ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

தனிமையின் கண்களுக்கு ஒளியூட்டல்

இந்த மாத கொலுசு மின்னிதழில் எனது இரண்டு கவிதைகள் காணொலியாக வெளியாகியுள்ளன..

வாசிக்கவும், பார்க்கவும் இங்கு ...

https://youtu.be/fuRx2A1EqDo

கவிதை ஒன்று

தனிமை
வரம் சாபம் என
யாவரும் மதில்மேல் பூனையாகியிருக்க
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாகியிருக்கிறது
தனிமை

தனிமையின் மிகப்பெரிய கதவுகளை
இந்தக் காலம்
திறந்து விட்டிருக்கிறது
மற்றமையின் கதவுகள்
ஒவ்வொன்றாய் அடைத்துக்கொண்டபோது
இந்தக் கதவுகள் திறந்து கொள்வது
இயல்பு தான்

தனிமையின் வாசலுக்கு
வந்து சேர்பவற்றில்
யாவும் இருக்கின்றன

மிக அதிகமாகக் குரூரம் படையெடுக்கிறது
வெறுமனே கடந்து போகும்
சிற்றுயிர் ஒன்றின் தலை திருகி
நசுக்கி ரசிக்கிறது தனிமை

கண்காணிக்கும் கண்களைப் பற்றிய
பயமேதுமின்றி
அந்தரங்கங்களை அலையேற்றி
விடுகின்றது 

ஒப்பனைகளின் அவசியமற்றுப் போன
தனிமை
தனது சிரங்குகளை கீறிச் சுகம் காண்கிறது
நிணவாடையையும் ரசித்துத் தொலைக்கிறது

ஒரு சாத்தானைப் பழக்கப்படுத்துவது
போல இருக்கிறது
ஒரு தனிமையை
நல்லூழின் பக்கமாகத் திசை திருப்புவது

ஒரு வெறிநாயைக் கட்டிப் போடுவது போல
தூணில் கட்டி
பயந்து பயந்து
அதன் முன்னர்
அறத்தைப் பிசைந்து ஊட்டுகிறேன்

குருதி, மாம்சம் , என பழக்கப்பட்ட அது
மிக மெதுவாக
அறத்தின் பக்கமாக வர
கொஞ்சம் காலமாகும் தான்

ஒரு வளர்ப்பு மிருகத்துக்கான
பக்குவம் வந்த பின்பு
இசை
புத்தகம்
ஓவியம்
என்று ரசனையின் பக்கம்
அதைத் திருப்பியிருக்கிறேன்

இப்போதெல்லாம்
வாலைக் குழைத்தபடி
இந்தப் பத்துக்குப் பத்து
அறையைச் சுற்றி சுற்றி வருகிறது
யாதொரு குறையுமின்றி

பாருங்களேன்
அது இப்படி ஒரு
சுமாரான கவிதையைக் கூட
எழுதப் பழகிவிட்டிருக்கிறது இப்போது


கவிதை 2

தனிமையின் கணங்கள்
இருள் நிறைந்தவை

கடவுள் சிலைகளின்
கண் திறத்தல் போல
சில சடங்குகள்
இருக்கின்றன
தனிமையின் கண்களைத் திறப்பதற்கு

தனிமையின்
கண்களுக்கு ஒளியூட்டுவது
தனிமைக்கு உண்மையில்
இருட்டைப் பழக்குவது தான்

முதலில் முரண்டு பிடிக்கும்
பின்பு அது
கைகளில் அடைபட்ட
சிறு பறவையைப் போல
பழக்கமாகி விடக் கூடியது

தனிமைக்கு
ஒளியை அறிமுகப் படுத்துங்கள்
நிறங்களை அறிமுகப் படுத்துங்கள்
முதலில் கருப்பு
பின்பு நீலம்
பச்சை சிவப்பென

தனிமைக்கு
மெல்ல மெல்ல
வெளிச்சத்தைப் பழக்கப்படுத்துங்கள்
தனிமையிடமிருந்து
தப்ப
நமக்கு வேறு வழியில்லை

எப்போதாவது வாய்க்கும் தனிமைக்கும்
எப்போதும் உடன் இருக்கும்  தனிமைக்கும்
நம்மை நாம் ஒரு ஒளிக் கீற்றென
அறிமுகமாகிக் கொள்வோம்

தவறிவிட்டால்
தனிமையின்
அந்தகாரத்துக்குள்
நம்மை நாம் தொலைத்துவிடுவோம்

நீங்களும் உங்கள் கவிதைகளை கொலுசு இணைய இதழுக்கு படைப்பாகவோ, காணொலியாகவோ, ஒலிப்பதிவாகவோ அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக