ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

இளைஞர்களின் காலம்



கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை உங்கள் பார்வைக்கு ...

தேநீர் இடைவேளை # 11       இளைஞர்களின் காலம் 


ஜல்லிக்கட்டு க்கான பட முடிவு


இது இளைஞர்களின் காலம். அரசியல், பொருளாதாரம், இலக்கியம்,தொழில் என சகல துறைகளிலும் இளைஞர்கள் மிகத்தீவிரமாகவும் தொலைநோக்கோடும் இயங்கிக் கொண்டும் சாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இரண்டாம் முறையாக நமது இளைஞர்களை நாம் பெருமையாகக் காண முடிந்தது. முதல் முறையாக ஒரு மாபெரும் அறப்போராட்டத்தை நம் கண் முன்னால் காண முடிந்தது. நாம் வாழும் காலத்தில் இப்படியொரு நிகழ்வு இதற்கு முன்னர் பார்த்திடாதது. இவ்வளவு திடமான, தீர்க்கமான, ஒருங்கிணைந்த ஒரு போராட்டத்தை காலம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.

இந்த இளைஞர்கள், கொஞ்சநாட்களுக்கு முன்னர் வரைக்கும் பேருந்து நிலையங்களில், கல்லூரி வாசல்களில், திரையரங்கங்களில் என சகல இடங்களிலும் கைகளில் திறன்பேசியை வைத்துக்கொண்டு தேய்த்தபடி இருந்தவர்கள். இவர்கள் யாரென்பதை அறிய கொஞ்சம் சென்னை வெள்ளம் உதவியது.

சென்னை வெள்ளத்தின் போது, காவல் துறையை விட, பேரிடர் மீட்புக் குழுவை விட, ஏன் அரசை விடவும் மிகத் தீவிரமாக இயங்கி மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் எந்த புகழுக்கும், பிரதிபலனுக்கும் ஆசைப்படாது தமது கொண்டாட்டங்களை, அலுவல்களை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பல நாட்கள் சென்னை கடலூர் பகுதிகளில் சுற்றி தமது உதவிகளைச் செய்தபடியிருந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தபடி போதும் போதும் எனும் அளவுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்பியபடி இருந்தனர்.

அது அவர்களின் சிறு தரிசனம் தான். இதோ, இந்தப் புத்தாண்டில் தான் அவர்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளனர். தமிழகமே அதிர அதிர அவர்களது விஸ்வரூப தரிசனம் கிடைத்துள்ளது.. முதலில் யாரும் இவ்வளவு தீவிரமான ஒரு போராட்டத்தை முன்கூட்டியே யோசித்திருக்கவில்லை. ஆங்காங்கே கூடிய மாணவர்கள் தாங்களாகவே ஒன்றிணைந்தார்கள். ஒரே தலைமையின் கீழான போராட்டமாக அல்லாமல், எந்தத் தலைமையும் வழிகாட்டுதல்களும் இல்லாமல், தாங்களே சுயமாக இயங்கினர் ஆனால் இம்மியளவும் பிசகாமல் அறவழியில் நடந்தது அந்தப் போராட்டம்.

ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு இனத்தின் அடையாளம், ஒரு இனத்தின் வரலாற்று எச்சங்களில் அதுவும் ஒன்று என்பதையெல்லாம் அவர்கள் உணர்ந்திருந்தபடியாலேயே இந்தப் போராட்டம் சாத்தியமானது. இந்தப்போராட்டத்தின் பிரதான நோக்கம் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவது தான் என்றாலும், பிற்பாடு பல துணை நியாயம் கோரல்கள் இடைப் புகுத்தப்பட்டன ஆனாலும் ஒரே இலக்கு ஒரே குறிக்கோள் முன்னிறுத்தப்பட்டது இறுதிவரைக்கும்.

சென்னை இளைஞர்கள் ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கூடுவதாக திட்டமிட்டனர். ஜனவரி 16ஆம் நாள் சென்னை இளைஞர்களுக்கு முகநூல்,கட்செவியஞ்சல்,இணையம்,மின்னஞ்சல் என அனைத்து சமூக ஊடகங்களிலும் செய்திகள் அனுப்பப்பட்டன. ஜனவரி 17 அன்று மெரினாவில் கூடலாம் என்று. அது சென்னை தவிரவும் அனைத்து ஊர்களுக்கும் மெல்லப் பரவியது. குறிப்பிட்ட நாளில் மெரினாவில் இளைஞர்கள் கூடினர். அடுத்தடுத்த நாட்களில் கோவை,மதுரை,சேலம்,திருச்சி,ஈரோடு என அனைத்து ஊர்களிலும் தாமாகவே கல்லூரி இளைஞர்கள் திரள் திரளாகக் கூடினர்.



இந்தக் கூடுகையும், போராட்டமும் முழுக்க முழுக்க சமூக ஊடகங்களால், இணையத்தாலேயே சாத்தியமானது. அது இல்லையென்றால் தமிழகம் முழுக்கவும் ஒரே சமயத்தில் இப்படியொரு மாபெரும் எழுச்சி நடந்திருக்காது. ஆரம்பநாளில் செய்த ஊடகங்களில் கூட பெரிய ஆதரவு இருந்திருக்கவில்லை . ஆனாலும் அடுத்தடுத்த நாட்களில் அவர்களும் இந்த எழுச்சியை வியந்து கொண்டாடி வலு சேர்த்தனர்.  எந்த அரசியல் நோக்கமுமல்லாது , எந்த அரசியல் பின்புலமுமல்லாது, அரசியல் துணையுமின்றி தாங்களே முன்வந்து போராடிய இப்போராட்டம் வெற்றிகரமாக நடக்கவும் இவையே காரணங்களாயின.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழ் நாட்டு இளைஞர்களின் அறப்போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது.வெளிநாடு வாழ் தமிழர்களும் ஆங்காங்கே இருந்தபடி தங்களது தாய்மண்ணின் எழுச்சி நாயகர்களுக்கு தங்களது ஆதரவை அழுத்தமாக இணையம் வழி பகிர்ந்தபடியே இருந்தார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி , இந்தத் திட்டமிடலும் இன்றி காலை முதல் மாலை வரை, விடிய விடிய என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அதை எதிர்க்கும் பீட்டா உள்ளிட்ட அமைப்புக்கு எதிராகவும் கோஷங்களிட்டபடி போராடி வந்தனர். நான் பார்த்தவரைக்கும் எந்த சட்ட திட்டங்களும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஒரு கட்டுக்கோப்போடு நடந்த மாபெரும் போராட்டம் இதுவாகவே இருக்கும்.

இளைஞர்கள் தாங்கள் கற்ற கல்வியின் ஒளியை போராட்டக் களமெங்கும் பாய்ச்சியபடியே இருந்தனர். ஆண்களும் பெண்களுமாக இளைஞர்களும் இளைஞிகளுமாக கூட்டம் கூட்டமாக இருந்தாலும் சுய ஒழுக்கத்துடனும் சிறு சலசலப்போ அத்துமீறலோ எதுவுமின்றி ஒவ்வொரு ஊரிலும் மிக கண்ணியமாக கூட்டம் நடந்துகொண்டிருந்தது. இந்த கண்ணியமும் நேர்மையும், முதல் நாளில் கல்லூரி இளைஞர்களின் போராட்டமாகத் துவங்கிய இந்தக் கூடுகை, ஒரு யுகப்புரட்சியாக அடுத்தடுத்த நாட்களில் மாற வித்தானது.

 இளைஞர்களின் கண்ணியமான, நியாயமான போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு அப்பாக்கள்,அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து இணைந்துகொண்டார்கள். முதியவர்களும் கூட முடிந்தவரை இவர்களுக்கு ஆதரவாக சும்மாவேனும் அமர்வோம் என்று இணைந்துகொண்டார்கள். இவர்களுடன் ஆங்காங்கே பள்ளி மாணவர்களும் தன்னிச்சையாக வந்து சேர்ந்துகொள்ள அவர்களது ஆசிரியர்களும் கரம் கோர்த்துக்கொண்டனர். வேலைக்குச் செல்பவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டும், இயலாதவர்கள் மாலை முதல் இரவு முழுவதும் என ஆத்மார்த்தமாக இணைந்த கூட்டமாக ஆனது.

களத்தில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு உணவு, தண்ணீர், சிற்றுண்டிகள், தேநீர் என எந்தக்குறையுமின்றி வந்துகொண்டே இருந்தது தான் ஆச்சர்யம். அதிலும் யார் கொடுக்கிறார்கள் எங்கிருந்து வருகிறது என்று எந்தத் தகவலுமின்றி எந்த எதிர்பார்ப்புமின்றி தந்து கொண்டேயிருந்தார்கள். ஒரு சின்ன டியூப் லைட்டைக் கோவிலுக்கு தானமாகக் கொடுத்துவிட்டு வெளிச்சமே வராத அளவுக்கு அதன் மீது உபயம் என்று எழுதி தமது பெயரைப் பொறித்துக்கொள்ளும் நம் சமூகம் தான் தங்களது அடையாளங்களைக் கூட மறந்துவிட்டு அள்ளியள்ளிக் கொடுத்தபடியிருந்தனர்,

ஒரு தம்பதியினர் போராட்ட நாட்கள் அனைத்திலும் இரண்டு வேளையும் சலிக்காமல் சளைக்காமல் தேநீர் போட்டுக் கொண்டு வந்து ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக விநியோகித்தபடியே இருந்ததைப் பார்க்கிறோம், பிஸ்கெட்டுகள் விற்கும் சிறு வியாபாரி தான் வியாபாரத்துக்குக் கொண்டு வந்து பிஸ்கெட் பாக்கெட்டுகள் அனைத்தையும் உடைத்து இளைஞர்களுக்கு இலவசமாகவே கொடுத்ததைப் பார்த்து கண்கலங்கி நிற்கிறோம். மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனை செவிலியர்களையும் மருந்துகளையும் இலவசமாக வழங்கி இளைஞர்களுக்கு அன்பு செய்கின்றனர். பெண்களும் போராட்டக்களத்தில் இருப்பதால் சில அமைப்புகள் சமயோசிதமாக சிந்தித்து நடமாடும் கழிப்பறைகளைக் களத்துக்கே கொண்டு வந்து அவர்களுக்காக வைத்திருந்து அரணாக நிற்கிறார்கள். இந்த அமைப்பு அந்த அமைப்பு நற்பணி மன்றங்கள் இயக்கங்கள் என அனைவரும் தங்களது முகங்களை முன்னிறுத்தாமல் பல்வேறு உதவிகளைச் செய்தபடியே இருக்கின்றனர்.

போராட்டம் வெறும் கூச்சல்களாகவும், அல்லது இறுக்கமாகவும் இருந்திருந்தால் இத்தனை நாட்கள் தொடர்வதில் தொய்வு ஏற்பட்டிருக்கக்கூடும். இளைஞர்கள் அத்தனை உற்சாகமாக இருந்தனர் எந்நேரமும். அவர்களை உற்சாகமாக்க ஒரு இடத்தில் பறை இசை நடக்கிறது, ஒரு இடத்தில் தேவராட்டம், கும்மி ஆடுகிறார்கள், ஒரு இடத்தில், காவடி, கிராமிய நடனங்கள் விளையாட்டு என களமே களைகட்டியிருக்கிறது. மாணவர்கள் தங்களது திறமைகளைக் காட்டுகின்றனர். பொதுமக்கள் தஙகளால் முடிந்தவரை இணைந்து அவர்களை உற்சாகமூட்டுகின்றனர். போராட்டம் நடந்த ஆறு நாட்களும் இரவுபகலாக உற்சாகம் குறையாமல் இளைஞர்கள் இருந்தது தான் இந்நிகழ்வில் மிகப்பெரும் சிறப்பு.

பெரும்பாலும் பெண்களும் பெரியவர்களும் இந்தக்கால இளைஞர்களைக் குறை கூறித்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக அவர்களது முழுமையான ஆதரவு இப்போது அவர்களுக்குக் கிடைத்தது. ஒவ்வொரு ஊரிலும் களத்தில் இருந்த இளைஞர்களுக்கு உறுதுணையாக ஆயிரக்கணக்கான குடும்பப் பெண்களும் பெரியவர்களும் இருந்தனர்.

இளைஞர்களின் தன்னொழுக்கத்தை இந்தக்கூட்டம் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியது. இத்தனை கூட்டம் கூடுகையில் யாரோ ஒரே ஒருவர் கல்லெடுத்து எறிந்திருந்தாலும் கூட வன்முறை கட்டுக்கடங்காமல் வெடித்திருக்கும். ஆனால் இந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியின் பின் இவை இருந்தன. போக்குவரத்துக்கு எந்த இடையூறையும் இவர்கள் ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே அவர்களே போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர். தாங்கள் போட்ட குப்பைகளைக் கூட தாங்களே அள்ளியெடுத்து அப்புறப்படுத்தினர்.  பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் முதல் மரியாதை தந்து வழியும் இடமும் தந்தனர். தங்களது சக மாணவ மாணவிகளை பால்வேறுபாடின்றி மதித்து நடத்தியும், விட்டுக்கொடுத்துமாக   அவ்வளவு பக்குவமாக நடந்துகொண்டனர்.

