வியாழன், 14 மார்ச், 2024

இளங்கோ கிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், சக்திஜோதி, ஆன்மன் - பிறந்தநாள்

இன்று கவிஞர் இளங்கோகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் சக்திஜோதி, கவிஞர் ஆன்மன் ஆகியோருக்குப் பிறந்தநாள் ...

அன்பின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ரியத்துக்குரிய கவிகளே..




இந்த உலகிலேயே
திரும்புவதற்குக் கடினமான பாதை
மிகவும் நீளமான பாதை எது?" என்றாள்
இதோ
அவ்வளவு வெயில் தகிக்கும்
அவ்வளவு இருள் நிரம்பும்
உன் சொந்த இதயத்திற்குத்
திரும்பும் பாதைதான்

- மனுஷ்ய புத்திரன்



மூன்று குதிரைகள்
அன்னை மூன்று குதிரைகளைப் பிரசவித்தாள்
ஒரு குதிரை நெருப்பாலானது
நெருப்பைப் போல்
பூமியிலிருந்து வானுக்குச் செல்வது
காலுந்தி வானிலேயே திரிந்துகொண்டிருப்பது
இரை பொறுக்கவும் பூமிக்கு வராதது
தன் தகித்தலில் தன் மிதத்தலில் தனை உணர்வது
இன்னொரு குதிரை நீராலானது
வானிலிருந்து பூமிக்கு வருவது
தன் எடையால் எதையும் அசைப்பது
தன் நீர்மையால் எதையும் கதைப்பது
தன் பாரம் தாங்காமல் ஆழ ஆழ சென்று கொண்டிருப்பது
மற்றொரு குதிரை காற்றாலானது
தானாகத் தன்னை அறிவிக்காதது
சிறகற்ற சிறகில் வானுக்கும் பறப்பது
எடையற்ற எடையில் பூமிக்குள் அமிழ்வது
அன்னை அக்குதிரைகளுக்குப் பெயரிட்டாள்
சத்தியம் சிவம் சுந்தரம்
நெருப்பாய் பறக்கும் குதிரையை காற்றில் கட்ட முயன்றான் மனு
நீராய் அமிழும் குதிரையை காற்றில் கட்ட முயன்றான் புத்தன்
இப்படித்தான் இந்தக் கதை நிகழ்ந்தது
இப்படித்தான் இந்தக் கவிதை பிறந்தது

- இளங்கோ கிருஷ்ணன்



முதல் வார நாட்களுக்கும்
வரும் வார நாட்களுக்கும்
இணைப்பு தினமான இன்று
துவைப்பதும் சுத்தம் செய்வதும்
சமைப்பதும் ஒழுங்கு செய்வதும் என
நாள் முழுவதும் இயங்குகிறவள் அவள்.
ஞாயிற்றுக் கிழமைக்கு என்றே
பிரத்யேகக் கனவுகள் வாய்க்கப்பட்ட
தன் மகள்
உறங்குவதைக் காண்கிறாள்.
ஞாயிற்றுக் கிழமைக்கு என பிரத்யேக உறக்கம் வாய்க்கப்பட்ட தன் கணவன்
உறங்குவதைப் பார்க்கிறாள்
ஞாயிற்றுக் கிழமைக்கு என பிரத்யேக வேலைகள் இருப்பதை நினைக்கையிலேயே
அவளின் அதிகாலை துவங்குகிறது

- சக்திஜோதி



வருவதற்கும்
போவதற்குமான
காரணங்களை
மரங்களிடம்
ஒருபோதும் சொல்வதில்லை
பறவைகள்

- ஆன்மன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக