வெள்ளி, 1 மே, 2020

ஆகுளி - சிறுபான்மைக்காக அதிரும் சிறு பறை


இந்த மாத படைப்பு தகவு இதழில் ஆகுளி கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய நூல் அறிமுக உரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசிக்க ஏதுவாக இங்கு ....






ஆகுளி - சிறுபான்மைக்காக அதிரும் சிறு பறை



தமிழ் மொழியில் ஒரு சொல் என்பது மிக நீண்ட ஆயுளைக் கொண்டது. வேறெந்த மொழியை விடவும் தமிழில் தான் சொற்கள் பன்னெடுங்கால ஆயுள் கொண்டவையாக சங்க காலத்தில் இருந்து இன்றைய காலம் வரைக்கும் வெகுமக்களின் புழக்கத்திலும் வழக்கத்திலும் இருந்து வருகின்றன. சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஏராளமான சொற்கள் இன்றளவும் மக்களின் பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றன என்பது தமிழன் தனது மொழியை சிதையாமலும் அழியாமலும் பல்லாயிரம் ஆண்டு காலம் காத்து வருகிறான் என்பதன் எடுத்துக்காட்டு. இன்றைய நவீன தமிழில் நாம் பழஞ்சொற்கள் பலவற்றைக் கைவிட்டு விட்டோம். மிகக் குறைந்த சொற்களுக்குள் புழங்கி நமது படைப்பின் எல்லையைச் சுருக்கிக் கொண்டோம். நாம் புழங்கிக் கொண்டிருக்கும் சில ஆயிரம் சொற்களுக்கு வெளியே நம் மொழி சில லட்சம் சொற்களுடன் ஒரு பேராழியாக நீண்டு விரிந்து கிடக்கிறது. அவற்றிலும் நாம் கற்றுத் தேர்ந்து கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் அவசியம். சொற்கள்,எழுத்து, பேச்சு வழக்கு இவை அனைத்தும் இணைந்து தான் ஒரு மொழியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும். ஒரு சொல் என்பது கூழாங்கல்லைப் போல பளபளப்பாக இருக்கிறது. கூழாங்கல்லைப் போலவே காலமெல்லாம் மொழியின் பிரவாகத்தில் உருண்டு உருண்டு தன் பளபளப்பைப் பெறுகிறது. இன்று நாம் பார்க்கும் கூழாங்கல் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும். நாம் பயன்படுத்தும் ஒரு சொல்லும் அப்படித்தான்.


கவிஞர் கீதாபிரகாஷ் வெளியிட்டிருக்கும் அவரது இரண்டாவது தொகுப்பின் பெயரைக் கேட்டதும் அந்தச் சொல் மிகப் புதியதாக இருந்தது எனக்கு. அந்தச் சொல் மிகப் புதியதன்று மிகப் பழையது. ஆகுளி அவரது கவிதைத் தொகுப்பின் பெயர். ஆகுளி என்று இணையத்திலும் இலக்கியங்களிலும் தேடிப்பாருங்கள் நிறைய செய்திகள் கிட்டும். இந்தச் சொல் நம் பண்டைய இலக்கியங்களான பெரிய புராணம், புறநானூறு, மலைபடுகடாம் உட்பட பல இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியும். ஆகுளி என்பது பறையின் வகையைச் சேர்ந்த ஒரு சிறிய இசைக்கருவி. குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த மக்கள், சிவ வழிபாட்டில் பயன்படுத்திய உடுக்கையைப் போன்ற சிறிய இசைக் கருவி. சரி ! இந்தத் தொகுப்பு இசையைப் பற்றியதா, இசைக்கருவிகளைப் பற்றியதா, பறையைப் பற்றியதா என்றால் இல்லை. ஆகுளி என்பது இங்கு காரணப் பெயர். சிறுமையைக் கண்டு அதிரும் சிறு பறை, சிறுபான்மைக்கு எதிராக குரலுயர்த்தும் ஒரு சிறிய கருவி இந்தக் கவிதைகள், இந்தக் கவிஞர். ஆம் , அதே தான்.

