வெள்ளி, 24 ஏப்ரல், 2020

காக்கைமை - வானமெங்கும் கருமையை மிதக்க விடும் கவிதைகள்

  காக்கைமை - வானமெங்கும் கருமையை மிதக்க விடும் கவிதைகள்

பறவைகள் நமக்கு விருப்பமானவை. நமது வளர்ப்புப் பிராணிகளில் பறவைகள் பிரத்யேக இடம் பிடிப்பவை. கிளிகளை,குயில்களை, புறாக்களை விரும்பும் நாம் காக்கைகளை விரும்புகிறோமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. காக்கைகள் நாம் பெரிதும் பொருட்படுத்தாத பறவைகள். நமது வரலாற்றில் காக்கைகளுக்கு நல்ல இடம் உண்டு. சங்க காலத்தில் இருந்தே நமது இலக்கியங்களில் பதிவான; தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவில் இருந்த பறவை காக்கை. காக்கைக்குச் சோறிடுதல் தமிழரின் பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடரும் பழக்கங்களில் ஒன்று. நம்மோடு, நம் நிலத்தில் எண்ணிக்கையில் நிறைந்து இருக்கும் இந்தப் பறவை நவீன இலக்கியத்தில் மிக அரிதாகவே பதிவாகிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில், காக்கையை பிரதானப் பாடுபொருளாக்கி காக்கைமை என்கிற ஒரு நவீன கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் கவிஞர் பூர்ணா.

குரல்கள் ஒப்பீடு எதற்கு
குயிலின் வளர்ப்புத் தாய் காக்கை

என்று முதல் வரியிலேயே தனது கவிதையில் அரசியலைத் துவங்கிவிடுகிறார். குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது, அவை காக்கையின் கூட்டில் முட்டையிட, காக்கை அதனை அடை காத்து குஞ்சு பொறிக்கும் என்பது நாம் படித்துத் தெரிந்துகொண்ட உண்மை. குயிலின் குரலை உயர்த்திப் பேசும் போதெல்லாம் ஒப்பிட நமக்குக் கிடைப்பது காக்கையின் குரல் தானே ? ஒப்பீடு எதற்கு என்கிற கேள்வியோடு முடியும் இந்தக் கவிதையில் குயிலாகவும் காக்கையாகவும் நாம் எதையும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்; குறிப்பாக குழந்தைகளைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் போது காக்கைமை குழந்தைமையைக் கவனிக்கச் செய்யும் கவிதையுடன் துவங்குகிறது.

எச்சத்தில் வேப்பமரங்களை
விதைக்கும் காக்கையை
நிழலில் படுத்துக் கொண்டு
கல் எறிகிறார்கள்

இந்த பூமியில் இருக்கும் பெரும்பங்கு மரங்களையும் வனங்களையும் விதைத்து உருவாக்கியது பறவையினங்களும் விலங்கினங்களும் தாம். நாம் அவற்றை அழிப்பதில் தான் குறியாயிருக்கிறோம் என்பதை உணர்த்தும் கவிதை இது.

நண்பகல் மணியடித்தவுடன்
பறந்து வரும் காக்கைகள்
பள்ளி விடுமுறையில் எங்கு திரியும் ?

மனிதம் துளிர்க்கும் கவிதைக் கேள்வி இது. இந்தக் கவிதை சொல்லும் துயரம் புரிந்தது. நான் சொல்ல வந்தது இந்தக் கவிதைக்கான அழகான பதில் ஒன்றை. பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் கிராம அரசுப் பள்ளியில் இந்தக் கதை நடந்தது. மதிய வேளைகளில் உணவுக்கு வரும் காக்கைகள் கோடை விடுமுறையில் பசிக்கு அலைய வேண்டாம் என நினைத்த சில மாணவர்கள் தினமும் தங்களது மதிய உணவை பள்ளிக்கே கொண்டு வந்து உண்டு பறவைகளின் பசியாற்றியிருக்கிறார்கள். கூடவே கோடை விடுமுறையில் பள்ளி வளாகத்தைத் தூய்மைப் படுத்தி மரக்கன்றுகள் நட்டுப் பராமரித்து பசுமையாக்கியிருக்கிறார்கள்.

பசியாறிக் கூவுகிறது குயில்
பசியாறக் கத்துகிறது காக்கை

என்கிற கவிதையிலும், பொதுப் புத்தி உயர்த்திப் பிடிக்கும் ஒன்றை, காரியமின்றி அது கூவாது என்பதாகக் கட்டுடைக்கிறார். பசியாறக் கத்தும் காக்கை, சக காக்கைகளை அழைத்து உண்பதைக் காட்சிப் படுத்துகிறார்

காக்கையை அரசியல் குறியீடாகவும் சமூகக் குறியீடாகவும் பயன்படுத்தி பல கவிதைகளை எழுதியிருக்கும் கவிஞர் காக்கைகளுக்காக இப்படி இரங்குகிறார்

அந்தியில் கூடு திரும்பாத காகங்களைக்
கணக்கெடுப்பது யார் ?

அதானே, காக்கைகள் கூடு திரும்பினாலும் திரும்பாமல் போனாலும் கூட்டைத் தவிர யார் கவலைப்படக் கூடும் ? எளிய ஒன்றின் இருப்பும் இல்லாமையும் யாரையும் சிஞ்சிற்றும் அசைத்திடாது தான்.

காக்கைப் பதிகம், காகம் இனிது, காக்கைமை, காக்கையின் நிலம், காக்கை நாற்பது என காக்கைகளுக்கான அதிகாரங்களாக கவிதைகளை அடுக்கியிருக்கும் கவிஞர் மேலும் சில பாடுபொருட்களைத் தொட்டிருக்கிறார். அவையும் இந்த வகைமைக்குள் வர வேண்டியவை தாம். பறை நாற்பது என்ற தலைப்பில் பறை இசைக்கருவியைப் பற்றிய கவிதைகள் நாற்பது உள்ளன.

பதமாக நெருப்பில் காய்ச்சி
காற்றின் காது கிழிய அடித்தோம்
விழவேயில்லை சாமியின் காதுகளில்

இந்தக் கவிதையும் விளிம்பு நிலை மக்களின் அவலநிலையைப் பேசும் கவிதைதான். அதிகாரத்தின் காதுகளிலாகட்டும் ஆண்டவனின் காதுகளிலாகட்டும் எளிய குரல்கள் சென்று விழுவதேயில்லை. கவிதைகள் அந்தப் பணியைச் செய்யட்டும்.

பந்து விளையாட்டில்
என்னையும் சேர்த்துக்கொண்டார்கள்
சாக்கடையில், மலக்குழியில் பந்து விழுந்தால்
எடுத்துத் தருவதற்கு

இந்தக் கவிதை ஒரு ஆணியின் கூர்மையென இறங்குகிறது இதயத்தில். ஒரு கவிதை செய்ய வேண்டியது அது தானே.

இந்நிலத்தில் காக்கைக்கென்று ஒன்றுமில்லை
அதன் இறகுகளும், சூடான உதிரம் தவிர

அந்தச் சிறகொடிந்த காக்கையின்
உதிர்ந்த இறகுகளிலிருந்து
எழுதிக் கொண்டிருக்கிறேன்
அதன் வரலாற்றுப் பக்கங்களை

எளிய, மிக எளிய பறவையொன்றின் இறகில் அதன் வரலாற்றை எழுதிக் கொண்டிருப்பதாக இந்த சுய அறிவுப்பு சொல்கிறது. வரலாறு புனையப்பட்டது போதும், எளிய மனிதர்களின் கைகளில் அவை ரத்தமும் நிணமுமாக ஆவணமாகட்டும். அது தான் நாளை பாடங்களாகும்.

காக்கைமை தொகுப்பில் பூர்ணா காக்கைகளாகப் பறக்கவிட்டிருப்பவை அனைத்தும் விளிம்புநிலை வாழ்வின் குறியீடுகள் தாம். காக்கைமை என்பது ஒரு புதிய தத்துவமாக புதிய கோட்பாடாக உருவாகியிருக்கிறது இந்தத் தொகுப்பில்.

தொடர்ந்து பறக்கட்டும் காக்கைகள்.


வெளியீடு : குறி வெளியீடு, வேடசந்தூர், திண்டுக்கல்
ஆசிரியர் : பூர்ணா தொடர்புக்கு : 9443827346

11 கருத்துகள்:

  1. சிறப்பு பாராட்டும் மகிழ்வும்

    பதிலளிநீக்கு
  2. காக்கையின் சிறகில் கவிதைகள் எழுதிச்செல்லும் பூர்ணாவின் முயற்சிக்கு பூபாலன் அவர்களின் வானம் விரிந்திருக்கிறது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான தொகுப்புக்கு சிறப்பான அறிமுகம்.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை. அறிமுகமும் அருமை

    பதிலளிநீக்கு
  5. பூபால் சகோ..கவிஞனும் சிற்ப கலைகாரின் விழிகளுமாய் உங்கள் மனதை நான் உங்கள் கவி பணிகளில் நான் கண்டுயிருக்கிறேன்...உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் மயிலிறகின் ஒவ்வொரு நிறத்தின் முக்கியத்துவத்தை மனசுணர்கிறது..எல்லாவற்றையும் எதோடு எப்படி ஒப்பிடுவது என உங்கள் கவிதை உரையிருணர்கிறேன்..மிக அருமை அதிலும் எச்சத்தில் வேப்பமர கவிதை அருமையான வெளிபாடு..வாழ்த்துகள் உங்களுக்கும் பூர்ணா சகோவுக்கும்..

    பதிலளிநீக்கு
  6. அருமையான அறிமுகம். மனம் நிறைந்த வாழ்த்துகள். காக்கைமை...மிகவும் சிறப்பு. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு
  7. வானம் முழுவதும் பறக்க விட்டுள்ள காக்கைமை பாடலுக்கு பாராட்டுக்கள்!
    உடுவை.எஸ்.தில்லைநடராசா--இலங்கை

    பதிலளிநீக்கு