ஞாயிறு, 17 நவம்பர், 2019

நடுநிசி உலா சிற்றிதழில் எனது ஐந்து கவிதைகள்

பொள்ளாச்சியிலிருந்து நண்பர் குமாரராஜன் நடுநிசி உலா என்ற பெயரில் ஒரு சிற்றிதழைத் துவங்கியுள்ளார் ...

முதல் இதழில் எனது ஐந்து கவிதைகள் வெளியாகியுள்ளன .. உங்கள் வாசிப்புக்கு இங்கு ..

1)

தனது பிரம்மாண்ட மாளிகையின்
உப்பரிகையில் நின்றபடி
தேசத்தின் சகல கோணங்களையும்
பார்வையிடுகிறார் அரசர்
ஒரு தீபாவளித் திருநாளில்

வானெங்கும் வானவேடிக்கைகள்
வண்ண வண்ணமாக
வெடித்துச் சிதறுகின்றன
வலுத்துப் பெய்கிறது
மழை
சாலையெங்கும்
ஊர்ந்து கொண்டிருக்கின்றன ரதங்கள்
தெருக்களில் களிநடனமாடிக்கொண்டிருக்கின்றனர்
மக்கள்
தனது கொற்றத்தின் கீழ்
செழித்து நிற்பதாக தேசத்தைப் பற்றிய
வரலாற்றுக் குறிப்பொன்றை
எழுதி வைத்துவிட்டுப்
புளகாங்கிதப் புன்னகை பூக்கிறார் அரசர்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில்
கருகிய குடும்பமும்
வெள்ளப் பெருக்கில் இழுத்துச்
செல்லப்பட்ட குடிகளும்
ஆழ்துளைக் கிணறொன்றில்
சிக்கிக் கொண்ட
சிறுவனொருவனின் கதறலும்
குடிச்சாலைக்கு வெளியே
அடிபட்டுச் செத்துக் கிடந்தவர்களும்
வழக்கம் போலவே
அவைக் குறிப்பிலிருந்து
நீக்கப்பட்டிருந்தனர்


2)

ஒரு புத்தகத்தை
அதன் நடுப்பக்கத்திலிருந்து
வாசிக்கத் துவங்கினேன்
முன்புறம் ஒரு பக்கம்
பின் புறம் ஒரு பக்கம்
என
இடதும் வலதுமாக
பக்கங்களைப் புரட்டி
வாசிக்க வாசிக்க
எனக்குள் சொற்கள் விரியத் துவங்கின
நானவற்றை வரிசைக்கிரமமாக
அடுக்கிக் கொண்டேன்
இடைவெளிகளில்
கொஞ்சம் முன்காலத்துக் கதைகளை
சொருகிக் கொள்வது நலமென்றானது
முதல் பத்து பக்கங்களையும்
கடைசி பத்து பக்கங்களையும்
நெருங்குவதற்குள்
நிறுத்தம் வந்து விட
அவசர அவசரமாக இப்போது
அந்தப் புத்தகத்தைப் பற்றிய
அறிமுக உரையை
உங்கள் முன் ஆற்றுவது .....

3)

ப்ரியத்தின் இரண்டு
முனைகளும்
எவ்வளவு கூரானவை
நட்ட நடுவில்
அதைப் பற்றிக் கொண்டிருக்கும் வரை
அது நமக்குத் தெரிவதேயில்லை
இந்தப் புறமும்
அந்தப் புறமும்
சற்றே சறுக்கினால் போதும்
பின்பது
ரத்தத்தைப் பார்க்காமல் போகாது

4 )

வகுப்பறை சன்னலுக்கு வெளியே
சாலையில் நடுங்கியபடி
நிற்கிறது ஒரு சிறு விலங்கு
பள்ளி வளாக மரங்களில்
பசியில் கரைந்து கொண்டிருக்கின்றன
காக்கைகள்
நீரின்றி பட்டுப் போய்க்
கிடக்கின்றன தாவரஙகள்

படம் வரைந்து பாகம் குறித்துக்கொண்டிருக்கிறது
பாடம்

5)

நிகழ்காலம் மூன்று நாட்கள்

ஒரு குழந்தையின்
உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்
ஒரு மாணவியின்
வன்புணர்வுக்குப் போராடிக் கொண்டிருக்கிறோம்
ஒரு அநீதியை
ஒரு அதிகார ஆதிக்கத்தை
ஒரு சாதிக் கலவரத்தை
ஒரு அடக்குமுறையை
ஒரு சமூகக் குற்றத்தை

பொறுத்துக் கொள்ளமாட்டாமல்
போராடத் துவங்குகிறோம்
முதல் நாளில் தீயெனத் துவங்கும்
நம் கோபம்
அடுத்த நாளில் கங்கெனக்
கனன்றுகொண்டிருக்கிறது
மூன்றாம்நாளில் அதன் மீது
யாரோ நீர் தெளித்துவிடுகிறார்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

நிகழ்காலத்தின் காலம் வெறும்
மூன்றுநாட்கள் தாம்


நடுநிசி உலா இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ள :

குமாரராஜன் : 9488382644

படைப்புகள் அனுப்ப மின்னஞ்சல் : nadunisiyula@gmail.com





வெள்ளி, 15 நவம்பர், 2019

எனது பெயர் ஒரு தற்கொலைக் கருவி



எனது பெயரில் இருந்திருக்கிறது
எனது மரணம்
பாருங்கள் அது எப்படி உங்களைக் கண்டு
அஞ்சி நடுங்குகிறது

பாருங்கள் அது எப்படி உங்களை
மன்றாடுகிறது
பாருஙகள் அது உங்கள்
மனசாட்சியை
ஒரு மில்லிமீட்டர் கூட
அசைக்கத் திராணியற்று விசும்புகிறது
அதை நீங்கள்
வாழ்க்கையின் குறுகலான விளிம்புக்கு
விரட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்

என் பெயரின் பொருட்டு
நீங்கள் என் சுதந்திரங்களைப்
பறித்தீர்கள் நீங்கள் என் கல்வியை
மறுத்தீர்கள்
நீங்கள் என்னை ஒரு
தீவிரவாதி என வரைந்து காட்டினீர்கள்
நீங்கள் என்னை தேசத் துரோகி என்றீர்கள்
நீங்கள் என்னை
நாடு விலக்கச் சொன்னீர்கள்

எதுவுமே செய்ய இயலாத
எனது பெயரை
இன்றொரு தூக்குக் கயிற்றில்
கட்டித் தொங்க விட்டிருக்கிறேன்
நீங்கள் உங்கள்
குறுக்குக் கயிறைத் தடவித் தடவிப்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்





வெள்ளி, 1 நவம்பர், 2019

சின்னஞ்சிறிய மரணம்

இந்த மாதம் கொலுசு மின்னிதழில் எனது ஏழு கவிதைகள் வெளியாகியுள்ளன... 

உங்கள் வாசிப்புக்கு இங்கே ..

1)

மிகச் சிறியது  மரணம்
ஆழ்துளைக் கிணறொன்றில்
இரு கைகளை உயரத் தூக்கியபடி
குறுகிக் கிடக்கிறது
வாழ்வை யாசித்துக்கொண்டு
அரசும் அதிகாரமும்
மொத்த மனுசங்களின்
மெத்தனமும்
ஒரு ரொட்டித் துண்டென
அதன் உயிரை நீட்டி நீட்டிப் பார்க்கிறது
எட்டும் தூரத்தில் இருந்து
எட்டாத ஆழத்தில் அது
தன்னை உட்செலுத்திக் கொண்ட போது
இன்னும் சின்னதாகிப் போனது.
மரணம் எவ்வளவு சிறியதென்றால்
நமது கண்களுக்குத் தெரிந்து 
விடாத அளவு

2)

மிகச் சிறியது நம் துயர்
விளம்பர இடைவேளைகளில்
வாசலுக்கு ஓடிப் போய்
வாங்கி வைத்திருக்கும்
வண்ண வெடிகளை
கொளுத்திவிட்டு
தொலைக் காட்சித் திரைக்குத்
திரும்பி வந்து
கன்னத்தில் கை வைத்து அமர்ந்து கொள்கிறது
37 ஆவது அடியில் சுழலும்
ரிக் எந்திரம்
இன்னும் அறுபது அடிக்கு சுழல வேண்டும்
இன்னும் எத்தனை விளம்பர இடைவேளைகள்
இன்னும் எத்தனை தீபாவளிகள்

3 )

இன்னும் மூடப்படாமல் கிடக்கின்றன
தோண்டி வைக்கப்பட்ட சவக்குழிகள்
நீர் செத்த நெடுங்குழிகள்
வாய் பிளந்து காத்திருக்கின்றன
செல்லங்களே
ஓரமாய்ப் போங்கள்
மரணத்தோடு விளையாட வேண்டா
அது எங்கள் அரசாங்கத்தின் வேலை

