது ) வாழ்த்துச் சொல்லுவாள். நான் தவறுதலாக வருகைப் பதிவேட்டில் சதீஸிற்கு ப்ரசன்ட் போட்டதற்கு ஊழல் செய்து விட்டதாகச் சொல்லி ரெப்ரசன்டேடிவ் பதவியைப் பறிக்க ஆசிரியர் திட்டியபோது , பூபாலன் அப்படிச் செய்ய மாட்டான் சார் என்று முதல் எதிர்க்குரல் கொடுத்தவள்.

பள்ளியில் ஆண்டுவிழா. நான் ஒரு நாடகத்தில் நடிக்க மீசையெல்லாம் வரைந்து மேடைக்குப் பின் நின்று கொண்டிருந்தேன். அப்போது அருகில் வந்து தன் கையைக் காட்டினாள், எனது பெயரைப் பச்சை குத்தியிருப்பதாக. அழுதுவிட்டேன் நிஜமாலுமே. ஏன் இப்படிச் செய்த உங்க அப்பாக்குத் தெரிஞ்சா எங்க அப்பாகிட்டச் சொல்லி பிரச்சினை ஆயிடும் என்று சொன்னேன். அவள் எதோ சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். நான் பயந்து பயந்து நாடகத்தில் நடித்து விட்டு வீடு வந்தேன். இரவெல்லாம் அவளுடைய அப்பா பிரம்பால் என்னை அடிப்பது போலவே கனவு. இரண்டு நாட்கள் விடுமுறை. திங்கட்கிழமை பயந்து கொண்டே பள்ளிக்குப் போகிறேன். வழக்கம் போலவே அவள் வருகிறாள், மிகச் சாதாரணமாகப் பேசினாள். கையைப் பார்க்கிறேன் வழக்கம் போலவே வெள்ளையாய் இருக்கிறது. பச்சை எங்கே என்று கேட்டால், பச்சையா, அது கறுப்பு பேனாவில் எழுதினது, ராத்திரி நேரம் உனக்குக் கண்ணு தெரியாதுனு தெரியும் அதான் ஏமாற்றினேன் என்று பழிப்புக் காட்டினாள். அப்போது என் முகத்தில் இருந்தது அழுகையா, சிரிப்பா என்று தெரியவில்லை. அந்தப் பள்ளியிலேயே எட்டாம் வகுப்பு வரைக்கும் டவுசரில் போனது நான் ஒரே ஒருவன் தான். என் கிட்ட போய்....


கல்லூரி நாட்களில் இப்படி ஒரு சம்பவத்துக்கும் ஆட்பட்டது இல்லை, எங்களது வகுப்பில் மூன்றே முன்று பெண்கள். அவர்களுடன் நான் பேசியது இறுதியாண்டில் பிரிவுபசாரவிழாவில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தபோது தான். கல்லூரியிலிருந்து திரும்பும் போது தினமும் ஒரு தனியார் பேருந்தில் தான் வருவோம், சக மாணவர்களும், சீனியர்களும் முன் இருக்கைகளில் தோழிகளுடன் பேருந்தே வேடிக்கை பார்க்கும் படிப் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வருவார்கள், நானும் மோகனும் கட்டக் கடைசியில் ஆறு பேர் அமரும் இருக்கை இருக்குமே, அதில் சன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு கடலை உருண்டை சாப்பிட்டுக் கொண்டு ( இருவருக்கும் ரொம்பப் பிடித்தது; இப்போது வரைக்கும்) பேசிக் கொண்டு வருவோம் அல்லது தூங்கி விடுவோம். பிறகெங்கே...


அண்ணா என்றழைக்கும் தோழிகளும் சகோதரிகளும் நிறையவே இருக்கிறார்கள். தன்னந்தனியாகப் பிறந்த எனக்கு, யாராவது அதுவும் குறிப்பாக பெண்பிள்ளைகள் அண்ணா என்று அழைத்தால் பாசம் பொங்கிக் கொண்டு வந்துவிடும் நிஜமாலுமே. இனியும் அப்படியே என்னை வைத்திரு கடவுளே ...

( இதில் வரும் ஆண் நண்பர்களின் பெயரெல்லாம் உண்மைதான், பெண் தோழியின் பெயர்மட்டுமே கற்பனை.. பெயரையும் சொல்லியா மாட்டிக்கறது..? )


புதன், 5 நவம்பர், 2014

இந்தியா ஒளிர்கிறதென்று சொன்னால் நம்பவா போகிறோம்

இந்தியாவின் மானத்தை அவ்வப்போது இப்படிக் கப்பலேற்றுபவர்களையும், விமானத்தில் ஏற்றுபவர்களையும் குறை பட்டு என்ன செய்ய.? பெண்களின் மீதான நமது பார்வையை நாம் எப்படிக் கொண்டுள்ளோம். அதன் குறைபாடுகளைக் களைந்து நமது புத்தியில் சமத்துவத்தையும் நற்பண்புகளையும் வளர்க்கும் பாங்கு நமது கல்வி முறையிலோ அல்லது சமூகச் சூழலிலோ உள்ளதா என்பது விடையில்லாத ஒரு கேள்விதான்.




சென்ற பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்வுகள் குறித்து எதுவுமே எழுதவில்லை நான். நேரமின்மை மட்டுமல்ல காரணம். ஒருவித சோர்வு. ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக நல்ல படைப்புகளை, நல்ல படைப்பாளர்களை, புதிதாக எழுத வருகின்ற நண்பர்களை அனைவருக்கும் அறிமுகப் படுத்த நினைக்கிறோம். நிகழ்வுகளையும், நிகழ்த்துனர்களையும் சரியாகத் திட்டமிட்டுவிடலாம். ஆனாலும், சமயங்களில் நிகழ்ச்சி நாம் திட்டமிட்ட திசையைத் தாண்டி வேறுபக்கம் போய்விடுகிறது.

கவிஞர் கெளதமி சுப்பிரமணியம் அவர்களின் கவிதை நூலை அறிமுகம் செய்த கவிஞர் கீதாப்ரகாஷ், தனது உரையில், நூல் அறிமுகத்துக்கு வெளியே ஆரம்பித்தவர் பாடகர் ஜேசுதாஸ்அவர்களின் ஜீன்ஸ் பற்றிய கருத்துக்கு எதிர்க் கருத்தைப் பதிவு செய்தார். அடுத்தடுத்து வரிசையாக இதைப் பற்றிப் பலர் பேசினார்கள். ஜீன்ஸ் நமது உடையே அல்ல, அது சரியல்ல, கண்களை உறுத்தாத மாதிரி உடுத்த வேண்டும் என்றெல்லாம். நான் ஒரே வார்த்தையில் மட்டுமே அவர்களுக்கு பதிலளித்தேன் உடை அவரவர் சுதந்திரம் என்று.

நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாள் கெளதமியுடன் பேசும் போது அவர் சொன்னது என் மனதை இன்னும் உறுத்தியது. உடையைப் பற்றி இலக்கியக் கூட்டத்தில் பேசியது தேவையற்றது. எனக்கு மிகவும் அசெளகர்யமாக இருந்தது என்றார். ஒருவேளை நான் ஜீன்ஸ் அணிந்து அன்று அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தால் அவர்களின் பார்வை என் மீது எப்படி இருந்திருக்கும் என்றார். சுரீர் என்றது.

உடை நாகரீகமா , கலாச்சாரமா என்ற கேள்வி எனக்குள் உண்டு. கலாச்சாரம் என்றால், கல் தோன்றி முன் தோன்றாக் காலத்தே முதலில் தோன்றிய நமது மக்கள் என்ன உடைகளை உடுத்தியிருப்பார்கள்.? ஏன் அங்கிருந்து நாம் இவ்வளவு தூரம் வந்தோம். நமது பண்பாட்டு உடை சேலையும், வேட்டியும் தானென்றால், சேலை எத்தனை நூற்றாண்டுகளாக நமது உடையாக இருந்தது? அதற்கு முன் நாம் என்ன உடுத்தினோம். அந்த முந்தைய உடையிலிருந்து நாம் சேலைக்கு மாறிய போது இப்படி எதிர்க்குரல்கள் எழுந்தனவா.? இன்று ஜீன்ஸ் நமது விருப்ப உடையாக இருக்கிறது, நாளை நிச்சயம் இது மாறும். வேறொரு உடை நமது தினங்களை நிறைக்கக் கூடும். அதையும் நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.

நண்பரொருவர் சொன்னார், உறுத்தாத மாதிரி உடை அணியுங்கள் என்று கெளதமியின் குரலில் இதைக் கேட்க வேண்டுமானால், இப்படிக் கேட்பேன் " உறுத்தும் அளவுக்கு உங்கள் கண்கள் இருக்கின்றனவா, நான் உங்கள் கண்களைக் குறை சொல்லவா.?” என்று.

உடை ஒரு விவாதப் பொருளானது அன்றைய துரதிர்ஷ்டமே. தொடர்ந்து கொளதமி சொன்ன தகவல்கள் என்னை மனதளவில் வெகுவாகப் பாதித்தன.

அவர் வெளிநாட்டில் இரண்டொரு வருடங்கள் தங்கிப் படித்து, பணி செய்தவர். அங்கு தங்கியிருந்த காலங்களில் இரவு நேரமாகி விட்டாலும் தனியாகவே வீட்டுக்குப் போவாராம். இங்கு அப்படிப் போய்விடமுடியுமா என்று கேட்கிறார். நிர்பயாக்களைச் சிதைத்து விட்டு எந்த முகத்துடன் இந்தக் கேள்விகளை எதிர் கொள்வது. வெளிநாடுகளில் உடை ஒரு பொருட்டே இல்லை, எந்த உடையாக இருந்தாலும் வெறித்து வெறித்துப் பார்ப்பதில்லை என்று சொன்னார். அவருடன், அவரது வெளிநாட்டுத் தோழிகளும் சென்னையில் தங்கி இப்போது பணி புரிகின்றனர். அவரது வெளிநாட்டுத் தோழிகள் இவரிடம் புலம்புகின்றனராம். தனியாகவெல்லாம் வெளியே போக பயமாக இருக்கிறது என்று. ஒரு மாதிரிப் பார்ப்பது, கேலியும் கிண்டலுமாகப் பேசுவது என்று ஆண்களைக் கடந்து போவது இங்குதான் அவர்களுக்கு அந்நியமாக இருக்கிறது என்று.அவர்களுக்கு இவர் என்ன பதில் சொல்லி சமாளித்திருப்பார்.

மேலும், பெண்களே பெண்ணியத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இன்னமுமின்றி இருக்கும் இந்தச் சூழலில், ஆண்களும் பெண்களும் சமம் தான் என்ற புரிதல் வர இன்னும் பல காலமாகுமோ?

நமது தேசம் பெண்களுக்கான பாதுகாப்பற்ற தேசம் எனவும், நமது நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என மேலை நாட்டு மக்களிடம் அந்நாட்டு அதிபர் சொன்னதாகவும் ஒரு செய்தி படித்தேன். எத்தனை வேதனையானது. இன்று உண்மையில் பெண்களை பல வகையிலும் சீரழித்து வருகிறோம் பிறகு பழம்பெருமை பேசி என்ன பயன்.?

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு சமயம் இப்போதெல்லாம் பெண்கள் சடை போடுவதே இல்லை கூந்தலை முடிவது கூட இல்லை அப்படியே விரித்துப் போட்டுத் திரிகின்றனர் என்று குறைபட்டுக் கொண்டார். ஏன் நன்றாகத்தானே இருக்கிறது இதுவும் அவர்களது விருப்பம் தானே என்றேன். முன்பெல்லாம் பெண்கள் வாரிப்பின்னி எப்படி இருந்தார்கள் தெரியுமா என்றார். முன்பெல்லாம் நாமும்தான் சடாமுடியுடனும், தாடியுடனுமே திரிந்து கொண்டிருந்தோம்....?????


எப்போதும் குற்றவாளிகளை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களின் குறைகளையும், தவறுகளையும் சொல்லிச் சொல்லியே குற்றங்களை மறைப்பதும் மறப்பதும் தானே நமது வழக்கம். அப்படித்தான் இத்தேசத்தின் எல்லா நகரங்களிலும் குருதி வாடை வீசுகிறது, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்றித் தவிக்கின்றனர்.

தினமும் செய்திகளில் பள்ளிக் குழந்தைகள் முதல், ஏதாவக்தொரு பெண் நாட்டின் மூலைகளில் சிதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறாள். பெண்வழிச் சமுதாயத்தில் தோன்றிய , பெண் கடவுள்கள் நிறையக் கட்டமைக்கப்பட்டிருக்கிற நம் நாட்டின் இன்றைய போக்கு நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. எதிர்காலம் குறித்த கேள்விகளை நம் முன் விசிறியடிக்கிறது. அறிவியலில், சுகாதாரத்தில், தொலைதொடர்பில் என எல்லாத் துறைகளிலும் நாம் பண்பட்டுக் கொண்டே வருகின்றோம். இருப்பினும் இன்னும் பல இடங்களில் இருண்மைதான் நிறைந்து கிடக்கிறது. வெளிச்சத்துக்கு ஏங்குகிறோம் ….