வியாழன், 31 டிசம்பர், 2015

ஹேப்பி நியூ இயர் ப்ரோ...

இதுவரை ஒரு போதும் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடியதில்லை. இது வழக்கம் போல ஒரு நாளே. வாழ்த்துகள் பகிரும் நட்புகளுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் பகிர்வதோடு சரி.

சென்ற மாதத்தில் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கையில் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தலைவர் அம்சப்ரியா அவர்களின் ஆலோசனையின் படி இந்த ஆண்டின் துவக்கத்தை புத்தகங்களோடு கொண்டாடுவோம் என்று முடிவுசெய்தோம். நண்பர்களுக்கு, வாசிப்புப் பழக்கம் இருக்கும் புத்தகம் வாங்க இயலா மாணவர்களுக்கு முடிந்த அளவு புத்தகங்களைப் பரிசளிக்கலாம் எனத் தீர்மானித்தோம்.

கொஞ்ச நாட்களில் இந்து நாளிதழ், பபாசி இணைந்து புத்தாண்டு முதல் நாள் நள்ளிரவு அனைத்துப் புத்தகக் கடைகளும் திறந்திருக்கும்; புத்தகங்களோடு புத்தாண்டைக் கொண்டாடுவோம் என்ற அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. நேற்றைய இந்து செய்தியிலும் நாங்கள் எதிர் புத்தகக் கடையில் சந்திப்பதாகச் செய்தி வந்திருந்தது.



திட்டமிட்டபடி நேற்று மாலை நான், அம்சப்ரியா, சோலைமாயவன், புன்னகை ஜெயக்குமார் நால்வரும் பொள்ளாச்சியில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கடந்த மாதம் வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் வாமனன் அவர்களைச் சந்தித்து சிறப்புச் செய்துவிட்டு அவரை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு அழைத்துவிட்டு அறவொளி அவர்களின் வீடு வந்தோம். உமா அறவொளி அவர்களின் கைகளால் இரவு உணவு தித்தித்தது.

11 மணிக்கு எதிர் புத்தகக் கடையில் சந்தித்தோம் அனுஷ், கனகராஜன், சோழநிலா, பாலமுருகன் உள்ளிட்டோர் ஏற்கனவே அங்கு இருந்தனர்.

சற்று நேரத்தில் அனைவரும் தாங்கள் இந்த வருடத்தில் வாசித்த நல்ல புத்தகங்கள், இதழ்கள் பற்றிப் பகிர்ந்து கொண்டோம். அம்சப்ரியா அவர்களின் உரை மிக சுவாரஸ்யமாக இருந்தது வழக்கம்போலவே. நள்ளிரவு 12 மணிக்கு அனுஷ் மகள், சோழ நிலா மகள் இணைந்து கேக் வெட்டினார்கள். பின்னர் நண்பர்களுக்குப் புத்தகங்களைப் பரிசளித்துவிட்டு அவர்களிடமும் அன்பை புத்தகங்களாகப் பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்கையில் மணி 1,30.



2015 நிறையக் கொடுத்திருக்கிறது. நிறைய நல்ல நண்பர்களை, ஒரு மிகப்பெரிய விருதை, மிகுந்த நம்பிக்கையை இப்படி நிறைய.. நிறைய வலிகளையும் தான். சென்ற ஆண்டில் ஏற்பட்ட ஒரு மனவருத்தத்தில் நான் மிகவும் மதிக்கும் அண்ணன், ஆலோசகர் கனகராஜன் அவர்களை விட்டு விலகிவிட்டேன். என் வாழ்வில் யாரையும் விட்டு இப்படி விலகியதில்லை. காரணங்கள் பல இருந்தபோதும் நான் அப்படிச் செய்தது எனக்கே உறுத்தலாக இருந்து கொண்டிருந்தது.  பலமுறை நேருக்கு நேர் பார்த்தும் பேசிக்கொள்ளவில்லை சென்ற ஆண்டு முழுதுமே என்னை அரித்துக் கொண்டிருந்த விசயம் இது. பல நாட்கள் இதை நினைத்து மனச்சோர்வு அடைந்ததுண்டு.

நேற்று தயக்கங்களையெல்லாம் உடைத்துவிட்டு அவரிடம் பேசிவிட்டேன். எனது புத்தகத்தை அவரிடம் கொடுத்துவிட்டேன். மனம் லேசானது, குற்றவுணர்ச்சியிலிருந்து கொஞ்சம் விடுபட்டு மகிழ்ந்தது. 2016 நல்லபடியாகத்தான் விடிந்திருக்கிறது. இது தொடர வேண்டும்.

வண்டியில் வரும் வழியெங்கும் இளைஞர்கள் கூச்சலிட்டபடி கொண்டாடியபடி இருசக்கர வாகனங்களில் கடந்து கொண்டிருந்தனர்.சாலையில் ஆடிக் கொண்டிருந்தனர். யாருமற்ற சாலையில் நடுச்சாலையில்   புத்தாண்டு வாழ்த்துகளை எழுதிக்கொண்டிருந்த இளைஞர்கள் எனக்காகவே எழுதிக்கொண்டிருந்ததாகப்பட்டது. நான் எதிர் பார்த்தபடியே சாலையோரத்தில் ஆடிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் வாகனத்தில் இடிக்குமளவு நெருங்கிவிட்டான். எதிர்பார்த்திருந்த காரணத்தால் சுதாரித்துக்கொண்டு நகர்ந்தேன். மதுப்போத்தலோடு ஒருவன் " ஹேப்பி நியூ இயர் ப்ரோ. பாத்துப் போங்க" என்றான். சிரித்துக் கொண்டே ஹேப்பி நியூ இயர் சொல்லிவிட்டு நான் என் வாகனத்தில் முன்பக்கம் இருந்த புத்தகங்களைத் தடவிப்பார்த்துக் கொண்டேன்.

ஹேப்பி நியூ இயர்

6 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு