திங்கள், 11 மார்ச், 2024

நின் நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு நூல் அறிமுகம் - கவிஞர் இளையவன் சிவா

 நின்நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு

- இரா.பூபாலன்



பதிப்பு 2023 டிசம்பர்
பக்கம் 72
விலை ரூ 120
வெளியீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பொள்ளாச்சி
தொடர்புக்கு : 9842275662

பொள்ளாச்சியில் செயல்படும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் செயலாளர் கொலுசு இலக்கிய இதழின் பொறுப்பாசிரியர் டில்லியில் நடந்த இளம் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்தவர் ஏழு கவிதை நூல்களை வெளியிட்டவர் என்ற சிறப்புக்குரிய
இரா பூபாலன் அவர்களின் எட்டாவது கவிதை தொகுப்பு இது.
அம்மாவாக மனைவியாக மகளாக தோழிகளாக அக்காக்களாக என்னை நானாக்கிய பெண்கள் தான் இந்த கவிதைகள் என்று தனது முன்னுரையில் குறிப்பிடும் பூபாலன் பெண்களுக்கான கவிதைகளை எழுதி தனித் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.
பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற மொழியின் வீரியத்தை வாழும் உயிர்களுக்குள் துடித்திடும் இதயத்தின் தன்னலமற்ற சேவையென உணர்த்திடத் துடிக்கும் வரிகளைக் கொண்டு மங்கையரின் மாண்புகளை மாலையிடுகிறது நின்நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு.
உலகத்தின் இயக்கத்திற்கு சூரியனின் மையமும் கோள்களின் நிலையற்ற நகர்தலும் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் உயிர்களின் நகர்தல் தொடங்கும் புள்ளியும் தொடர்ந்து இயங்கும் புள்ளியும் பெண்ணின் கரங்களுக்குள் ஒளிந்து கிடப்பதை மறுப்பதற்கில்லை. மகளாக மனைவியாக அன்னையாக பாட்டியாக சகோதரியாக என பலவித பரிமாணங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் மகளிரின் வாழ்வின் எல்லாத் தருணங்களையும் கொண்டாடித் தீர்த்திட சுழன்றிடும் கவிதைகளைக் கொண்டு அழகு பார்த்திடும் கவிஞரின் திறமைக்கு வாழ்த்துக்களும் பேரன்பும் உரித்தாகுக.
மனித வாழ்வின் நிலையாமைப் பொழுதுகளை உயிர்ப்பிக்கச் செய்து நகர்ந்திடும் தருணங்களை அர்த்தமுள்ளதாக மாற்றிடும் சக்தியும் பேராற்றலும் பெண்ணின் மனங்களுக்குள் பூத்திடும் அதிசயமாக புதைந்து கிடக்கிறது. இல்லறத்தின் சராசரி இயக்கத்தைக் கூட சிறப்பானதாக மாற்றி இமயத்தைத் தொட்டுவிடும் சாதனைகளை எட்ட வைக்கும் திறனை தங்களுக்குள் தேக்கி வைத்தே வழிநடத்திடும் மங்கையரின் வாழ்வில் வசதிகள் வளராமல் போனாலும் நிம்மதியும் ஆனந்தமும் நிலைகொண்டு நின்றிடும்.
ஆணும் பெண்ணும் சமமென்றே அறிவினை ஊட்டி வளர்த்திட்டாலும் ஏடுகளில் எழுதி உரைத்திட்டாலும் பேச்சிலும் உரையிலும் போற்றி வளர்த்தாலும் நிகழ்வுகளை கவனிக்கையில் சமத்துவத்தின் பாதையில் தடங்கல்கள் நிறைகின்றன. ஆணின் மனதில் இன்றும் கூட பெண்ணின் மனதை வாசிக்க முடியாத பக்கங்கள் நிறைகின்றன. பெண்ணை உடலை வைத்து எடை போடும் மனங்களே மிகுந்து நிற்கின்றன. கல்வியும் சிந்தனையும் இன்னும் சில ஆண்களின் மூளைக்குள் பெண்ணை போகப் பொருளாகப் பயன்படுத்திப் பார்க்கும் எண்ணத்தையே விதைக்கின்றன. விடியும் ஒவ்வொரு நாளும் செய்திகளில் கதறிடும் பெண்ணின் வலிகளை வேதனைகளை பாலியல் சீண்டல்களை வாசித்து விட்டும் கண்டும் காணாது கடந்து போகும் இன்றைய சமூகப் போக்கில் இவற்றைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கும் பிரச்சனைகளின் மூலத்தை ஆராய்தல் காலத்தின் அவசர அவசியமாகிறது.
கல்வி முறைக்கும் குடும்பத்தில் ஆண் பிள்ளைகளை வளர்த்திடும் விதமும் பெண் பிள்ளைகளை வளர்த்திடும் விதமும் பெண்களைப் பற்றிய சரியான புரிதல்களை விதைத்திடுதல் அவசியம். அதற்கு பெண்ணின் பரிமாணங்களை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. பெண்களின் மீதான புறச்சீண்டல்களை சமூகம் கொடுக்கும் வெளி அழுத்தங்களைப் பற்றி நம்மிடையே விசனப்படாமல் வேதனைப்படாமல் பெண்ணின் அகத்தையும் அதன் வழியே அவர்களின் வாழ்வு முறையையும் அவர்களின் மனங்களுக்குள் மலர்ந்திடும் கனவுகளின் நிகழ்வுகளையும் கவிதைகளாக்கி கல்வெட்டுகளாய் நமக்குள் புகுத்தி விடுகிறார் கவிஞர்.
எல்லா உயிர்களும் இந்த உலகின் இயக்கத்தை அதன் பேராற்றலை முதன்முதலாக அவரவர் தாயின் விழிகளின் வழியே தான் உணரத் துவங்குகின்றன. அவற்றின் வளர்ச்சியும் அவரவர் தாயின் நகர்தலுக்கேற்ப நினைவுகளை உருவாக்கி நிலை கொள்கின்றன. தாய்மையைக் கொண்டாட விரும்பாத மனங்கள் கிடையாது. ஆனால் தாய்மையின் மனமோ தன்னைத்தானே கொண்டாடி மகிழ விரும்பாது. தனக்கான வாசனையைத் தானே உணராத மலரின் புன்னகை காண்போருக்கு மகிழ்வை பிறப்பிப்பதைப் போல தனக்கான விருப்பங்களைப் புதைத்துக் கொண்டு தன்னை நம்பி நின்றிடும் குடும்பத்தின் உயர்வைக் கொண்டாடிடும் உள்ளம் தாய்மையன்றி வேறொன்றுமில்லை. அத்தகைய தாய்மையின் கரங்களைக் கைவிடாது பிடித்துக் கொள்ளும் உயிர்கள் தங்களின் வாழ்வை சிறப்பான உயரத்துக்கு எடுத்துச் சென்று விடுகின்றன.
குடும்பத்தின் உயர்வில் அன்றாட நிகழ்வுகள் இடைவிடாது நடந்தால் மட்டுமே இயக்கம் சீரான ஒன்றாக மாறி இன்பத்தைக் கொடுக்கும். இல்லறத்தை நல்லறமாக்கும் எல்லா செயல்களிலும் ஆணின் பங்கு இருக்கிறதா என்பதை பட்டியலிடுகையில் விடுபடுதல் வரலாம். ஆனால் பெண்களின் நுழைவுகள் இல்லாது பிரபஞ்சமும் அசைவதில்லை என்பதைப் போன்றே குடும்பத்தின் செயல்களும் அமைந்து விடுகின்றன.
சமையலறை என்னும் ஒற்றை அறைக்குள் சிறைப்பட்டுப் போயினும் தன்னைச் சுற்றியே வீட்டின் அசைவுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் தாய்மையின் நெஞ்சம் போற்றப்பட வேண்டும் பாராட்டப்பட வேண்டும். ஆனால் நம்மை நாமே கவனித்துக் கொள்ளும் உலகத்தில் இருந்து விடுபட்டு வேகமான ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கையில் நின்று நிதானித்து கவனித்துச் சொல்லும் கனிவான சொற்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
நின் நெஞ்சு நேர்பவள் நூலின் வழியே தாய்மையின் தவத்தையும் தனிச்சிறப்பையும் பேரன்பினாலும் பெரு மகிழ்வினாலும் எழுதிப் பார்த்து நிறைவு கொள்கிறது கவிஞரின் மனம். தவறு செய்யும் மனங்களை மன்னிப்பதில் தொடங்கும் பெண்களின் அன்பு வீட்டிலும் பெரியவர்களின் தவறுகளை பெரிது படுத்தாது மன்னித்தும் மறந்தும் கடந்து விடுகிறது..

"அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான் அப்பாவுடைய
என்னுடைய
இன்ன பிற ஆண்களுடைய
கறைகளை
மனதின் எரவானத்தில்
யாரும் பாராமல்
ஒளித்து வைத்தே இருக்கிறாள் "

என்பதான கவிதையின் வழியே தனக்கான வலிகளை வேதனைகளை குடும்பத்தில் பெரிதாக்கிடாமல் தாங்கிக் கொள்ளும் தாய் தான் எல்லா ஆண்களின் நடத்தைக்கும் அடித்தளம் இடுகிறாள்.
பொம்மைகள் மீதான நேசமும் விளையாட்டுகள் மீதான பிரியமும் வளர்ப்பு உயிரிகள் மீதான அக்கறையும் பெண் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஆனந்தத்தை உருவாக்கி விடுகின்றன தங்க மீன்களை வளர்க்கும் குழந்தை நாளடைவில் மீன் தொட்டிக்குள் நீந்தியுடியே தனது வாழ்வை நகர்த்துகிறது என்பதை வாசிக்கையில் இளமைப் பருவத்தின் கவலையற்ற பொழுதுக்குள் நாமும் நுழைந்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தை விதைக்கிறது.
" எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்பத்துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள் "

என்ற வரிகள் நமக்குச் சொல்லும் பாடத்தை இன்றும் எல்லோர் இல்லங்களிலும் காண முடியும். விரும்பி அன்பாலும் பாசத்தாலும் சுவைபட தயாரித்த உணவைக்கூட வீட்டில் எல்லோருக்கும் பரிமாறி விட்டு மிச்சத்தை மட்டுமே ருசி பார்க்கும் எத்தனையோ பெண்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே உணவு மட்டுமல்ல தனக்கான கனவுகள் தனக்கான கட்டமைப்புகள் என எதிலும் பெண்கள் தனியான அட்டவணையை அவ்வளவு எளிதில் நீட்டி விடுவதில்லை.
பொதுவெளியிலும் கையறு நிலையிலும் தவித்துக் கிடக்கும் உயிர்கள் மீதான பெண்களின் மனப்பார்வையை காட்சிப்படுத்தி இருக்கும் கவிதைகளில் உலகத்தின் மீதான பச்சையம் நிரம்பி வழிகிறது உயிர்களின் மீதான கருணையும் கை நீட்டலும் நீண்டு நெகிழ்கிறது. மருந்து வாங்கப் போதுமான பணம் இல்லாத நிலையில் கிழவி அறியாமலும் மொத்த மருந்துகளையும் கொடுத்துவிட்டு இடிக்கும் கணக்குக்கும் பிடிக்கும் சம்பளப் பணத்திற்கும் கவலைப்படாத பெண்ணின் மனதில் விளையும் அன்பே அவளுக்கான வலி நிவாரணியாக மாறிவிடக் கூடும் என்பதை ரசனையுடன் விளம்புகிறது வலி நிவாரணி கவிதை.
ஆசைகளின் கோட்டைக்குள் தனக்கு பிடித்தவற்றோடு உறவாடி விளையாடும் பெண்களின் பருவத்தில் எல்லா நாளும் சிறப்பாய் அமைவதில்லை. காலமும் பருவமும் பெண்ணை குடும்ப அமைப்பிற்குள் நுழைத்து விடுகையில் தனக்கான பிடித்தமானவைகளை தொலைத்து விட்டு ஓட வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொள்ளும் நிலையின் கையறு கணத்தை பதிவு செய்கிறது டெய்ரி மில்க்குகளை அடுக்குபவள் கவிதை.
மகளுடனான உரையாடல்களை காட்சிப்படுத்தும் பல கவிதைகளில் சூழலியில் பார்வையும் இயற்கை வளத்தின் மீதான கவிஞரின் நேசமும் சிறப்புற வெளிப்படுகின்றன. மலைகளை காடுகளை பாதுகாக்க வேண்டிய அமைப்புகளையும் அதில் பொதிந்துள்ள நுண் அரசியலையும் பகடி செய்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
இயற்கையும் பெண்ணும் சற்றொப்ப சமமானவர்கள் எனலாம். இருவருமே தனது வாழ்வை பிறருக்காக அமைத்துக் கொடுப்பதிலும் பிறரின் நலனுக்காக இடையறாது உதவுவதிலும் உழைப்பதிலும் சிறப்பானவர்களே. அதனால் தான் கவிஞரும் பெண்மையைப் போற்றும் எண்ணங்களுக்குள் இயற்கை நலத்தையும் பேணிக் காக்க அறைகூவல் விடுக்கிறார்.
"எல்லா காலங்களிலும்
மந்திரங்களால்
எங்களை காக்கிறவள்
தனக்கென ஒரு போதும்
சுழற்றியதில்லை
தன் மந்திரக்கோலை"

என்ற கவிதை வரிகளே இந்த நூலின் ஒட்டுமொத்த ஆழ்மன எண்ணத்தை விளக்கி விடுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் பெண் குழந்தைகளைப் பெற்றோரின் அச்சமும் பயமும் அதிகரித்து வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடுமோ என்ற காலகட்டத்தில் பெண்கள் மீதான புரிதலையும் அன்பையும் நமக்குள் விதைக்கும் நின் நெஞ்சு நேர்பவள் எல்லோர் மனதிற்குள்ளும் நல்லாட்சி புரிவாள் என்பது நிச்சயம்.

- நூல் அறிமுகம் கவிஞர் இளையவன் சிவா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக