திங்கள், 11 மார்ச், 2024

நின் நெஞ்சு நேர்பவள் கவிதை நூலுக்கு கவிஞர் ஜி.சிவக்குமார் நூல் அறிமுக உரை

எனது நின் நெஞ்சு நேர்பவள் கவிதை நூலுக்கு எழுத்தாளர் ஜி.சிவக்குமார் அவர்கள் எழுதிய நூல் அறிமுக உரையை இங்கு பகிர்கிறேன்... 

நின் நெஞ்சு நேர்பவள்


கவிதைகள்


- இரா.பூபாலன்

பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு
பக்கங்கள் 72
விலை ரூ120
தொடர்புக்கு 9842275662

குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய். அது தெரிந்த போதும் அன்பே, மனம் அதையேதான் எதிர்பார்க்கும் என்று தாமரையின் திரைப் பாடல் நினைவில் உள்ளதா? பெண்களுக்கு, அது பொய்யாக இருந்தாலும், தன் அழகைப் புகழும் ஆணைப் பிடிக்கும்.
பெண்களுக்கு தன் அழகைப் புகழும் ஆணை விட, தன் வலியை உணர்ந்தவனை ரொம்பவும் பிடிக்கும்.
கவிஞர் இரா.பூபாலனின், நின் நெஞ்சு நேர்பவள் என்கிற இந்தத் தொகுப்பு அந்த வகையில் பெண்களுக்கும்,பெண்களின் வலிகளை உணர்ந்த ஆண்களுக்கும் மிக மிக நெருக்கமான ஒன்றாக இருக்கும்
அப்பாவின் குளியலறை எரவானத்தில் பத்திரப்படுத்தி இருந்த அப்பாவின் பழைய லுங்கிச் சதுரங்கள்,இன்று பஞ்சடைக்கப்பட்ட பாதுகாப்பான நாப்கின்களாக மாறியிருக்கலாம்.ஆனால்,வலி மாற்றமின்றி அப்படியேதானே தொடர்கிறது.அந்தத் துணிகளில் படாமல் போன செந்துளிகளில் ஒரு துளி நான் என்று சொல்லும் பூபால வார்த்தைகளை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளுக்காக தன் கைவளை ஒன்றை மந்திரக்கோலாக மாற்றி, எதை எதையோ தந்து, தனக்கென ஒருபோதும் மந்திரக் கோலை சுழற்றிக் கொள்ளாத, விளையாட்டுகளிலும்,வாழ்விலும் தோற்றுத் தோற்று அப்பாவையும், நம்மையும் ஆளாக்குகிற அம்மாவைப் பற்றி ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மழையைப் போலவே, அவையும் ஒரு போதும் வாசிக்கச் சலிப்பதில்லை.
எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்ப துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள்
இது அம்மா.
கோபமென்றால்
எதையாவது உருட்டுவாள்
நிலம் அதிர நடப்பாள்
முந்தைய நாள்
விருப்பப்பட்டு கேட்ட உணவை
சமைத்து வைத்துவிட்டு
இது மனைவி.
நீங்கள் சொல்வது உண்மைதான் பூபாலன்.தாயோ,மனைவியோ. பெண்கள் அப்படித்தான். அவர்களால் அப்படித்தான் இருக்க முடியும்.
உடற் கூராய்வு அறைக்கு வெளியே அப்பாவுக்கு வலிக்காம ஊசி போடுங்க என்று சொல்கிற சிறு பெண், பழைய நெகிழிப் போத்தலொன்றில், நிகழ்காலத்தைப் பூக்கும் செடி வளர்ப்பவள், பணப் பற்றாக்குறையால் இரண்டு நாளைக்கு போதும் என சொன்ன முதுமகளிடம் தனது சம்பளத்தில் பிடிக்கப்பட போகும் தொகையும் சேர்த்து மொத்த மருந்துகளையும் தரும் மருந்து விற்பனை கடைப் பணிப் பெண், மழையை கைகளில் ஏந்தி செடி மீது தெளிக்கும் தொடர் விளையாட்டை அத்தனை மகிழ்ச்சியோடு விளையாடுப்வள், இன்னும் குழந்தை இல்லையா என்ற கேள்வியை அப்புறம் வேறு என்ன என்று சிரித்த திசை மாற்றுகிறவள், ஒரு நிறை குப்பி தூக்க மாத்திரைகளை விழுங்குவதற்கு முன் கணம் மேலெழும்பி வந்த ஒரு முகத்தை முதலில் விழுங்குகிறவள், சில நாட்கள் உடனிருந்து ஒரு கடும் கோடை காலத்தை ஆணுக்கு பரிசளித்து சென்றவள்,
இப்படி கவிதைகளில் இரத்தமும் சதையுமாய் உயிர்ப்போடு நம் முன் அசையும் எத்தனை எத்தனை பெண்கள்.
இத்தனை பெண்களால் சூழப்பட்டிருக்கும் பூபாலன் அதிர்ஷ்டசாலி பூபாலனைச் சூழ்ந்திருக்கும் பெண்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்
அப்பாவுக்கு மகளுக்குமான உரையாடல்களாய் அமைந்த கவிதைகள் மிக அழகாக இருக்கின்றன.இந்த கவிதையைப் பாருங்கள்
மலைக் கோயில்
எப்பொழுதிருந்து இருக்கிறது அப்பா?
நாம் பிறப்பதற்கு முன்பிருந்து..
மலை எப்போதிருந்து
இருக்கிறது அப்பா?
கடவுள் பிறப்பதற்கு
முன்பிருந்து.
இப்படி ஒரு தகப்பனைப் பெற்ற குழந்தை மிகத் தெளிவாக மிகச் சரியாக வளரும்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும்
சாலையில் கடக்கும்
ஏதோ ஒரு புல்லட் சத்தத்துக்கும்
சேலையைச் சரி செய்து கொள்வாள்
கண்ணாடியை ஒரு முறை
பார்த்துக் கொள்வாள்
நாக்கைக் கடித்துக் கொண்டு
நிகழ் காலத்திற்கு மீள்வாள்.
இந்தச் சிறு கவிதையில் விரிகிற பெருங் கதையை நீங்களும் உணர்கிறீர்கள் தானே?
முழு ஆடையும் உடுத்தி
முகமெங்கும் வண்ணம் தீட்டி
சலங்கைகள் அதிர
மேடையில் ஏறும் கணத்தில்தான்
சுண்டியிழுக்கிறது வயிறு
நாட் கணக்கு பிசகி
எதிர்பாராத கணத்தில் பொங்கத் துவங்கி விட்டது
மாதாந்திரச் சிவப்பு
என்று துவங்குகிற,குங்குமத்தில் சிரிக்கும் காளி, கவிதையை உயிர் நடுங்காமல் உங்களால் வாசித்துக் கடந்து விட முடியுமா?
சொல்லாமல் வந்துவிட்ட விருந்தாளியாய் குருதி பெருகும் போதும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட மேடையில், துளிச்சிவப்பும் மேடையில் தெறித்திடக் கூடாது என்ற அச்சத்துடன் அவள் ஆடித்தானே தீர வேண்டியிருக்கிறது. இது மேடையில் ஆடுபவர்களுக்கு மட்டும் தானா? வீட்டிலும், அலுவலகத்திலும் இருக்கும் பெண்களுக்குமானதுதானே?
தொகுப்பின் கவிதைகளை,இது நாள் வரை என் வாழ்வில் நிறைந்திருந்த,நிறைந்திருக்கும் பெண்களையெல்லாம் நினைத்தபடிதான் வாசித்தேன்.தொகுப்பை வாசிக்கிற யாரும் அதைத்தான் செய்வார்கள்.
எங்கிருந்தோ ஒரு பெண்ணின் வழியாகத்தான் இங்கு வந்தோம். அவளால்தான் ஆளானோம்.அம்மாவென்றும்,பாட்டியென்றும், அத்தையென்றும்,சகோதரியென்றும், தோழிகள் என்றும், காதலியென்றும், மனைவியென்றும், பிள்ளைகளென்றும், பேத்திகளென்றும், பெண்ணோடு தோன்றி, பெண்ணோடு வாழும் இந்த வாழ்வில், நம்மில் எத்தனை பேர் பெண்களுக்கு அவர்கள் தந்ததில் ஒரு சிறு துளியையாவது திருப்பித் தந்திருக்கிறோம்? இந்த தொகுப்பின் வழி இரா. பூபாலன் அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.

நூல் அறிமுகம் : கவிஞர் ஜி.சிவக்குமார்




இந்த நூல் அறிமுகம் புக்டே இதழிலும் வெளியானது..

வாசிக்க :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக