புதன், 13 மார்ச், 2024

ஹோ என்றொரு கவிதை - கவிதை நூல் அறிமுகம் - கவிஞர் ஜி.சிவக்குமார்

 ஹோ … என்றொரு கவிதை


                                                                                  
இரா.பூபாலன்
பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு
பக்கங்கள் 96
விலை ரூபாய் 130

தொடர்புக்கு 9842275662
தொகுப்பில் பிள்ளையார் சுழியாய் அமைந்திருக்கிறது அப்பாவின் கையெழுத்து கவிதை. வங்கியில், மதிப்பெண் அட்டையில் ராமசாமி என்று முயற்சித்து, சமயங்களில், ராமாமி என்று ஆகிவிடுகிறதென்றாலும்,தான் படிக்கா விட்டாலும் தன் மகனை பட்டதாரி ஆக்கிய அப்பாவின் கையெழுத்து அத்தனை அழகுதானே.
தடுக்கி விழும் போதெல்லாம் கடுமையான வார்த்தைகளால் கடுகடுக்கும் அப்பா, புகைப்படத்திலிருந்து வாழ்நாளில் கடைசி வரைக்கும் காட்டாத ஒரு புன்னகையைக்,கருணையைக் காட்டுகிறார்.
ஒரு கவளத்தை உருட்டி தட்டில் ஒதுக்கி கண்கள் மூடி வேண்டிக் கொண்டதும் உண்ணத் துவங்குகிற அப்பாவை,மூதாதையர் நிலத்தை கைகளில் ஏந்தியபடி கனவில் வருகிற அப்பாவை,வெள்ளை துணியால் சுற்றப்பட்ட மண் குடுவையில் அடைத்துச் சுமந்தபடி ஆறு நோக்கி நடக்கிறவனோடு சேர்ந்து வாசிக்கிற நம் கண்களிலும் குருதி வழிகிறது.
நான் இருக்கிறேன்
பயப்படாதே
குதி குதி என்ற அப்பா
அப்படியே ப்ளக் ப்ளக் என்று
அடங்கிப் போனார்.
இந்தத் துயரை வாசிக்கையில்,கொழுமம் அமராவதி ஆற்றில் ப்ளக்,ப்ளக் என்று அடங்கிப் போன அப்பாவின் நினைவுகளில்,அதிர்ந்து கொண்டிருந்தது மனம். வெகுநேரமான பின்புதான் அடுத்த கவிதையை வாசித்தேன்.
யாரோ அழைத்தபடியே இருக்கிறார்கள்
அந்த பெயரை
யாராவது நினைவூட்டியபடியே இருக்கிறார்கள்
விளம்பரப் பலகைகள்
பத்திரிகைகள்
புத்தகங்கள்
என
கண்களில் நிறைந்து கொண்டே இருக்கிறது
அந்தப் பெயர்
ஒரு பெயரை மறக்க நினைப்பது
எத்தனை அறிவீனம்
மனம் கழுவிப் போன காதலியின் பெயரா? மரணம் எனும் கரிய பறவை கவ்விச் சென்ற நெருங்கிய உறவொன்றின் பெயரா? நெருங்கி பழகி மனம் கசந்து பிரிந்த உறவின் பெயரா?எத்தனை எத்தனை சாத்தியங்கள்.ஆம்.மறக்க நினைப்பது அறிவீனம்தான்.
தெய்வங்கள் ஊருக்கு போய் விட்டன
என சொல்கின்ற நாட்களில்
என்ன செய்கின்றன குட்டி தெய்வங்கள்?
எதைக் கேட்டு அழுகின்றன?
குட்டி தெய்வங்களின்
விருப்பப் பொருள்கள் யாவை?
யாருடன் விளையாடிக் கழிப்பார்கள்?
எந்த பள்ளியில் படித்து
எந்த வீட்டுப் பாடத்துக்கு அடி வாங்குவார்கள்?
தெய்வங்கள் ஊருக்குர் போய் விட்டன
என்கிற ஒரு பொய்யைச் சொல்லி
சமாளிப்பவனாக மட்டும்
என்னை நிறுத்தி விடாதீர்கள்
குட்டி தெய்வங்களின் முன்.
அந்தகனான மரணம், குழந்தையின் பெற்றோர்களை கூர் நகங்கள் நிரம்பிய தன் கால்களால் கவ்விச் சென்று விட்ட கொடும் நிகழ்வுக்கு பின் தனித்து விடப்பட்டு, உறவினர்களின் அரவணைப்பில் வாழும் விவரம் தெரியாத சிறு குழந்தைகளின் பெருந் துயரைப் பேசுகிறது இந்தக் கவிதை.இது எல்லோருடைய வேண்டுகோளும்தானே?
சக மனிதர்களுடன் உரையாடல்கள் அல்ல, புன்னகைத்தல் கூட குறைந்து போய்விட்ட ஒரு இயந்திர வாழ்வின் எதிர்ப்படுகிற மனிதனின் ஒரு புன்னகை தன் கைவசம் இருக்கும் பொருளை இறுகப் பற்றிக்கொள்ள வைக்கிற இவ் வாழ்வின் எதார்த்தத்தை பேசுகிறது இந்த கவிதை
வங்கியில் பணம் எடுத்துவிட்டு
திரும்புகையில்
யாரோ ஒருவர் புன்னகைத்துச் செல்கிறார்
பையைத் தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டே
வீடு திரும்புகிறது மனது.
காத்திருக்கும் உடலை அருபமாகத் தடவித் தர ஒரு வளர்ப்பு மிருகம் என குழைகிற கைவிடப்பட்ட வீடு ஒரு அழகிய கற்பனை.
ரவிவர்மாவே உங்களை வரைந்து தரட்டுமே. அது,
ஒரு வட்டம் முகம்
இரு குட்டி வட்டங்கள் கண்கள்
நீள் வட்டம் வாய்
கோணல் கோடென மூக்கு
நேர்கோட்டில் மேலிரண்டு கிளைகள் கைகள்
கீழிரண்டு கிளைகள் கால்கள்
அதன் கீழே
அப்பா என் கதாநாயகன் என
ஓர் ஆசீர்வாதம்
இப்படி உங்கள் குழந்தை வரைந்த ஓவியத்திற்கு ஈடாகுமா?
நானும் ஒரு காலத்தில் முதியவர்களாக போகிறவர்கள்தானே? நாம் ஏன் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முதியவர்களை,தொங்கு சதைகளாகவே நினைக்கிறோம்? நினைவுகளில், ஏராளமான விஷயங்களை, வாழ்வைச் சுமந்திருக்கும் அவர்கள் அருகில் அமர்ந்து பேச ஏன் மறக்கிறோம்? ஏன் மறுக்கிறோம்? ஏன் அவர்களைக் கைவிடுகிறோம்? இப்படி,எத்தனையோ கேள்விகளை நமக்குள் எழுப்புகிற துயர் கதை இது. ஆம்.கவிதையல்ல, கதை.வாசித்துப் பாருங்கள்.
பாட்டியுடன் கோபித்துக் கொண்டு
வீட்டை விட்டு போய்விட்ட தாத்தாவை
தெருவெல்லாம் தேடித் திரிந்தோம்
யாரும் காணாதவாறு
மொட்டை மாடியில்
தண்ணீர் தொட்டி நிழல் மூலையில்
மணிக்கணக்கில் அமர்ந்திருந்தவர்
ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய் என்கிற
பாட்டியின் தேம்பல் கேள்விக்கு
இதற்கு மேல் பாதை இல்லை என்றார்.
கவிஞர் சிற்பி ஐயாவுடன் பொன்மாலைப் பொழுதுக்கும் கொள்ளுப் பேத்தி ஆதிரையின் குறும்புகளும் ஹோ.. என்ற ஒரு கவிதையாகிறது. செருப்புகள் மாட்டிய கைகளால் உந்தி உந்தித் தள்ளியபடி,சிக்னலில் புத்தகங்கள் விற்பவள், கவனியுங்கள்,யாசிப்பவளல்ல.குந்தி அமர்ந்து சாலையிடம் எங்கு செல்கிறாய், என்று கேட்பவன், தூமைப் பஞ்சின் பெயரை,கடைகளில் உரக்கச் சொல்லிக் கேட்பவன், தனக்குத் தானே உற்சாகமாக விளையாடும் சிறுவன், கவிதைக்குள் அத்துமீறி நுழைபவர்கள், அசந்தர்ப்பங்களில் குறுக்கே வந்து தொலைப்பவர்கள்,சிரமப்பட்டு அடுக்கிய பானைகள், நொறுங்கி விழ,குத்தாட்டம் போடுகிற கிழவன்,நினைவில் நெளியும் அரவங்கள், உடலெங்கும் கண்கள் முளைக்கிற புத்தன்
இப்படித் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களும், உறவுகளும்,உணர்வுகளுமான வாழ்வை அழகிய வரிகளில் பதிவு செய்திருக்கிற கவிதைகளின் தொகுப்பு.
அழகான அட்டைப்படத்திற்கும்,நேர்த்தியான வடிவமைப்பிற்கும் வாழ்த்துகள்

நூல் அறிமுக உரை : கவிஞர் ஜி.சிவக்குமார்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக