திங்கள், 14 டிசம்பர், 2015

கடலூருக்கும் சென்னைக்கும் நீண்ட பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் கரங்கள் ...

மழை வெள்ளத்தில் சென்னை , கடலூர் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்த யாருமே ஒரு கணம் அந்த மக்களுக்காக வருந்திடாமல் இருக்க முடியாது. வீடுகள்,உடமைகள், வாகனங்கள் , உறவுகள் என அவர்களது இழப்பு மிக அதிகம். அவற்றையெல்லாம் நம்மால் மீட்டுத்தர இயலாது என்றாலும், அவர்களாக இதிலிருந்து மீண்டு வர குறைந்தது ஒரு மாதமாவது வேண்டும். அது வரைக்கும் அவர்களுக்கு உணவு, குடிநீர், உடைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளையாவது நாம் தான் நிறைவேற்ற வேண்டும்.
சென்னை , கடலூர் மக்களுக்கு பொள்ளாச்சி இலக்கியவட்டம் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அரசு முழு வீச்சில் பெரிய அளவில் எதையும் செய்ததாகத் தெரியவில்லை, செய்வதும் பெரிய காரியம் தான். தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் எல்லோரும் கரம் கோர்க்க வேண்டும்.
நாம் செய்வதை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். சென்னையை விடவும் கடலூரில் வெள்ள பாதிப்பு மிக அதிகம் என்றும் ஆனால் ஊடகங்கள் சென்னையையே முன்னிருத்துகின்றன என்றும் நம்பத்தகுந்த நண்பர்களின் நேரடி அனுபவங்கள் மூலமாக அறிந்து கொண்டோம். மேலும் சென்னைக்கு நிறைய நிவாரணப் பொருட்கள் சென்ற வண்ணம் இருந்தன. எனவே கடலூருக்கு பொருட்களைக் கொண்டு செல்வது என முடிவு செய்தோம். முகநூல் மற்றும் வாட்ஸப்பில் இந்தத் தகவலைப் பகிர்ந்ததும். நிறைய உதவிகள் குவிந்தன. முதல்கட்டமாகப் பொருட்களை டிசம்பர் 3 அன்று அனுப்புவதாக முடிவு செய்து கொஞ்சம் தாமதமாக டிசம்பர் 5 நள்ளிரவு ஒரு மணிக்கு அனுப்பி வைத்தோம். இன்னும் உதவிகள் வந்து கொண்டே இருந்ததால் இங்கு இருந்து அதை கவனிக்க வேண்டும் மேலும் கடலூரில் நண்பர்கள் கனிமொழி ஜி, யாழி மற்றும் பல தன்னார்வலர்கள் இருப்பதால் பொருட்களை மட்டும் அனுப்பினால் போதும் அவர்கள் சரியான இடத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு சேர்த்து விடுவார்களாதலால் பொருட்களை மட்டும் அனுப்ப முடிவு செய்தோம்.
முதலில் யாரும் பணமாகத் தரவேண்டாம், போர்வைகள், பாய்கள், புதிய உடைகள், அத்தியாவசியப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் இப்படித்தான் கேட்டோம். அதுதான் சரியெனவும் பட்டது. ஆனால் வெளியூர் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் தங்களால் பொருளாகத் தர இயலாது என்று சொன்ன பின்னர் பணமாக அவர்களிடம் பெற்றுக் கொண்டு பொருட்களாக நாம் வாங்கி அனுப்பலாம் என்று முடிவு செய்தோம்.
ஆனைமலையிலிருந்து புன்னகை ரமேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நண்பர் வணங்காமுடி மற்றும் ஊர் மக்களின் அன்பில் அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்கள் சேகரித்துவிட்டனர், குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட் பெட்டிகள், பற்பசை, பிரஷ்,, உடைகள் என ஒரு வண்டி நிறைய வந்து இறங்கி விட்டது. இது முதற்கட்டம் தானாம் ...
முதற்கட்டமாக எங்களுக்குப் பணம் அனுப்பியவர்கள் மற்றும் செலவுப் பட்டியல் இதோ..


பணமாக வந்தவற்றைக் காட்டிலும் பொருளாக வந்தது தான் அதிகம். அவற்றையெல்லாம் பொள்ளாச்சி இலக்கியவட்ட நண்பர், கொலுசு மின்னிதழ் ஆசிரியர் அறவொளி அவர்களின் வீட்டிலேயே அவ்வப்போது சேகரிக்கத் துவங்கினோம்.
பணமாக வந்தவற்றுக்கு, கீழ்க்கண்ட பொருட்களையும் வாங்கினோம்..

பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தலைவர் கவிஞர் அம்சப்ரியா, செயலாளராக நான், சோலை மாயவன், .தி.செந்தில்குமார், ஆன்மன்,அறவொளி, உமா அறவொளி,கிருத்திகா, என பொள்ளாச்சி இலக்கியவட்ட நண்பர்கள் அனைவரும் பொருட்கள் சேகரிப்பிலும், கடைகளில் பொருட்கள் வாங்குவதிலும் தீவிரமாக சனிக்கிழமைதான் இறங்கினோம். எப்படியும் சனிக்கிழமை இரவு அனுப்பிவிடத் தீர்மானம்.
இந்தப் பொருட்களோடு ஆனைமலையிலிருந்து புன்னகை ரமேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அரைலிட்டர் குடிநீர் பாட்டில்கள் 1000, பிஸ்கெட் பாக்கெட்டுகள் 1000, ரஸ்க் பாக்கெட்டுகள் 500,பால்பவுடர் 260 பாக்கெட், நாப்கின்கள்,பேஸ்ட், பிரஷ், உடைகள், கொஞ்சம் போர்வைகள் என அது ஒரு மினி ஆட்டோ நிறைய வந்து இறங்கின.
பிரியா சுங்கம் பகுதியில் தனது உறவினர்களிடம் சொல்ல அவர்கள் கொஞ்சம் உடைகளைக் கொடுத்துள்ளனர். நான்கு பைகளில் உடைகளுடன் அவரும் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டார். அவர் சொன்ன செய்தி நெகிழ்ச்சியாக இருந்தது.
பிரியா , வெள்ள நிவாரணத்துக்காக நான்கு பெரிய பைகளில் துணிகளைச் சேகரித்து அலுவலகத்தில் வைத்திருந்திருக்கிறார். அப்போது அங்கு வழக்கமாக சாம்பிராணி பொடி போடும் பாய் வந்தவர், என்ன பேத்தி இது என்று கேட்க, இவரும் பெருமையாக இப்படிப் பொள்ளாச்சி இலக்கியவட்டம் மூலமாக கடலூர் மக்களுக்கு அனுப்புகிறோம் என்று சொல்ல, அவர் நேற்றே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கோபித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல அதன் பின் அவர் செய்த காரியம் எங்கள் கண்களைக் கலங்க வைத்துவிட்டது. இப்போது தான் இரண்டு மூன்று கடைகளுக்குப் போய் வருவதாகவும் , இன்றைய கலெக்‌ஷன் இவ்வளவுதான் என்றும் சொல்லி பிரியாவின் கையில் ஐம்பது ரூபாயைத் தந்து இதையும் கடலூர் மக்களுக்கு என் பங்காக அனுப்பிவிடு என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
இதைக்கேட்டதும் மனம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லா மனிதர்களுக்குள்ளும் இன்னும் மனிதம் இருப்பதை இந்த மழை காட்டியது, இப்படிப்பட்ட எளிய மனிதர்களுக்குள் தான் ஈரம் அதிகமாக இருப்பதையும் இந்த மழைதான் காட்டியது.
மாலை ஆகிவிட்டது, வந்திருந்த பொருட்களுக்குக் கணக்கு செய்து 700 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பைகள் பேக்கிங் செய்யத் திட்டமிட்டோம்.
நான் மளிகைப்பொருட்கள் வாங்கப்போனேன் சோலைமாயவனுடன், அப்படியே அட்டைப்பெட்டிகள், பால்பவுடர் என அனைத்தையும் வாங்க மாமா செந்தில்குமார் போர்வைகள் துண்டுகள் வாங்கி வந்தார். பொருட்களைக் கொண்டுவந்து சேர்க்கவே 7 மணியாகிவிட்டது.
பேக்கிங் செய்ய வருகிறேன் என்று சொன்ன நண்பர்களால் வரமுடியாமல் போக, நான், ஆன்மன், அறவொளி, உமா அறவொளி,சோலைமாயவன்,செந்தில்குமார்,கிருத்திகா,பிரியா, பீஷ்மா,மணிராஜ் ஆகியோர் பேக்கிங்கில் இறங்கினோம். ஒன்பது மணிக்கு பீஷ்மா மற்றும் பிரியா கிளம்பிவிட
மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பித்தால், பேக்கிங் முடிய இரவு ஒன்று ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 700 பார்சல் தயாரித்து அவற்றை முறையாக அட்டைப்பெட்டிகளில் அடுக்கி வண்டியில் ஏற்றி வண்டியை அனுப்பும்போது மணி 2.
700 பாக்கெட்டுகளில் இருந்தவை பிஸ்கெட் பாக்கெட்டுகள் 2,பால்பவுடர் 2,பேஸ்ட் 1,பிரஷ் 1, ஷாம்பு 1,மெழுகுவர்த்தி 2, தீப்பெட்டி1,ரஸ்க் 1,சோப்பு 1, டீத்தூள் 1,நிலவேம்பு 1.
இவை போக போர்வைகள்,பாய்கள், துண்டு,மருந்துகள், உடைகள், தின்பண்டங்கள் தனி. இது மட்டுமன்றி வண்டி வாடகை 6000 ரூபாய் மற்றும் கிளீனர் அவர்களுக்கு 1000 என போக்குவரத்து செலவு முழுவதையும் தோழர் ஆன்மன் ஏற்றுக்கொண்டார்.
அத்தனை நேரம் வரை எங்களுக்கு சோர்வு வராமலிருக்க உமா அறவொளி அவர்கள் அவ்வப்போது காபி கொடுத்து உற்சாகப்படுத்தியது, நள்ளிரவென்றும் பாராமல் எங்களோடு கிருத்திகா தனியாகவே இருந்து அத்தனை வேலைகளையும் செய்தது, எங்களை நம்பி அவளது அம்மா அவளை அனுமதித்தது என அத்தனையும் அன்பால் நிகழ்ந்தது.
இரவு 2 மணிக்கு நானும் மாமாவும் சோலைமாயவன் அறைக்கு வந்து தூங்கினோம். கிருத்திகாவை ஆன்மன் நண்பர் தனது காரில் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
மழையில் நனைந்து கொண்டே அலைந்தது, ரொம்ப வருடம் கழித்து வேலை செய்தது எல்லாம் சேர்த்து காலையில் சளியும் காய்ச்சலும் வந்தே விட்டது. வீட்டுக்குப் போனதும் அம்மா கேட்டார் காய்ச்சல் அடிக்குது போல ஏன் இவ்வளவு அலைச்சல் என்று. எனக்கே இப்படி என்றால், கழுத்தளவு மழை+சாக்கடை நீரில் அல்லாடியபடி ஓடி ஓடி மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் தன்னார்வலர்களை வணங்கித்தான் ஆகவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வண்டி சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களுடன் கடலூர் சென்றுவிட, யாழி,கனிமொழி நண்பர்கள் அவற்றை மிகவும் பாதித்த கிராம மக்களுக்கு நேரடியாக பல சிரமங்களுக்கு மத்தியில் சென்று சேர்த்தனர் என்ற செய்திதான் நிம்மதியாக்கியது.
இரண்டாம் கட்டமாகவும் இதே வேலைகள் நடந்தன. இந்த முறை ஆனைமலையில் வணங்காமுடி நண்பர் தனது வீட்டில் 100 பார்சல் தயார் செய்திருந்தார். பில்சின்னாம்பாளையம் கிராமத்தில் தலைவர் அம்சப்ரியா, ஜெயக்குமார், ராமகிருஷ்ணன்,காளிமுத்து,அஜீத்குமார்,கலையரசு போன்ற நண்பர்கள் இணைந்து 233 பார்சல்கள் தயார் செய்திருந்தனர்.
இந்தப் பொருட்கள் போதும் என முடிவு செய்து நாங்கள் அரிசிப்பைகள், மளிகை ஜாமான்கள், போர்வைகள், பாய்கள் மற்றும் மருந்துகள் மட்டும் வாங்கினோம். இந்த முறை கூடுதலாக சுமார் ஒன்றரை லட்சத்துக்குப் பொருட்கள் சேர்ந்தன.