4 )

சின்னஞ்சிறிய சவப்பெட்டி
ஒன்று தயாரான போது
கடவுளின் கதவுகள் திறந்துகொண்டன
கொடுமை என்னவெனில்
எத்தனை சவப்பெட்டிகளுக்குப் பின்பும்
அவரது கண்கள் தாம் திறக்கவேயில்லை

5 )

டிஜிட்டல் இந்தியா

எங்கள் அரசர் எங்கள் தேசத்தை
கணினி மயமாக்கிவிட்டார்
எங்கள் காலைக் கடன்களுக்காக
கணினிக் கக்கூஸ்கள் தயாராகிவிட்டன
எங்கள் வங்கிகள் கணினி மயமாகிவிட்டன
நாங்கள் கண்காணிக்கப் படுகிறோம்
எங்கள் மளிகைக் கடைகள் கணினிமயமாகிவிட்டன
பணத் தாள்களுக்கு அங்கு வேலையே இல்லை
எங்கள் சுடுகாடுகள் கணினி மயமாகிவிட்டன
எங்கள் பிணங்கள் தாமாகவே எரிந்துவிடும்
எங்கள் உலகில்
இன்னும்
மனித மலத்தை அள்ளவும்
மரணக் குழிகளுக்குள் புகவும்
தான் ஒரு கணிப்பொறியைக்
கண்டுபிடிக்க இயலவில்லை

6) 

அச் சிறுவனைப் பார்த்து கடவுள் கேட்டார்
இன்னும் நீ ஏன் கைகளைத் தூக்கிக்
கொண்டே இருக்கிறாய் ?
நான் எனது மரணக் குழிக்குள்
இப்படித்தான் கிடந்தேன் 
இப்படித்தான் நீங்கள் 
என்னைக் கைவிட்டீர்கள் 
உங்கள் கரங்கள் 
எனது கரங்களுக்கு நீளும் என்று நீட்டியபடியே இருந்தேன் நீங்கள் என்னைக் கைவிட்டீர்கள் 

இனி என் அம்மாவுக்கு இச் சிறுகையால் அளாவிட முடியாது
என் அண்ணனை அணைத்துக்
கொள்ள முடியாது
அப்பாவின் விரல்களைப் 
பற்றிக்கொள்ள முடியாது
எனது கைகளை மடக்க இயலாது
எனது கைகள் அழுகி விட்டன இப்படியேதான் எனது கைகள்
 புதைக்கப்பட்டன
நீங்கள் என்னைக் கை விட்டீர்கள்

இப்படியே தான் நான் இங்கும் 
இருக்க முடியும் என்றான்

கடவுள் தனது பன்னிரு கைகளையும்
கத்தரித்துக் கொள்ளத் துவங்கிவிட்டார்... 

7 )

கடைசியாக ஒரு 
சின்னஞ் சிறிய சவப்பெடிக்குள்
சின்னஞ்சிறிய மரணத்தை
அடைத்துப் புதைத்தனர்
அது 
மிகச் சிறியதாக்கி விட்டது
இந்த பூமியை 


கொலுசு மின்னிதழில் வாசிக்க :

http://kolusu.in/kolusu/z_want_to_see_book.php?parameter=52K4K2613









Show quoted text

புதன், 23 அக்டோபர், 2019

மரப்பாச்சியின் கனவுகள்

கடந்த 13.10.2019 அன்று கவிஞர் யாழினிஸ்ரீ அவர்களின் மரப்பாச்சியின் கனவுகள் நூல் வெளியீட்டு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.நானும் கவிஞர் சோலைமாயவன் அவர்களும் சென்றிருந்தோம்.

யாழினிஸ்ரீ  பத்து வயதுவரை எல்லா குழந்தைகளும்போல இயல்பாகத் தான் இருந்தார். பத்து வயதில் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் உடல் முழுவதும் செயலற்றுப்போனது. நடக்க இயலாது. சக்கரநாற்காலி தான். அவரது அம்மா தான் யாழினியின் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார் கழுத்தைக் கூட அசைக்க முடியாது. இந்தச் சவால்களுக்கிடையில் கவிதைகள் எழுதி அதைத் தொகுப்பாக வெளியிடுவது மிகப்பெரிய சவால்.

கவிஞர் குட்டிரேவதி சென்னையிலிருந்து வந்திருந்து நூல் வெளியிட்டு அழகான வாழ்த்துரையை வழங்கினார். நூல் குறித்த வாசகப் பார்வையை நிஷா வழங்க, கவிஞர் யாழியும் நானும் வாழ்த்துரை வழங்கினோம். இந்த நூலை சிறப்பாக வெளிக் கொண்டு வந்த ஜீவாவும் பேசினார். நிகழ்வை கவிஞர் தனசக்தி ஒருங்கிணைத்தார். பொன்னுலகம் குணா நன்றியுரை வழங்கினார்.




ஒரு புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி வாசிப்பதும், வாசிப்பவர்களுக்குப் பரிசளிப்பதும் மிகச் சிறந்த செயல். அதிலும் யாழினிஸ்ரீ போன்றோரின் முயற்சிகளை ஊக்குவிப்பதும் மிக முக்கியமானது. அதன் பொருட்டு யாழினியின் மரப்பாச்சியின் கனவுகள்  தொகுப்பை நண்பர்கள் தயவு செய்து வாங்கி வாசியுங்கள் …

நூல் குறித்த வாசிப்பனுபவம் விரிவாக எழுதுகிறேன்

புத்தகத்தின் விலை ரூ.50/-

தொடர்பு கொள்ள வேணடிய அலை பேசி எண்கள்
70104 84465 , 88707 33434,
80569 72399, 97152 89560

கவிஞர் குட்டி ரேவதி நூல் வெளியீட்டுக்குப் பிறகு யாழினிஸ்ரீயைப் பற்றி எழுதியிருக்கிறார் அதை வாசிக்க கீழே சொடுக்கவும்


யாழினிஸ்ரீயின் நேர்காணல் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது அதை வாசிக்க கீழே சொடுக்கலாம்

புதன், 21 ஆகஸ்ட், 2019

வண்ணதாசனை வந்தடைதல்

வண்ணதாசனை வந்தடைதல்




கவிதை மீது மயக்கமாகி நிறைய எழுதியும் கிடைத்ததை மட்டும் எப்போதாவது வாசித்துக் கொண்டும் இருந்த பால்யத்தில் வாசிக்கக் கிடைத்த கவிதைகளில் வண்ணதாசன் இருந்திருக்கவில்லை.
கவியரங்கக் கவிதைகள், காதல் கவிதைகள், வார இதழின் நான்கு வரிக் கவிதைகள் என எங்கெங்கோ சுற்றித் திரிந்து கொஞ்சம் நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு கொண்டு வாசிக்கத் துவங்கும் போது தான் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கும் வசதியும் வந்தது.

அப்போதும் கவிதைகளை அடையாளம் காட்டுபவர்கள் யாரும் இல்லாத போதும் மிகத் தாமதமாக கல்யாண்ஜி என்ற பெயரை இந்தக் கவிதையில் கண்டு கொண்டேன்

சைக்கிளில் வந்த
தக்காளிக்கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளில்
பழங்கள்.
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்.
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை.

இந்தக் கவிதைக்கு முன்னும் பின்னும் நீண்டு கிடக்கும் கல்யாண்ஜியின் கவிதைகளைத் தேடி வாசித்த பின்பு இது ஒரு அற்புத மரம் எனப் புலப்பட்டது. அன்பின் மலர்களை பற்பல வண்ணங்களில் முகிழ்த்துக் கொண்டேயிருக்கும் இந்த மரத்தின் நிழல் எல்லோருக்குமானது...

கல்யாண்ஜியையே இத்துணை தாமதமாக வந்தடைந்தவன் அதனினும் தாமதமாகவே வந்து சேர்ந்தேன் வண்ணதாசனிடம் .. வண்ணதாசனின் கவிதைகளை, கல்யாண்ஜியின் கதைகளை வாசிக்குமளவுக்கு இப்போது இருவரின் சொற்களுக்கும் நெருக்கமாகிவிட்டேன்.

சிறுவயதில் கதைகளை வாசிக்கும் போது மனதுக்குள் அப்பத்தாவின் குரலிலேயே அந்தக் கதைகள் ஒலிக்கும்...

அவரது கவிதைகளின் நெகிழ்வை வாசிக்க வாய்த்த தனிமைத் தருணங்களில் அவருக்கு ஒரு குரலை நான் வரைந்து கொண்டேன். அந்தக் குரலில் தான் அவரது கவிதைகள் என் மனதுக்குள் வாசிக்கப்படும் ...
இதுவே பழக்கமாகிப் பின்பு ...
நல்ல கவிதைகளை வாசிக்கும் கணமெல்லாம் வண்ணதாசனின் குரலில் அவை ஒலித்துக் கொண்டிருக்கின்றன இப்போதெல்லாம்.

அவர் பிறந்த இந்த நாளில் அவரது கரங்களைப் பற்றிக்கொள்கிறேன்.. அவரது கவிதைகளைப் பற்றிக் கொள்கிறேன்... அவரது குரலையும்..

நெடுவாழ்வு வாழ ப்ரார்த்தனைகள் ஐயா...

வேறு ஒன்றும் செய்ய
வேண்டாம்.
காம்பை விரல்களால்
கவ்வி
எதாவது ஒரு பூவை
ஏந்திக் கொண்டிருங்கள்
போதும்

- கல்யாண்ஜி

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா சார் ?

மாலை நேரத்து வானம் மேகங்களைத் திரட்டி குவித்து வைத்திருந்தது. வழக்கத்துக்கு முன்பாகவே இருட்டி விட்டது பொழுது. எப்போது வேண்டுமானாலும் வானம் பொத்துக்கொண்டு ஊற்ற  ஆரம்பிக்காலாம். வேலை முடிந்து வேகமாக ஓடிவந்து பேருந்து  ஏறினேன். சில இருக்கைகள் காலியாக இருக்க ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அருகில் ஏற்கனவே அமர்ந்து இருந்தவருக்கு என்னை விடவும் இரண்டு வயது குறைச்சலாக இருக்கலாம். கிராமத்து இளைஞனைப் போன்ற வெள்ளந்தியான தோற்றம் ( ஆம், அதை விவரிக்கத் தேவையில்லை, இந்த ஒரு வார்த்தையில் நீங்கள் யூகித்துக் கொள்ளலாம் ). நடத்துனரிடம் ரெண்டு டிக்கட் என்று கேட்டார் அருகில் இருந்தவர், கேட்டுவிட்டு உடனே இல்லை ஒன்னு குடுங்க என்று ஒரு டிக்கட் மட்டும் வாங்கிக் கொண்டார். அலைபேசியைப் பார்ப்பதும் வெளியில் பார்ப்பதுமாக ஒரு மாதிரி அவசரகதியிலேயே இருந்தார். நடத்துனர் வந்து போன பிறகு நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கியிருந்தேன். மழைக்கு முன்பான பரபரப்பில் சாலையும் மனிதர்களும் வாகனங்களும் வேகம் காட்டிக் கொண்டிருந்தனர்.
அலைபேசி ஒலிக்க எடுத்து ஏதோ மெதுவாகக் கொஞ்ச நேரம் பேசியவர்; சுற்றிலும் ஆட்கள் இருப்பதை, அது பேருந்து என்பதை எல்லாம் மறந்துவிட்டு  சற்றைக்கெல்லாம் சத்தமாகப் பேசத் தொடங்கிவிட்டார் " மச்சான், ஒன்னும் இல்லை. நான் பொள்ளாச்சி போயிட்டு இருக்கேன். பஸ் ஏறிட்டேன். காலைல முதல் பஸ்ஸ புடிச்சு வந்துடுவேன் . பாத்துக்க டா " என்று சொல்லும் போதே உடைந்தவர் தேம்பி அழ ஆரம்பித்தார். மறுமுனையில் இருப்பவர் ஏதோ சமாதானம் சொல்லியிருக்கக் கூடும். “ சரிடா, சரிடா பஸ்ல இருக்கேன். நான் பாத்துக்கறேன். நீ பாத்து இரு " என்று அலைபேசியைத் துண்டித்துவிட்டு அதன் தொடு திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் நீர் இன்னும் கோர்த்து திரண்டிருந்தது.
என்ன என்று கேட்கலாமா வேண்டாமா என்று அவ்வளவு யோசனையும் தயக்கமுமாக இருந்தது. வெளியூர்க்காரர் மாதிரித் தெரிந்தார். நாமே கேட்காமல் விட்டால் யார் தான் அவருக்கு ஆதரவாகக் கேட்பது என்று தோன்றியது. அவரது தோளைத் தொட்டழைத்தேன் " சார், என்ன ஆச்சு. ஏன் அழுதீங்க " என்று நேரடியாகக் கேட்டுவிட்டேன். அவர் அதை எதிர்பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்கள் அவர் மட்டுமே பேசினார் " சார் ஃபிரெண்டுக்கு உடம்பு சரியில்ல சார்,  வேலை செய்ய செய்ய அப்படியே மயங்கி விழுந்துட்டான் சார். அவன் எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட் சார், அவனுக்கும் அப்பா இல்லை சார். ஆஸ்பத்திரில சேர்த்ததும் டாக்டர் குறைந்த ரத்த அழுத்தம் , ராத்திரி ஐ.சி.யூ ல இருக்கட்டும் னு சொல்லிட்டாங்க சார். ரொம்ப பாவம் சார் , அதான் தாங்கல " என்றார்.
 எனக்கும் கண்கள் கலங்கி விட்டன, உடன் பணிபுரியும் நண்பனுக்காக இவ்வளவு துடிக்கிற நண்பன் உண்மையில் வரம் தானே. மேலும் பேசியதிலிருந்து அவர் ஒரு தனியார் குறுந்தொழில் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிகிறார் என்று தெரிந்தது. “ சார், இதுக்கு ஏன் அழறீங்க. லோ பி.பி எல்லாம் சாதாரணம் ஒன்னும் ஆகாது. கவலை படாதீங்க. செலவுக்கு பணம் எதும் வேணுமா " என்று கேட்டேன்.
 இல்ல சார், நேத்து ஓனரே பணம் கட்டிட்டாரு ஆஸ்பத்திரிக்கு. மேல் செலவுக்கு பணம் வேணும், பொள்ளாச்சி ல சித்தப்பா வீடு அருக்கு அங்க பணம் குடுத்து வச்சிருக்கேன். அதை வாங்க தான் போயிட்டு இருக்கேன் ; ஒன்னும் பிரச்சினை இல்லை. பணம் எல்லாம் வேண்டாம் சார் " என்றார்."நேத்து அவன் கண்ணெல்லாம் சொருகி விழுந்துட்டான் சார் அதான் கொஞ்சம் பதட்டமாயிடுச்சு.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா சார் ? “ என்றார்.
அப்போது இருந்த மனநிலையில் தொண்டை வரை வெளியில் வரப்பார்த்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு “ இருக்குங்க சார், சொல்லுங்க" என்றேன் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று யூகித்தபடி.. “ கடவுள் நம்பிக்கை இருந்தா, முடிஞ்சா அவனுக்காக வேண்டிக்கோங்க சார், நாளைக்கு நல்லாகி வந்துடனும் " என்றார். “ கண்டிப்பா வேண்டிக்கிறேன். நல்லாயிடுவார் தைரியமா இருங்க " என்று சொல்லிவிட்டு ஜன்னலைப் பார்க்கத் துவங்கியிருந்தேன். மழை லேசாகத் தூற ஆரம்பித்தது. எனக்கு முன்னாலேயே பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவர். கீழே இறங்கியதும் திரும்பி நான் இறங்கும் வரைக்கும்  காத்திருந்து கையசைத்து போய் வருகிறேன் சார் என்று சொல்லிவிட்டு சென்றார். ஒரே ஊருக்கு இரண்டு பேரும் வேறு வேறு பேருந்தில் ஏறிக் கிளம்பிவிட்டோம்.