அடித்தவனும்
சொல்கிறான்
அமைதிகொள்
அழுதவனும்
சொல்கிறான்
அமைதிகொள்

நீதியைக் கொன்று
நம்பிக்கையைப் பலியிட்ட
இடத்தில்தான்
இனி
பஜனைகள் நடக்கும்

தரிசனம் வேண்டி
பிரவேசிக்கப் போனால்
பிரம்மாண்டமாக எழும்பி நிற்கும்
தூணில்
நிச்சயம் கேட்கும்
பாங்கொலி

நீதியைக் கொன்று நம்பிக்கையைப் பலியிட்ட இடம் என்று சொல்லும் இடமும், தூணில் கேட்கும் பாங்கொலியும் குறியீடுகளாக நம் சமகாலத்தின் நீதியென்ற பெயரில் நிகழ்ந்த அநீதியைக் காட்சிப் படுத்துகிறார். சமகாலத்தின் சமூகப் பிறழ்வுகளைப் படைப்பில் ஆவணப்படுத்துவது ஒவ்வொரு படைப்பாளனின் சமூகக் கடமை .

பெண்ணின் வலிகளை பெண் எழுதும் போது தெறிக்கும் உண்மையின் பெருவலி வாசகனுக்குத் தன் வலியாகக் கடத்தப்படுகிறது.  எப்போதாவது குருதி பார்க்கும் ஆண்களைப் போலில்லை பெண்கள் என்பது எத்தனை சத்திய வாக்கு.

உயிர் போய் உயிர் வரும்
பிரசவத்திற்குப் பின்பு
ஆட்டின் கோழியின் கல்லீரல் போல்கட்டி கட்டியாகக் கொட்டித்தீர்க்கும்
பெண் உடலின் சிவப்புக் குருதியை
வெறும் இரத்தமெ
எப்படிச் சொல்வது?
மோப்பம் பிடித்து வரும்

கழிவுத்தீட்டு
எப்போதாவது
குருதி பார்க்கும்
ஆண்கள் போலில்லை
பெண்கள்
மாதங்கள் தோறும்
குருதியின் வாடை
சுமக்கும் பெண்டீரை
எறும்புகளிடம் தப்பித்தல்
அத்தனை எளிதல்ல

எறும்புகளிடம் தப்பிக்க எத்தனை பிரயத்தனம் வேண்டியிருக்கிறது எப்போதும் பெண்டிருக்கு.

புதிதாக வந்தவர்களிடம்
பழைய ரகசியங்களை
ஒரு போதும் சொல்லாது
வாடகை வீட்டின் சுவர்கள்


புதிய நண்பர்களிடம் பழைய ரகசியங்களை மனிதர்கள் தான் சொல்லிவிடுகிறார்கள். பழைய நண்பர்களின் பழைய அன்பைத் துறந்துவிடுகிறார்கள். எத்தனை நினைவுகளைக் கிளறவிடுகிற கவிதை இது.

தன் கூவலை நிறுத்திச்
செய்வதறியாது
தலையசையாமல்
மரத்தின் கிளையில் அமர்ந்து
பெண்ணொருத்தியின் கதறலை
வெறுமனே கண் அகலப் பார்க்கிறது
ஒற்றைக் குயில்
பிறகு அவளின் கால்கள் உதற உதற
கழுத்தில் மேலும் கீழுமாய்
இழுபறித்து அடங்கிய சுவாசம்
அடங்கிய கணம்
எங்கிருந்தோ வந்த பிணப்பறவை
குருதி படர்ந்த அவள் சதைகளைக்
கொத்தத் துவங்கியவுடன்
தன் கேவலோடு
வேறு கிளைக்குத் தாவியது
சாட்சியான அந்த
ஒற்றைக் குயில்

