வியாழன், 10 டிசம்பர், 2015

அன்பு சூழ் உலகிது, அன்பு சூழ் வாழ்விது...

                       குறை சொல்லவும் , ஆதங்கப்படவும் , ஆத்திரப்படவும் என்னிடம் நிறைய சொற்கள் இருக்கின்றன ஆனால்.. ஆனால் ...... அதை விடவும் நெகிழவும், மகிழவும், கட்டியணைத்து கண்கள்  பனித்தும் நிறைய நன்றியும் அன்பும் நிறைந்த வார்த்தைகள் தான் முண்டியடிக்கின்றன.. என்ன சொல்வதெனத் தெரியவில்லை . லவ் யூ ஆல். யாரைக்குறிப்பிட்டுப் பாராட்ட, யாருக்கு நன்றி சொல்ல..

வெள்ளத்தில் தத்தளித்த சென்னை, கடலூர் மக்களுக்கு நீண்ட கரங்கள் அத்தனையையும் மானசீகமாகப் பற்றி கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். இந்த எளிய மனிதனால் அது மட்டுமே முடிகிறது.

சென்னை , கடலூரில் பெய்தது 112 ஆண்டுகளுக்குப் பின் பெய்யும் மாபெரும் மழை. முதல் நாள் மழை பெய்தபோது மாமழை போற்றுதும் என வழக்கம் போலவே கவிஞர்கள் கவிதைகள் எழுதினோம், மற்றவர்கள் கொண்டாடினோம். இரண்டாம் நாள் மழை இன்னும் உக்கிரத்தோடு பொழிய மெல்ல முகம் மாறத் துவங்கினோம். மூன்றாம் நாளிலேயே நம் சாலைகளின் , கட்டுமானங்களின், கட்டமைப்புகளின் சாயம் வெளுக்கத் துவங்கின.
நான்காம் நாளில் மழையின் முன் மண்டியிட்டு மன்றாடத்துவங்கிவிட்டோம் இரண்டு வாரங்களாகிவிட்டன. சாலைகளில், வீடுகளில் எங்கும் வெள்ளம். இப்போது மழை சற்று அமைதியாகிவிட்டாலும் வெள்ளமும் அதில் கலந்துவிட்ட சாக்கடைநீர் மற்றும் குப்பைகளும் இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பெரும் விளைவுகளைத் தந்து கொண்டேயிருக்கும்.

இந்த நாட்களில் எத்தனை எத்தனை அவலங்கள், பசிக்குரல்கள், மரண ஓலங்கள். இவற்றையெல்லாம் தாண்டி மழை நம்மை நெகிழ்த்தியிருக்கிறது. இந்த மழை வெள்ளத்தில் மக்களின் கருணை வெள்ளத்தைப் பார்த்தேன். அன்பு நதியைப் பார்த்தேன். உதவத்துடித்து எந்த பேதமுமற்று முன்வந்த மனிதத்தைப் பார்த்தேன். சக மனிதனுக்கு ஒரு இடரென்றால் பதறி ஓடிவரும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே இந்த வாழ்வின் மீது நம்பிக்கையை அளிக்கிறது.

இந்தப் பெருமழையின் தாண்டவத்தை நேரில் பார்க்கவில்லையெனுனும் தொலைக்காட்சி ஊடகங்களிலும், இணையத்திலும் காணும் காட்சிகள் கதிகலங்க வைத்தன. நேற்றுவரை அமைதியாக , சொகுசாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த எல்லோரையும் புரட்டிப் போட்டிருக்கிறது மழை வெள்ளம்.

வெள்ளம் எத்தனை பேரை இணைத்திருக்கிறது என்று நினைத்தாலே சோகத்திலும் ஒரு ஆறுதல் அலை மனதுக்குள் அடிக்கிறது.
ஓடி வந்து உயிர்களையும் உறவுகளையும் காப்பாற்றவேண்டிய அரசு படு மந்தமாக செயல்பட்டது அல்லது செயல்படவே இல்லை என்பதை மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள்.

டிசம்பர் 6 நாளென முத்திரை குத்தி பந்தோபஸ்து செய்துகொண்டிருந்தவர்களை அன்றைய தினம் பார்க்க முடியவில்லை. இந்த வெள்ள நிவாரணத்தில் இசுலாமிய சகோதரர்களின் பணியும்,உதவியும் மிகவும் முக்கியமானது. ஏராளமான இசுலாமிய சகோதரர்கள் பணமாகவும்,பொருளாகவும் அள்ளித் தந்தபடியே இருக்க, களத்திலும் அவர்களது செயல்கள் மெய்சிலிர்க்கும்படி இருந்தன. உணவு,உடை, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை வெள்ளம் என்றும் பார்க்காமல் உயிரைப்பணயம் வைத்து தேடித் தேடிப் போய் உதவினார்கள். சக மனிதனுக்கு ஒரு ஆபத்து என்றால் கூட்டமாக ஓடிவரும் மனிதர்கள் இருக்கும் வரை மதத்தால், சாதியால், இனத்தால் எவற்றாலும் எதுவும் செய்ய இயலாது. பாதிக்கப்பட்ட மக்களைப் பள்ளிவாசல்களில் தங்க வைத்ததாகட்டும், கர்ப்பிணிப் பெண் சித்ராவை யூனுஸ் தன் உயிரைப் பொருட்படுத்தாது காப்பாற்றியதாகட்டும் ( சித்ராவிற்குப் பிறந்த பெண் குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் சூட்டி நன்றியைத் தெரிவித்திருக்கிறார்கள். நெகிழ்ச்சியாக இருக்கிறது ) இந்துக் கோவிலை சுத்தம் செய்ய உதவியதாகட்டும் இசுலாமியர்களின் சேவை கண்கள் பனிக்கச் செய்வன.எங்களது நிதித் திரட்டலிலும் பெரும் களப்பணியும், நிதிப்பங்கும் இசுலாமிய நண்பர்களுடையது தான் எனும் போது பெருமை பொங்குகிறது.

மற்ற நடிகர்கள் இவ்வளவு தந்தார்கள் இவர் இவ்வளவுதான் தந்தார் என்று பொங்குபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. என்ன சொல்ல.? நடிகர்களை நாம் நடிகர்களாக மட்டுமா பார்க்கிறோம் ? தரத் தவறியவர்களை ஏசுவதை விடவும் தாராளமாகத் தந்து உதவியர்களை நாம் நன்றி பாராட்டியாக வேண்டும். தெலுங்கு நடிகர்கள் மிக தாராளமாக நிதியளித்தது மனம் நிறையச் செய்தது. தமிழ் நடிகர்களில் பலர் பணமாக உதவினர், சிலர் பொருளாக, நிவாரணமாக, தங்கும் இடமாக உதவினர். அனைவருக்கும் நன்றி. நடிகர்கள் சித்தார்த் மற்றும் பாலாஜியின் களப்பணி இணையத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர்களை விடவும் நமது நண்பர்களே அதிகம் உழைத்தவர்கள் இருக்கிறார்கள் என்றாலும். புகழில் இருப்பவர்கள் இப்படி களப்பணியில் இறங்குவது பாராட்டுதலுக்கும், வரவேற்புக்கும் உரியது. இவர்களின் மேல் குவியும் ஊடக வெளிச்சம் நிச்சயம் பலருக்கு உந்துதலாக இருக்கும் அவர்களும் உதவிக்கு வர.

தமிழகம் அவ்வப்போது தவிக்கவிடும் மீனவர்களின் உதவியும் மீட்புப் பணியில் மிகக் குறிப்பிடத்தகக்து. படகுகளை வெள்ளத்தில் இயக்கி அனைவரையும் மீட்டதும், நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்த்ததுமாக மிகச்சிறப்பான பணிகளைச் செய்துள்ளனர்.

இந்த இக்கட்டிலும், பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள்,துப்புரவுப் பணியாளர்கள், ரயில்வே துறை, இப்படி அரசு ஊழியர்கள் அனைவரின் தொடர் பணியையும் நாம் மனமாரப் பாராட்டியே ஆக வேண்டும்.

பள்ளிகள், தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், இணைய நண்பர்கள் என பலரும் வண்டி வண்டியாக உணவுப்பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவை சரியாகப் போய்ச் சேருமானால், அடுத்த பத்துப் பதினைந்து நாட்களுக்கு அந்த மக்களுக்கு நல்ல ஆதரவு. அதன் பின்பு..? அரசுதான் மறுசீரமைப்பைத் துரிதமாக செய்யவேண்டும். செய்வீர்களா ..? நீங்கள் செய்வீர்களா …?

இவர்களையெல்லாம் விட கண்களில் நீர் வரும் அளவுக்கு நெகிழ வைத்தவர்கள் இவர்கள் தான். பாலியல் தொழிலாளர்கள் தங்களது இரு வேளை உணவைக் குறைத்துக் கொண்டு ஒரு லட்சம் சேர்த்து அனுப்பியதும், தாய்மார்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரத் துணிந்ததும் படித்தவுடன் உருகச் செய்துவிட்டன.
இந்த வெள்ளம் ஒரு பேரிடர் என்றாலும், இது புரிய வைத்திருக்கிறது ஆபத்துக்காலங்களில் உதவிக்கு கரங்கள் நீள்கின்றன, மதம் இனம் மற்ற எல்லா பேதங்களையும் உடைத்து எறிந்துவிட்டு மனிதம் உதவி செய்ய கூட்டம் கூட்டமாகக் கிளம்பி வரும் என்பதை.

வாழ்வின் மீது ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது.

அன்பு சூழ் உலகிது, அன்பு சூழ் வாழ்விது, பிரதிபலன் பார்க்காது நம்மால் முடிந்தவரை சக மனிதன் மீது, சக உயிர்களின் மீது அன்பு செய்வோம்.
2 கருத்துகள்:

  1. இதனோடு இன்னும் ஒன்றையும் சேர்த்து கொள்ளுங்கள் சகோ // பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகள் சென்னை வெள்ள நிவாரண நிதியாக 52 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்!// //பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகள் சென்னை வெள்ள நிவாரண நிதியாக 52 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது //

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் நெகிழ்ச்சியான ஒன்று தான். இன்னொரு செய்தியும் கேள்விப்பட்டேன், நரிக்குறவர்கள் இணைந்து நூறு பாய்கள் வாங்கி அனுப்பியிருக்கிறார்கள். இப்படிப் பலர் நெகிழ வைத்திருக்கிறார்கள்.

      நீக்கு