x

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

தீராத விளையாட்டுப் பிள்ளை

மகள் பாரதியின் இந்தி சிறப்பு வகுப்பு ஆசிரியை ஆயிஷா புதிதாக மழலையர் விளையாட்டுப் பள்ளி ஆரம்பித்துள்ளார். பள்ளியின் அறிமுகத்துக்காக குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் பாரதியை பரதநாட்டியம் ஆட முடியுமா என்று கேட்டிருந்தார். பாரதி மாமா மகள் தமிழியும் உடன் ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தங்களது நடன ஆசிரியை கவிஞர் கீதா ப்ரகாஷ் அவர்களின் பயிற்சியோடு சிறப்பாக நடனமாடினர் கடந்த ஞாயிறு நடைபெற்றது நிகழ்வு.. இது முன் தகவல்




முதல் நிகழ்வாகவே ஒரு வந்தனம் மற்றும் பாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளை பாடல் என இவர்களது நடனம் சிறப்பாக முடிந்தது ஆனால் முழு நிகழ்வையும் இருந்து பார்த்தோம்.

குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த எதை வேண்டுமானாலும் மேடையில் செய்யலாம். அவர்கள் அனைவருக்கும் பரிசு என்கிற சுதந்திரம் எனக்குப் பிடித்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்துக்கு சுமார் 20 மழலைகள் மேடையேறினர்.

ஒரு குழந்தை திருக்குறள் சொன்னது, ஒரு குழந்தை ஜானி ஜானி எஸ் பாப்பா சொன்னது, ஒரு குழந்தை வழக்கம் போல தனது அம்மாவுடன் ரெய்ன் ரெய்ன் கோ எவே சொன்னது…

ஒரு குழந்தை வந்தது.. எல்லோருக்கும் வணக்கம் என்றது எல்லோருக்கும் வணக்கம் என்றது மீண்டும் எல்லோருக்கும் வணக்கம் என்றது பிறகு மீண்டும் எல்லோருக்கும் வணக்கம் என்றது.. அதற்குப் பிறகு என்ன சொல்வது என்று மறந்து விட்டது போலும் , மேடைக்குக் கீழே இருந்து அம்மா ஏதேதோ சைகையில் காட்டினார்.. ம்ஹூம் மறந்தே போச். சிரித்துக் கொண்டே இறங்கிக் கொண்டது மேடையிலிருந்து.

ஒரு குழந்தை தனது அப்பா சொல்லச் சொல்ல திருப்பிச் சொன்னது. ஒரு குழந்தை தனது அம்மா சொன்னதற்கெல்லாம் மலங்க மலங்க விழித்துக் கொண்டே நின்று விட்டு இறங்கிவிட்டது. ஒரு குழந்தைக்கு அழகாக அலங்கரித்து அட்டையில் கேக் போன்ற உருவத்தைச் செய்து அனுப்பி இருந்தார்கள், அது வந்து அதை வெட்டுவது போல பாவித்து விட்டு ஹேப்பி பர்த்டே டூ யூ என்று பாடிவிட்டுச் சென்றது. கிருஷ்ணர் வேடம் போட்ட ஒரு குழந்தை பானையுடன் வந்தது பானையில் ஐஸ்கிரீம் போட்டு அனுப்பி இருப்பார்கள் போல, வந்து மேடையில் அமர்ந்து அழகாக வாயெல்லாம் ஆக்கிக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு சென்றது ; கேட்பவர்களுக்கெல்லாம் சிறு கை அழாவிய கூழென ஒரு பிடி கூழ்மத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றது. ஒரே கை தட்டல் குழந்தைக்கு…





மிகப் பெரிய நிகழ்வென்றோ, முழு நிறைவாக குறைபாடுகளற்ற ஒரு நிகழ்வென்றோ கண்கள் ஆராயவில்லை.. ஆனால் உற்சாகத்துக்குக் குறைவில்லை… குழந்தைகள் எது செய்தாலும் அழகு.. எதுவுமே செய்யாமலிருந்தாலும் அழகு ..

மனம் என்ன நிலையில் இருந்தாலும் , அத்துணை இறுக்கங்களின் முடிச்சுகளையும் அவிழ்த்துவிட்டு இலகுவாக்கிட வேறு எதையும் விட ஒரு குழந்தை போதுமானதாக இருக்கிறது…

குழந்தைகளைப் பார்த்து ரசித்தபடிக் கழிந்த அந்தப் பொழுதில் மிகச் சாதாரணமான நகைச்சுவைக்கும் மிக மகிழ்வாகச் சிரித்தேன், மிகச் சின்ன அசைவுக்கும் பெரு உற்சாகத்தோடு கை தட்டினேன்,

குழந்தைகள் கலை இலக்கியக் கொண்டாட்டம் என பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் துவங்கிய முன்னெடுப்பு எவ்வளவு முக்கியம் என்று புரிந்தது. குழந்தைகளின் உலகத்துக்குள் பெரிய மனிதர்களால் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடிவதில்லை. அவர்களின் மகிழ்ச்சியை அவர்களின் கொண்டாட்டத்தை அவர்களின் குழந்தைமையைத் தக்க வைக்க குழந்தைகள் கலைக் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அமைப்பும் செய்து தான் ஆக வேண்டும்..

கதைகளின் வழியாக, பாடலின் வழியாக நாம் புத்தகக் கல்வியைக் காட்டிலும் அதிகம் சொல்லித் தந்துவிட முடியும் என நம்புகிறேன்..











வியாழன், 11 ஜூலை, 2019

மணல் வீடு சிற்றிதழ்




ஒரு நல்ல திரைப்படத்தைப் பணம் கொடுத்து திரையரங்கம் சென்று பார்ப்பது போல, ஒரு நல்ல புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பது போல அறம் மிகுந்த செயல் ஒரு சிற்றிதழைப் பணம் கொடுத்து வாங்கி வாசிப்பது.

மணல் வீடு சிற்றிதழ் எழுத்தாளர் மு.ஹரிகிருஷ்ணன் அவர்களால் பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ். சீரான கால இடைவெளி எல்லாம் இல்லை. அதிகபட்சம் அரையாண்டு இடைவெளிக்குள் இதழ் வந்துவிடும்.

இதழ் வடிவம், உள்ளடக்கம், பக்கங்கள் என அத்துணை விஷயங்களிலும் கனமான இதழாக இருக்கும். பெரிய வடிவத்தில், தடிமனான பக்கங்களுடன், மிகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுடன் வெளி வருகிறது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், எதிர் இலக்கியங்கள், நேர்காணல்கள், ஓவியங்கள் என மணல்வீடு ஒவ்வொரு இதழும் பல காலம் பாதுகாத்து வைத்துப் படிக்க வேண்டிய தகுதியுடைய ஓர் இதழ் தான்.

எந்த சமரசமும் இல்லாமல் படைப்புகளில், படைப்புகளின் தேர்வுகளில் இயங்கக் கூடியவர் மு.ஹரிகிருஷ்ணன். மாற்று இலக்கியத்தையும், தொல்கலைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருபவர்.

தற்போது இதழ் எண் 37-38 வெளிவந்துள்ளது. 192 பக்கங்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழியாக்கம்,விமர்சனம்,ஓவியங்கள் என அற்புதமாக வந்துள்ளது. வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்.






இந்த இதழில் பெரு.விஷ்ணுகுமார்,பெருந்தேவி,ஷா அ, யாழ் அதியன் , கறுத்தடையான்,அனார், றாம் சந்தோஷ், சுதந்திரவல்லி கவிதைகளை வாசித்தேன். இன்னும் சிறுகதைகள், மொழி பெயர்ப்புகள், கட்டுரைகள் இருக்கின்றன.... 192 பக்கங்களில் A4 அளவில் புத்தகம்  என இதழ் கனக்கிறது..


மணல்வீடு இதழ் வேண்டுவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் சந்தா தொகையைக் கட்டி விட்டு அதன் ஆசிரியருக்கு தகவல் சொல்லிவிட்டு முகவரியைத் தந்துவிட்டால் இதழ் உங்கள் முகவரி தேடி வந்துவிடும். ஓர் ஆண்டுக்கான சந்தா ரூபாய் ஐநூறு மட்டும் தான் ...

ஒரு நல்ல சிற்றிதழை வாசிக்க, ஒரு நல்ல சிற்றிதழை ஊக்குவிக்க அவசியம் சந்தா செலுத்துங்கள்

முகவரி :

மு.ஹரிகிருஷ்ணன்
ஆசிரியர் - மணல்வீடு சிற்றிதழ்
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டுர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
அலைபேசி - 98946 05371
மின்னஞ்சல் - manalveedu@gmail.com
manalveeduhari@gmail.com



சந்தா செலுத்த வங்கி விவரம்

M. Harikrishnan
Indian Bank, Mecheri

A/C No : 534323956
IFSC : IDIB000M025



வியாழன், 4 ஜூலை, 2019

சிற்பி இலக்கியப் பரிசு பெறும் கவிஞர் சோலைமாயவன்

கவிஞர் சிற்பி அவர்கள் வழங்கும் சிற்பி இலக்கியப் பரிசு இந்த ஆண்டு கவிஞர் சோலைமாயவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவரது விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி கவிதைத் தொகுப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்தத் தொகுப்புக்கு ஏற்கெனவே கோவை புத்தகக் கண்காட்சியின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மிக முக்கியமான விருதுகளை இந்த ஆண்டு கவிஞர் சோலை மாயவன் பெறுகிறார்

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பெருமையுடன் வாழ்த்துகிறது ..

மனம் நிறைந்த வாழ்த்துகள் சோலைமாயவன்

இன்னும் விரியட்டும் சிறகு





தேயிலை நிழலில்
உறங்குகிறது
வனமிழந்த சிறுத்தை

- சோலைமாயவன்