செவ்வாய், 17 ஏப்ரல், 2018

வாசகசாலை இணையதளத்தில் எனது மூன்று கவிதைகள்

நான் எப்போதோ அனுப்பி, எப்போது வெளியானது என்று தெரியாமலே வாசகசாலை இணையதளத்தில் வெளியாகியிருக்கும் எனது மூன்று கவிதைகளை இப்போது கண்டேன்.... அவை ...

1)

புகை வண்டியை விடவும்
மிகத் தாமதமாய்
வந்து சேர்ந்தேன்
புகைவண்டி நிலையத்துக்கு.

நான் செல்ல வேண்டிய வண்டியின்
கூவொலி மட்டும் தூரத்தில்
தேய்ந்தபடியிருக்க
தண்டவாளங்களை வெறித்துப் பார்க்கிறேன்.

நானற்ற அந்த வண்டியில்
எனது இருக்கை
நிரப்பப் படாமலேயோ அல்லது
தாமதமாகவோ நிரப்பப் படக்கூடும்.
எனது திட்டமிட்ட பணிகள்
தள்ளிப் போகின்றன.
அடுத்த வண்டிக்கான காத்திருப்பிலிருப்பவர்கள்
ஆயத்தமாகிறார்கள்.
தண்டவாளங்களுக்கு நடுவில்
மனிதக் கழிவுகளைக் கழுவிக்கொண்டும்
கூட்டிக் கொண்டும் இருக்கும்
ஒரு அழுக்கு மனிதனின்
கைகளில் கிடைக்கிறது
யாரோ தவறவிட்ட
ஒரு சிறு மலர்.
அவன் அதை சில நேரம்
முன்னும் பின்னும் பார்த்துவிட்டு
சாக்குப் பையில் திணித்துக்கொள்கிறான்
நான் திரும்பி நடக்கிறேன்.

2)
காத்திருக்கிறேன்
உனது ஒரு ஸ்மைலி சமிக்ஞைக்காக.
உயிர் ஊடுருவும் குளிர் பிரதேசமொன்றில்
ஆவி பறக்கக் கிடைக்கும் தேநீர் அது எனக்கு

காத்திருக்கிறேன்
உனது ஒரு குறுந்தகவலுக்காக
மூச்சிழுத்துக் கொண்டிருக்கும் நோயாளியொருவனின்
பிராணவாயுக் குழாயின் மூர்க்க சொருகல் அது எனக்கு

காத்திருக்கிறேன்
உனது ஒரு அழைப்புக்காக
நெடு ஓட்டத்தின் பின் மூச்சிறைந்து நின்று
கிடைக்குமொரு குவளை நீர் அது எனக்கு

காத்திருக்கிறேன்
உன் ஒரு விர்ச்சுவல் அணைப்புக்காக
உன் ஒரு விர்ச்சுவல்புன்னகைக்காக
உன் ஒரு விர்ச்சுவல் செவிமடுத்தலுக்காக
என் காத்திருப்பை
மிக மிகத் தாமதமாய்
முகம் திருப்பிப் பார்த்துவிட்ட நீ
ஒரு அலட்சியப் புன்னகையுடன்
அலுவலகக் கோப்புக்குள்
மீண்டும் மூழ்கியிருக்கக் கூடும்.
இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கிறேன் நான்
மினுங்கி மினுங்கி உன் மேசையில்

3)
சற்றைக்கெல்லாம்
இழுத்தறைந்து சாத்திவிட வேண்டும்
இக்கதவுகளை உட்பக்கமாக.

வாயிற்காப்பாளன்
மிகு போதையிலிருப்பதன் சூட்சுமம்
புரிகிறது.
குளிர்ப்பதன அறையிலும்
நான் வியர்வையில் நனைந்துகிடப்பதை
இப்போது தான் நீயும் பார்க்கக் கூடும்
விருப்ப உறவொன்றின்
சில்லிட்டுக் கிடக்கும் சடலத்தை
உற்று நோக்குங்கால்
அதன் கண்கள் ஒருமுறை
சிமிட்டி மூடுவதைக் கண்டபின்பு
இந்தக் கதவுகள் திறந்திருப்பது
பேராபத்து
ஒரு பிணவறையிலா
உனது ஒளிர்விழிகளைச்
சந்திக்க நேர்கிறது கடைசியாய்.
இதோ வருகிறேன்
கடைசியாய் இந்தக் கதவுகளை
இறுகத் தாழிட்டுவிட்டு

நன்றி : வாசகசாலை இணையதளம்

19 கருத்துகள்:

  1. கவிதைகள் நன்றாகவிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பரே இரசித்தேன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. அடுத்த புகைவண்டிக்கான காத்திருப்பில் எளிமையான வார்த்தைகளில் வடிவமைத்த மனதை தொடும் அற்புதமான கவிதைகள்!!

    பதிலளிநீக்கு
  4. நிரப்பபடாத என்இருக்கை,குளிர்பதன அறையில் உயிரற்று.. நல்லாயிருக்கே.

    பதிலளிநீக்கு
  5. மலர் வாரமலரா ? மனிதக்கழிவு--அழுக்குமனிதன்
    இந்நிலை மாறுமா ?
    யதார்த்தம்

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான கவிதைகள் அண்ணா

    பதிலளிநீக்கு