இவை போக எழில் எம்ப்ராய்டரி செல்வி அவர்கள் தங்கள் கடையிலிருந்து 4 மூட்டை நிறைய புதிய சேலைகள்,ஸ்வெட்டர்கள் தந்து தனது பெரிய மனதைக் காட்டினார். கீதாப்ரகாஷ் உடைகள், குழந்தைகளுக்கான பள்ளிப்பைகள் வாங்கித் தந்தார்.

ஆன்மன் அவர்களின் நண்பர் ஆட்டோ ஓட்டுநர் பூபதி வெறும் மூவாயிரம் ரூபாய்க்கு டீசல் அடித்தால் போதும் நான் பொருட்களைக் கடலூர் கொண்டு சேர்க்கிறேன் என்று தானாக முன் வந்தார்.

எழுத்தாளர் கனக தூரிகா 2500 ரூபாய்க்கு மெழுகுவர்த்தியும், தீப்பெட்டிகளும் கோவையிலிருந்து வாங்கி அனுப்பினார். அவற்றையும் சேர்த்துக்கொண்டோம். இப்படித்தான் இன்னும் இன்னும் நிறைய அன்புக்கரங்கள் எங்களோடு இணைந்தன.
ஒன்பதாம் தேதி இரவு பத்துமணிக்கு வண்டி கிளம்பியது. காலை 8 மணி சுமாருக்கு கடலூரைச் சென்றடைந்தது.
இரண்டாம் கட்ட உதவிக்குப் பணம் தந்த அன்பர்கள்

இரண்டாம் கட்டமாக வாங்கிய பொருட்கள் ..
இரண்டாம் கட்ட உதவியின் போது கடலூருக்கு ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பியது போக. விழுப்புரம் மாவட்டம் சாத்தூர் கிராமத்திலும் ஏரி உடைந்து ஒரு கிராமமே வெள்ளத்தில் மூழ்கியதைக் கேள்விப்பட்டு, அந்தத் தகவலை சோலைமாயவன் சகோதரி மூலம் நேரடியாகச் சென்று உறுதி செய்த பின்னர் 100 பைகள் அரிசி வாங்கி வழங்கினோம். மேலும் சென்னையில் சேற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் இருக்கும் மக்களுக்கு அவசரமாக மருந்துகள் தேவைப்பட்டதால் அவற்றையும் உடனடியாக வாங்கி கூரியரில் அனுப்பி வைத்தோம். அதுமட்டுமன்றி, மீனவ கிராமத்துக் குழந்தைகளுக்கு உதவக்கேட்டிருந்த தோழருக்கு 200 நோட்டுப் புத்தகங்கள், 100 பென்சில்கள், 100 பேனாக்கள், 100 அழிப்பான்கள், 100 ஷார்ப்னர்கள் , 100 ஸ்கேல்கள் அடங்கிய100 பென்சில் பெட்டியுடன் பொருட்களை அனுப்பி வைத்தோம்.
ஆக மொத்தம் இரண்டு முறையும் வரவு : ரூபாய் 79050.00
பொருட்கள் வாங்கிய செலவு : ரூபாய் 82851.00
இப்படியாக ஒரு 3800 ரூபாய் கையைக்கடித்தது. அதை நான் ஏற்றுக் கொண்டேன். போர்வை வாங்கும் போது பணம் பற்றாக்குறையால் மாமா இன்னும் கொஞ்சம் சேர்க்க, அவரோடு கடைக்கு வந்த மணிகண்டன் தானும் ஒரு ஆயிரம் ரூபாய் தந்து உதவியிருக்கிறார். மேலும் ஆன்மன் தோழரும் தோள் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். எத்தனை கரங்கள் நீள்கின்றன.. நினைக்கவே பெருமிதமாக இருக்கிறது. அலுவலகத்திலும் ஒரு நாள் சம்பளத்தை சென்னை மக்களுக்காக பிடித்தம் செய்து நிவாரணப்பொருட்கள் வாங்கி சைலேந்திரபாபு அவர்கள் தலைமையில் விநியோகமும் செய்துவிட்டார்கள்.
எங்களை நம்பி, இத்தனை பணத்தையும் பொருளையும் தந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேருதவி செய்த அத்தனை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். யாருடைய பெயரையும் விட்டுவிடவில்லை, இருந்தும் தீவிரமாக உழைத்த சோலைமாயவன்,ஆன்மன்,செந்தில்குமார் உள்ளிட்ட அத்தனை நன்னெஞ்சங்களுக்கும் நன்றியும் அன்பும்...

இன்னும் நிறைய செய்ய ஆசை... நண்பர்கள் குழுக் குழுவாக ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து மொத்தமாக வளச்சிப் பணிகளைக் கவனித்துக் கொண்டு அனைத்து உதவிகளையும் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். இன்னும் நிறைய செய்ய வேண்டும். பார்க்கலாம்..

9 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. நிஜமாக மனமார்ந்த பாராட்டுகள் சார்!தனி நபர்களின் நிவாரண உதவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உங்கள் வெளிப்படையான பதிவும் பகிர்வுமே உதாரணம.
  இந்த மாதிரி அனைவரையும் ஒன்றிணைத்து சேவை செய்வது எத்தனை சிரமமானது என்பதை அனுபவ ரிதியில் நான் உணர்வேன். உங்களை யாரென தெரியவில்லை! ஆனாலும் ஹாட்ஸ் அப்.இப்படியேதொடருங்கள்,

  இதையே அனைத்து நிவாரண உதவி செய்வோரும் கடைப்ப்டித்தால் நன்றாக இருக்கும். அனைத்தினையும் வெளிப்படையாக் பகிர்தல் இன்னும் பலர் உடன் உதவிபுரிய வேண்டும் எனும் ஊக்கப்படுத்தலையும் தரும்-

  எல்லா மனிதர்களுக்குள்ளும் இன்னும் மனிதம் இருப்பதை இந்த மழை காட்டியது, இப்படிப்பட்ட எளிய மனிதர்களுக்குள் தான் ஈரம் அதிகமாக இருப்பதையும் இந்த மழைதான் காட்டியது.

  ஆமாம். அந்த பெரியவருக்கும் சல்யூட். அவர் கீர்த்தி மாளப்பெரியது. ஒருவேளை அத்தொகை அவரின் அந்த நாளுக்காக உணவுத்தேவைக்கான தொகையாக கூட அது இருந்திருக்கும்.

  அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி தோழர். வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது தான் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெற்றி. அது தான் நீண்ட பயணத்துக்கான துணையும் கூட.

   நீக்கு
 3. வாழ்த்துக்கள் பூபாலன் .நிறைவாக செய்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அய்யா. நீங்களும் எப்போதும் எங்களுடன் இருக்கிறீர்கள்

   நீக்கு
 4. உங்கள் அரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. உழைப்பாலும், நேரத்தாலும் நீங்களும், உங்கள் நண்பர்களும் ஆற்றிய சேவைக்குமுன், நாங்கள் ஒன்றுமே இல்லை... பல நல்ல உள்ளங்களை, இந்த வெள்ளம் அடையாளம் காட்டியுள்ளது. இந்த உள்ளங்கள் அனைவரும் ஓரமைப்பாகத் திரண்டால், தமிழ்நாட்டில் நலலதொரு மாற்றத்தைனைக் கண்டிப்பாகக் கொண்டுவர முடியும். அதற்கான முயற்சியில் தாங்களும் நண்பர்களும் இறங்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக முக்கியமான கருத்து அய்யா. காலம் அதைச் செய்யுமா என்று பொறுத்துப் பார்ப்போம். எங்களுக்கும் ஆவல் தான் எத்தனை இளைஞர்கள்.. அவர்கள் ஒன்றிணைந்தால் போதும் மாற்றம் நிச்சயம்

   நீக்கு