ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

கவிதை ரசனை - 6

 

கவிதை ரசனை - இரா.பூபாலன்

 

 கவிதை காலத்தின் மீது விழும் ஒரு கண்ணீர்ச்சொட்டு, காலத்தின் கண்ணீரைத் துடைக்கும் கரமும் அதனுடையது தான். அழகியலின் வனப்புகளை சொற்களின் பல்லக்கில் தூக்கிச் சுமக்கும் பணியாள் கவிதை. காலத்தின் கோர முகத்தைப் பதிந்து அம்பலப் படுத்தும் முதல் கலகக் குரலும் கவிதையினுடையது தான். கவிதையின் சகல பரிமாணங்களையும் ரசிக்கும், ஆராதிக்கும் வாசகனுக்கு நன்றாகத் தெரியும் இவ்வாழ்வின் எல்லாக் கணங்களுக்கும் ஒரு கவிதை இருக்கிறது என்று. ஒரு விதூஷகனைப் போல வித்தை காட்டி சிரிக்க வைக்கும் கவிதை தான் சமயங்களில் குத்தீட்டியைத் தூக்கிக் கொண்டு சமருக்கு நிற்கும். குழந்தையின் அழகில் மயங்கி நிற்கும் அதன் குறுகிய உடல் அதிகாரத்தின் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

 

கவிதையின் அழகியலை ஒரு முறை சிலாகித்துப் பேசினால், அது தரும் அதிர்ச்சி வைத்தியத்தையும் திடுக்கிட்டு ரசித்துக் கொண்டாட வேண்டும். இரண்டும் கவிதையின் முகங்கள் தாம். அனைத்துமே கவிதையின் குரல்கள் தாம். கவிஞர் சுகிர்தராணியின் கவிதைகள் இரண்டாம் வகை. இடமற்று நிற்கும் / கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க / பேருந்துக்கு வெளியே / பார்ப்பதாய் / பாசாங்கு செய்யும் நீ / என்னிடம் / எதை எதிர்பார்க்கிறாய் / காதலையா ? எனும் சுகிர்தராணியின் கவிதையை இதுவரை எத்துணை மேடைகளில், எத்துணை வகுப்புகளில் எத்துணை பேரிடம் பகிர்ந்திருப்பேன் எனத் தெரியவில்லை. இன்னும் இன்னும் வாசிக்கும் கணமெல்லாம் அதிர்கிறேன். ஒவ்வொரு பேருந்துப்பயணத்திலும் இந்தக் கவிதை எப்படியோ பயணச்சீட்டின்றி என்னுடன் வலிந்து வந்து ஏறிக்கொள்கிறது.. அவரது சமீபத்திய தொகுப்பிலிருந்து அதே அதிர்ச்சியைத் தரும் கவிதை...

 

 

எனதன்பு சகோதரி மணிஷா...
தீண்டத் தகாத சேரி
தீண்டத் தகாத தெரு
தீண்டத் தகாத குடிசை
தீண்டத் தகாத குளம்
தீண்டத் தகாத கிணறு
தீண்டத் தகாத குவளை
தீண்டத் தகாத பாதை
தீண்டத் தகாத சுடுகாடு
தீண்டத் தகாத சிலை
தீண்டத் தகாத நிலம்
தீண்டத் தகாத காற்று
தீண்டத் தகாத வானம்
தீண்டத் தகாத நெருப்பு

தீண்டத் தகாத கண்ணீர்
தீண்டத் தகாத தொழில்
தீண்டத் தகாத சுவர்
தீண்டத் தகாத மக்கள்
தீண்டத் தகாத உணவு
தீண்டத் தகாத ரத்தம்
தீண்டத் தகாத காதல்
தீண்டத் தகாத சாதி


தீண்டத்தகு நம் உடல்

 

-         சுகிர்தராணி

நீர் வளர் ஆம்பல்தொகுப்பு , காலச்சுவடு வெளியீடு- 04652 278525

 

