வியாழன், 9 பிப்ரவரி, 2017

கசக்கி எறியப்படும் நந்தினிகள் ஹாசினிகள்

சென்ற வாரத்தில் கட்செவியஞ்சலில் கீழ்க்காணும் புகைப்படம் வந்தது. தேதி மற்ற விவரங்கள் இல்லாததால் இது வழக்கம் போல ஏதோ பழைய செய்தியைப் பரப்புகிறார்கள் என்று நினைத்தேன். . முகநூலிலும் நண்பர்களின் பதிவைப் பார்த்துவிட்டு உண்மைதான் என்று தெரிந்ததும் நண்பர்களுக்குப் பகிர்ந்தேன்.

இப்படி இருக்க ஹாசினி இப்போது உயிருடன் இல்லை என்ற பதிவைப் பார்க்கும் போது பதை பதைக்கிறது மனது.

கீழ்க்காணும் பதிவு முகநூலில் Zabi Zabi அவர்களின் பதிவு. அவர் ஹாசினியைத் தெரிந்தவர். பக்கத்தில் வசிப்பவர்.

நான்கு நாட்களாக தேடப்பட்டு வந்த 7 வயது பெண்குழந்தை ஹாசினி இன்று எரிந்த நிலையில் தாம்ப்ரம் பை பாஸ் சாலையில் கண்டெடுக்கப்பட்டார்
ஹாசினியின் அப்பார்ட்மெண்டில் பக்கத்து வீட்டுக்காரராக குடியிருந்த ஒரு நாதாரி ஜஸ்வந்த் என்பவன் தான் குழந்தையை கடத்தி எரித்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஜஸ்வந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவனுடைய தூக்கு தண்டனைக்காக குரல் கொடுக்க வேண்டியது நம் அனைவர் மீதான தார்மீக கடமையாக உள்ளது
அந்த நாயை காவலர்கள் இழுத்து வந்த போது முதல் அடி என்னுடையதாக விழுந்தது என்பதை ஹாசினிக்காக நான் செய்த சிறு முன் மாதிரியாக நினைக்கின்றேன் இனி எந்த பெண் குழந்தைக்கும் இம்மாதிரியான துயரம் நேராது இருக்க அவன் தூக்கில் தொங்கும் வரை இதை சும்மா விட மாட்டேன்
ஹாசினியின் வீட்டில் இருந்தே இதை போஸ்ட் செய்கிறேன்.. ஹாசினிக்காக குரல் கொடுப்போம்..


ஹாசினி வெறும் ஏழு வயதேயான சிறுமி, அவளிடம் காமம் கொண்டு வேட்டையாடிக் கொன்று எரித்தும் இருக்கிறான் அயோக்கியன். நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறது. பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும் ?

சமீபத்தில் 16 வயதேயான தலித் சிறுமி நந்தினியின் கொலையையும் படித்து மனம் நொந்து போயிருந்தேன்.
தொடர்புடைய படம்

அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது நந்தினி, டிசம்பர் 26 அன்று காணாமல்போனார். புகாரை போலீஸார் அலட்சியமாகக் கையாண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் தந்த அழுத்தத்தின் விளைவாக நடவடிக்கைகள் தொடங்கி, ஜனவரி 14 அன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து நிர்வாண நிலையில் இந்தச் சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது.

கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் நந்தினியும் காதலித்ததாகவும் விளைவாக, நந்தினி கருவுற்றதாகவும் திருமணத்துக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், நந்தினியைத் தன்னுடைய பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் பழகிய மணிகண்டன், தனது நண்பர்கள் மணிவண்ணன், வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகியோருடன் சேர்ந்து அவரைக் கொன்றதாகப் புகார் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நந்தினி கொல்லப்படுவதற்கு முன்பு, கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நான்கு இளைஞர்களும் இப்போது கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள்.

நந்தினி காணாமல்போய் 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பதும், 20 நாட்களுக்குப் பிறகுதான் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது என்பதும் 20 நாட்களுக்குப் பிறகுதான் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் காவல் துறையின் அலட்சியப் போக்குக்கு ஓர் உதாரணம். சாதியம் சார்ந்து நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கின்றனவே அன்றி குறையவில்லை.

இப்படியாகவே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கில் நமது சகோதரிகள் , மகள்கள் கடத்தப்படுகிறார்கள், வன்புணரப் படுகிறார்கள், கொலையும் செய்யப்படுகிறார்கள்.

சில நாட்கள் நாமும் புலம்பிவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிவிடுகிறோம்.

அரசும் , அதிகாரிகளும் , குற்றங்களைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் குற்றவாளிகளை நேர்மையாக விசாரித்து தண்டிக்கவும் துப்பில்லை.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைய வேண்டுமென்றால் தண்டனைகள் கடுமையாக வேண்டும் என்பது தான் நம் கண் முன்னர் இருக்கும் ஒரே வழி. அதைத்தான் எதிர் பார்க்கிறோம்...


தூய்மை இந்தியாவாகிக் கொண்டிருக்கும் இந்நாட்டில்
இன்னும் பிஞ்சுப் பூக்கள்
கதறக் கதற நசுக்கி முகரப்படுகிறார்கள்
நெஞ்சம் பதற நாம் அழுது புலம்புகிறோம்
சில காலம்
எதிர்க்குரலில் கத்தித் தீர்க்கிறோம்
சிலகாலம்
குற்றவாளிகளை வசை பாடுகிறோம்
சிலகாலம் 

ஆனால்
நந்தினிகள் ஹாசினிகள்
காலந்தோறும் கசக்கியெறியப் படுகிறார்கள்
ரத்தக்கறை படிந்த இந்த நிலம்
கால வெள்ளத்தில் பூசி மொழுகப்பட்டுவிடுகிறது
மாபாவங்களுக்கும் கூட 
துணை போகும் சட்டம் கொண்டிருக்கும்
சாத்தான்களின் நகரத்தில்
சந்தனமும் பன்னீருமா ஓடப்போகிறது ?
குருதி வாடையைச் சகித்துக்கொண்டே
வாழப் பழகிக் கொள்வோம் இனி


5 கருத்துகள்:

 1. சாகித்துக்கொள்ள வேண்டாம்!களையெடுப்போம் இச்சமூகத்தை! முயற்சியாவது செய்வோமே!

  பதிலளிநீக்கு
 2. வக்கிர புத்தியுள்ளவனி்ன் கொடுர செயலை கண்டிப்போம். மிக அக்கறையுள்ள பதிவு

  பதிலளிநீக்கு
 3. மனித மிருகங்கள்...வேட்டையாட பட வேண்டியவர்கள் இவர்கள். பெண்களை இப்படி பார்க்க நம் சமுகத்தில் நிலவும் வக்கிரங்கள் தான் காரணமாகிரது.வன்மையாக கண்டிக்கிறேன்.😠😠😠😠

  பதிலளிநீக்கு
 4. சிறப்பாக அலசியுள்ளீர்கள்
  தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. மனித மனத்தை ஆழமாக உழுதிட வேண்டும். பொதுபுத்தியை துடைத்தெறிய வேண்டும் பெண் எதிர்பாலின உயிர் என உணர்த்தல் வேண்டும்.

  பதிலளிநீக்கு