பெண்ணொருத்தியின் கதறலைக் கண்களால் கண்ட ஒற்றை சாட்சியாக இருக்கும் குயில் தான் இந்தக் கவிதை. இந்தக் கவிதை காலத்தின் சாட்சியாக இருக்கிறது. தன் காலத்தில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் பெண் கொலைக்கும், ஒரு நாகரீக சமுதாயம் தன் நாகரீக உச்சத்திலும் பெண்ணை சக மனுஷியாய் ஒரு துளியும் பொருட்படுத்தாது வல்லுறவு கொண்டு சாகடித்துக் கொண்டிருந்தது என்கிற கசப்பான வரலாற்றின் சாட்சியாக இருக்கப் போகிற படைப்பில் இதுவும் ஒன்றாக இருக்கும். இதைத்தான் படைப்பின் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

ஆகுளி தொகுப்பு முழுவதும் சமூகத்துக்கான கவிதைகள் சிறு பறையென அதிர்கின்றன. கவிஞரின் குரல் வலுவாக கவிதைகளில் ஒலிக்கிறது. கவிதைகள் வெறும் விளையாட்டுப் பொருளல்ல என்று தீர்க்கமாக நம்பும் என் போன்ற வாசகர்களுக்கு இதில் உள்ள மிகை உணர்ச்சியும், வலிந்த கட்டமைப்பும் ஒரு குறையாகத் தெரியாது. கவிதைகள் தன்னளவில் சமூகத்துக்கான பணியைச் செய்துகொண்டிருக்கின்றன என்கிற நம்பிக்கை காரணமாக இருக்கலாம். கவிஞர் கீதாப்ரகாஷ் தன் கவிதைத் தொகுப்புக்கான கவிதைகளை மிகச் சரியாகவும் நியாயமாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நெகிழிப் பை மீன்களின் அழுகை, திருவனந்தபுரம் கொச்சுவேலி எக்ஸ்பிரஸை ஒன்றன் வாலை ஒன்று பிடித்து வரிசையாக வரும் யானைகளென்ற ஷமிக்குட்டியின் கற்பனை, வழிந்துபோகும் பெண் குருதியைத் தீட்டெனச் சொன்ன ******* மகன் யார் ? எனும் சீற்றம், நிலமற்றுப் போனவனின் மலடான
நிலம் குறித்த கவலை, அவள் உங்களைப் போல இல்லை எனும் பிரமாணம், மாரிமுத்துத் தாத்தாவின் வாயில் ஒட்டியிருந்து அவரது நிலத்தின் மண் என்று தனது கவிதைகள் அனைத்திலும் சமூகத்துக்கான சில சொற்களையேனும் வைத்திருக்கிறார். கேள்விகளை, பூடகமான பதில்களை, நேரடியான கோபங்களை, மறைமுகமான அரசியல் நையாண்டிகளைப் பேசியிருக்கிறார் கவிதைகளில்.

தொடர்ந்து தனது கவிதைகளை ஆகுளியின் இசையென இசைத்தபடியேயிருக்க வாழ்த்துகள்
  
வெளியீடு : அகநி வெளியீடு, 3,பாடசாலை வீதி,அம்மையப்பட்டு,வந்தவாசி-604 408 பேச: 98426 37637
விலை : ரூ 70/-

படைப்பு தகவு இதழ் வாசிக்க :

9 கருத்துகள்:

  1. நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. நூல் அறிமுகம் நூலினுள் நொடி பொழுதில் நுழைய தூண்டுகிறது.... அருமை...

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கவிதை நூல் அறிமுகம்.மாதிரிக் கவிதைகள் அருமை

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான அறிமுக உரை.. வாழ்த்துகள் பூபாலன்..

    பதிலளிநீக்கு
  5. ஆகுளியின் அறிமுகம்
    தேடிப் படிக்க வைக்கும்
    நன்றி

    பதிலளிநீக்கு