இவ்வளவு சாத்வீகமாக ஒரு போராட்டம் நடக்கிறது, இது இப்படியே நடந்து வெற்றியும் பெற்றுவிட்டால் என்ன ஆகும் என அதிகார வர்க்கத்தின் மூளைகள் யோசிக்கத் துவங்கின. ஒரு வேளை அமைதியாக இந்தக் கூட்டம் வெற்றியுடன் கலைந்து விட்டால் நாளை ஒவ்வொரு விசயத்துக்கும் கூடுவார்கள். விவசாயம், நதிநீர் , அந்நிய வியாபார ஆதிக்கம், என எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன அவர்கள் போராட. அது நடந்துவிடவே கூடாது என்பது தான் அதிகாரவர்க்கத்தின் திட்டம். ஆகவே தான் அவர்களது கூலிப்படைகளான காவல் படைகளை ஏவினர் கடைசி நாளில்.

அந்த ஒரே ஒரு நாள் மட்டும் பொறுத்திருந்தால் சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தந்து தீர்மானம் கையெழுத்தானதும் தாங்களாகவே வெற்றியுடன் கலைந்திருப்பார்கள் மாணவர்கள். ஆனால் அது நடந்துவிடக்கூடாது என்று சதித்திட்டம் தீட்டியவர்கள் தாம் தங்கள் கைகளாலேயே குடிசைகளை,வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு மாணவர்கள் மேல் பழிசுமத்தப்பார்த்தனர். தாங்களே குடியிருப்புகளையும் உடைமைகளையும் அடித்து நொறுக்கினர். பெண்கள் குழந்தைகள் என்று யாரையும் பாராது தங்களது கொடுங்கோல்களால் அடித்து விளாசினர்.

இப்படியாக மிக அருமையாக அறவழியில் முடிந்திருக்க வேண்டிய ஒரு மாபெரும் எழுச்சிப் போராட்டம், வன்முறையாக முடித்து வைக்கப்பட்டது..

ஆனாலும், இளைஞர்களிடத்தில் இன்னும் அந்தத் தீவிரம் இருக்கிறது. இனிவரும் காலங்களில் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக, அரசின் மெத்தனப் போக்குக்கு எதிராக, சுரண்டல்களுக்கு எதிராக, இளைஞர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

கொலுசு மின்னிதழில் வாசிக்க : 

இளைஞர்களின் காலம்

4 கருத்துகள்:

  1. ஆம் ஐயா! கண்டிப்பாக ஒலிக்கும். இந்தப் போராட்டம் அமைதியாக முடிந்திருந்தால் அதன் விளைவு தங்களுக்கு எதிராக இருக்கும் என்று கருதி ஆட்சியாளர்கள் அதை இப்படி முடித்து வைத்தார்கள். ஆனால், அவர்கள் திட்டம் பலிக்கப் போவதில்லை. போராளிகள் தாமாகக் கலைந்து சென்றிருந்தால் அது அவர்களுக்கு வெற்றிப் போதையைத் தலையில் ஏற்றி விட்டிருக்கும். அதனால் இனி வரும் போராட்டங்களில் அவர்களிடம் ஊக்கம் மட்டும்தான் இருந்திருக்குமே தவிர இதே போன்ற கட்டுக்கோப்பும் கண்ணியமும் திட்டமிடலும் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி. ஆனால், இப்பொழுது ஆட்சியாளர்கள் செய்த இந்தக் கொடுமையால் இனி முன்னெடுக்கும் போராட்டங்களை நம் போராளிகள் இன்னும் கூர்மையாகவும் திட்டமிடலுடனும் கட்டுக்கோப்பாகவும் கண்ணியமாகவும் நடத்த ஆட்சியாளர்களே விதையிட்டிருக்கிறார்கள். நல்லது நடக்கும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. // ஒரு தம்பதியினர் // என்று ஆரம்பித்த பகுதி மிகவும் கவர்ந்தது... நெகிழ்ந்தேன் ஐயா...

    பதிலளிநீக்கு