கவிதைக்கென சில கட்டமைப்பு விதிகள் இருக்கின்றன, சொற்கள் ஒரு தொடரெனெ, பட்டியலென வருவது நவீன கவிதை விரும்பாத ஒன்று. அது ஒரு அயர்ச்சியைத் தரக் கூடிய செயல். ஆனாலும், பொருளின் ஆழம் கருதி, சொல் திரும்பத் திரும்ப இந்தக் கவிதையில் வந்து நிற்பது அவசியமாகிறது. திரும்பத் திரும்ப வரும் சொற்கள் திரும்பத் திரும்ப நம்மை குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்துகின்றன. அந்தக் கடைசிவரி தரும் அதிர்ச்சி நம் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு அக்னிப் பார்வையால் எரிக்கிறது. இது மணிஷாவின் மரணத் தருணத்தில் எழுந்த உணர்வலையின் ஓலமென்றாலும், இது மணிஷாவுக்கான கவிதை மட்டுமா என்ன ? அந்தப் பெயரை இக்கவிதையிலிருந்து நீக்கிவிட்டால் வன்புணர்வில் துன்புறுத்தப்படுகிற, கொல்லப்பட்ட எல்லா சகோதரிகளுக்குமான கவிதையாகிறது. மேலும் தீண்டாமையின் கீழ்மைச் செயல்கள் எல்லாவற்றுக்கும் எதிரான கவிதையாகவும் குரலுயர்த்திப் பாடுகிறது.

 

கவிதையின் குரல் மிகச் சிறியது தான் ஆனால் அதனளவில் அது வலியது. எதிர்க்கத் துணிந்துவிட்டால் மலை கூட மலையல்ல. எந்த நம்பிக்கையில், எந்த அறத்தில், எந்த தைரியத்தில் கவிதையின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அது காலத்தின் குரலாக எப்படி மாறுகிறது? கவிதை ஒரு தனிக்குரலன்று அது கூட்டு மனசாட்சியின் ஒருமித்த குரல். ஒற்றைக் குரலிலிருந்து கிளம்பி இந்த சமூகத்தின் சங்கமித்த குரலாக அது மாறுகிறது. அந்தக் குரலை சிலிர்க்கச் சிலிக்க காட்சிப்படுத்தியிருக்கிறது கவிஞர் வெய்யிலின் கவிதை...

 

              கவிதை நம்புகிறது

 

பெரும் பொய்களின் சூறாவளிக்கு நடுவே

ஓர் எளிய உண்மையை

அணைந்திடாமல் எப்படி ஏந்திச் செல்வது?

குழம்பி நிற்கும் ஒரு சிவப்பு எறும்பைப்பார்த்தேன்

அது நசுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், நகர்ந்தது.

தன் வேதியீரக் கோடுகளைச் சிந்தியபடி

மெல்லமெல்ல ஊர்ந்தது.

பின்னொரு எறும்பு

அக்கோட்டை அடையாளம் கண்டு கொதித்தது-அது

பார்ப்பதற்கு உங்களைப் போலவோ

என்னைப் போலவோ இருந்தது

யாவும் பொது!’

என அது முஷ்டியை உயர்த்தியபோது

உலகம் சிரித்தது.

ஆனாலும்

கவிதை நம்புகிறது.

சிறிய எறும்பின் முஷ்டியே என்றபோதும்

அது

அறத்தின் மாபெரும் செங்கோல்.

 

- வெய்யில்

 மகிழ்ச்சியான பன்றிக்குட்டி தொகுப்பிலிருந்து , கொம்பு வெளியீடு 9952326742

 

கவிதையின் குரல் ஓர் எறும்பளவு தானெனினும் அதனளவில் அது அர்த்தமுள்ளது. விளைவுகளை ஏற்படுத்த வல்லது. யானையின் காதில் சென்றுவிடும் எறும்பின் வலிமை என்பது பழைய உவமை என்றாலும் இங்கு அது பொருந்திப்போகிறது. இந்தக் கவிதையில் எறும்பு என்பது எதன் குறியீடு, அதுவும் சிவப்பெறும்பு என்பது எதன் குறியீடு என்பதும் இந்தக் கவிதை வாசகனின் மனதில் விரிய வேண்டிய ஒன்று. யாவும் பொது என ஒலிப்பது எறும்பின் குரலன்று. கவிஞனின் குரல். காலத்தின் குரல். கவிதையின் கடைசி வரி கவிதையை உலகுக்கு உயர்த்திக்காட்டும் வரி. சங்க காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் எல்லா வரிகளுக்கும் தலைப்பாகவும், உரையாகவும், அடிநாதமாகவும் இருக்கக் கூடிய வரி இது. கவிதை அறத்தின் மாபெரும் செங்கோல்.

 

ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

ஒரு தலைவர் எழுத்தாளர் / வாசகராக இருந்தால்…

 

ஒரு தலைவர் எழுத்தாளர் / வாசகராக இருந்தால்

 



 ஓர் எழுத்தாளர் , புத்தகங்களை நேசிக்கும் வாசகர், தலைமையிடத்தில் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.. பள்ளிகளில், கல்லூரிகளில் பேசுவதற்குச் செல்லும் போதெல்லாம் ஓர் ஆசிரியர் வாசிப்பாளராக இருந்தால் அந்தக் கல்விக்கூடமும் மாணவர்களும் எவ்வளவு மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கிறேன் அது குறித்துப் பேசியும் இருக்கிறேன். மருத்துவர்கள் வாசகர்களாக இருப்பதால் நிகழும் அதிசயங்களையும் பார்க்கிறேன்.. இப்படி, புத்தக வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாது அது புதிய சிந்தனைகளின் வாசலாக, புதிய புதிய கருத்துருவாக்கங்களின் வெளியாக மாறுகிறது என்பது தான் கண்கூடாகக் கண்ட உண்மை. நாம் கண்ட மகத்தான தலைவர்கள் எல்லோரும் சர்வ நிச்சயமாக புத்தக வாசிப்பாளராகத் தான் இருந்திருக்கிறார்கள். உலக அளவில் எடுத்துக்கொண்டாலும் இது தான் உண்மை.

 

கோவையில் ஆறாவது ஆண்டாக புத்தகக் கண்காட்சி சிறப்புற நடைபெற்றிருக்கிறது. அன்றாடம் சிறப்புரைகள், எல்லா அரங்குகளிலும் நூல் வெளியீடுகள், உரைகள், பட்டிமண்டபம், கலை நிகழ்ச்சிகள் என எல்லா புத்தகக் கண்காட்சிகளையும் போல ஆரவாரமான பத்து நாட்கள். எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான திருவிழா.

 

கோவையில் இம்முறை ஒரு சிறப்பு. ஒரு நாள் முழுதும் தொழிலாளர்களின் கலை நிகழ்வுகள், விவாத அரங்கு, நாடகம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான போட்டிகள், பரிசளிப்புகள், நிறுவனங்களில் சிறந்த வாசகருக்கான விருதுகள் என தொழிலாளர்களுக்கான திருவிழாவாகவும் இந்தப் புத்தகத் திருவிழா மாறியிருக்கிறது.. இதற்கெல்லாம் காரணமாக ஒரு மூளையின் சிந்தனை மிளிர்கிறது. அது சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களது மூளை.

 

நான் கோவையில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில் மனிதவளத்துறையின் இயக்குநராக இருப்பவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன். நாடறிந்த பேச்சாளர், தன்னம்பிக்கை எழுத்தாளர். தற்போது கோவை புத்தகக் கண்காட்சியின் ஆலோசனைக் குழுவில் இருப்பவர். அவரது ஆலோசனையின்படியும் வழிகாட்டுதலின் படியும் தொழிலாளர்களுக்கான இத்துணை சிறப்பான நிகழ்வுகளும் ஒரு நாள் முழுவதும் நடந்தது. வாசிப்பின் மகத்துவத்தை உணர்ந்த ஓர் ஆளுமையால் தான் இப்படியான தொலைநோக்கு சிந்தனையைக் கொண்டுவர முடியும்.

 

இதுமட்டுமல்லாது, எங்கள் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் இருந்தும் பல தொழிலாளர்களை அரைநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் புத்தகக் கண்காட்சிக்கு நிறுவனத்தின் பேருந்தில் அழைத்து வந்து புத்தகங்களைப் புரட்டிப்பார்த்து வாங்க, வாசிக்க ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மேலும் இந்த யோசனைகளின் சிகரமாக, விருப்பபடும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூபாய் 500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். அவர்கள் அதே தொகைக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் சம்பளத்தில் ரூபாய் 250 மட்டுமே பிடித்தம் செய்யப்படும். மீதி 250 ரூபாயை நிறுவனமே செலுத்தும். இந்தத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் புத்தகங்களை வாங்கினர்; அதில் பலர் முதன்முறையாக புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள். முதன்முறையாக புத்தகத்தை வாங்குபவர்கள். வாசிப்பைப் பரவலாக்க, இதைவிடவும் வேறு என்ன திட்டத்தைச் செய்துவிட முடியும்? இவர் இவ்வளவும் செய்வதற்கும் இன்னும் இன்னும் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் எங்கள் நிறுவனத்தின் தலைவர் மேன்மைமிகு திரு.ராமசாமி ஐயா எப்போதும் மனமுவந்து வாழ்த்தி வரவேற்பார். மேலும் சமுதாயத்துக்கும், இயற்கைக்கும் எப்போதும் பயன்படும்படி நம் ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளும் கூட.

 

இது ஒரு வாசகனாக, புத்தகங்களின் காதலனாக, எழுத்தாளனாக நான் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு நன்றி செலுத்தும் பதிவு..

 

அன்பின் நன்றி.. வாசிப்பின் வாசல்களைத் தொழிலாளர்களுக்கும் திறந்துவிட்டமைக்கு