புதன், 21 ஆகஸ்ட், 2019

வண்ணதாசனை வந்தடைதல்

வண்ணதாசனை வந்தடைதல்




கவிதை மீது மயக்கமாகி நிறைய எழுதியும் கிடைத்ததை மட்டும் எப்போதாவது வாசித்துக் கொண்டும் இருந்த பால்யத்தில் வாசிக்கக் கிடைத்த கவிதைகளில் வண்ணதாசன் இருந்திருக்கவில்லை.
கவியரங்கக் கவிதைகள், காதல் கவிதைகள், வார இதழின் நான்கு வரிக் கவிதைகள் என எங்கெங்கோ சுற்றித் திரிந்து கொஞ்சம் நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு கொண்டு வாசிக்கத் துவங்கும் போது தான் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கும் வசதியும் வந்தது.

அப்போதும் கவிதைகளை அடையாளம் காட்டுபவர்கள் யாரும் இல்லாத போதும் மிகத் தாமதமாக கல்யாண்ஜி என்ற பெயரை இந்தக் கவிதையில் கண்டு கொண்டேன்

சைக்கிளில் வந்த
தக்காளிக்கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளில்
பழங்கள்.
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்.
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை.

இந்தக் கவிதைக்கு முன்னும் பின்னும் நீண்டு கிடக்கும் கல்யாண்ஜியின் கவிதைகளைத் தேடி வாசித்த பின்பு இது ஒரு அற்புத மரம் எனப் புலப்பட்டது. அன்பின் மலர்களை பற்பல வண்ணங்களில் முகிழ்த்துக் கொண்டேயிருக்கும் இந்த மரத்தின் நிழல் எல்லோருக்குமானது...

கல்யாண்ஜியையே இத்துணை தாமதமாக வந்தடைந்தவன் அதனினும் தாமதமாகவே வந்து சேர்ந்தேன் வண்ணதாசனிடம் .. வண்ணதாசனின் கவிதைகளை, கல்யாண்ஜியின் கதைகளை வாசிக்குமளவுக்கு இப்போது இருவரின் சொற்களுக்கும் நெருக்கமாகிவிட்டேன்.

சிறுவயதில் கதைகளை வாசிக்கும் போது மனதுக்குள் அப்பத்தாவின் குரலிலேயே அந்தக் கதைகள் ஒலிக்கும்...

அவரது கவிதைகளின் நெகிழ்வை வாசிக்க வாய்த்த தனிமைத் தருணங்களில் அவருக்கு ஒரு குரலை நான் வரைந்து கொண்டேன். அந்தக் குரலில் தான் அவரது கவிதைகள் என் மனதுக்குள் வாசிக்கப்படும் ...
இதுவே பழக்கமாகிப் பின்பு ...
நல்ல கவிதைகளை வாசிக்கும் கணமெல்லாம் வண்ணதாசனின் குரலில் அவை ஒலித்துக் கொண்டிருக்கின்றன இப்போதெல்லாம்.

அவர் பிறந்த இந்த நாளில் அவரது கரங்களைப் பற்றிக்கொள்கிறேன்.. அவரது கவிதைகளைப் பற்றிக் கொள்கிறேன்... அவரது குரலையும்..

நெடுவாழ்வு வாழ ப்ரார்த்தனைகள் ஐயா...

வேறு ஒன்றும் செய்ய
வேண்டாம்.
காம்பை விரல்களால்
கவ்வி
எதாவது ஒரு பூவை
ஏந்திக் கொண்டிருங்கள்
போதும்

- கல்யாண்ஜி

1 கருத்து: