புதன், 4 ஏப்ரல், 2018

கவிதையும் கானமும்

கடந்த மார்ச் 21 உலக கவிதைகள் தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் கோடை பண்பலையிலிருந்து தோழர் அதியமான் அவர்கள் அழைத்து ஒரு நேரலை பேட்டி தர வேண்டும் வானொலி நிலையம் வாருங்கள் என்றார். வேலை நாள் என்பதால் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்ல இயலவில்லை.

சென்ற வாரம் அழைத்து, பேட்டி தான் தரவில்லை, கவிதையும் கானமும் என்ற நிகழ்வு இருக்கிறது. உங்களது சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசிப்போம், அதையொட்டிய பாடல்களை ஒலிபரப்புவோம் நீங்கள் அந்தக் கவிதை சார்ந்த அனுபவங்களைப் பகிருங்கள் அலைபேசியிலேயே பதிவு செய்து கொள்கிறோம் என்றார். சென்ற செவ்வாய்க்கிழமை கவிதைகளைத் தேர்வு செய்து வைத்துக்கொண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுரேந்தர் அழைத்தார். இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஒலிப்பதிவு செய்துவிடலாம் என்றார். அந்தக் குறுகிய நேரத்தில் அவர் தேர்வு செய்த எனது கவிதைகளைப் பற்றிய என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். கடந்த வியாழன் ( 29.03.2018) அன்று கோடை பண்பலையில் ஒலிபரப்பானது. வேலை நேரம் என்பதால் என்னால் கேட்க இயலவில்லை.

பின்பு தொகுப்பாளர் அந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவுகளை அனுப்பி வைத்திருக்கிறார்… சுரேந்தர் அவர்களின் குரலில் எனது கவிதைகளைக் கேட்கவே அவ்வளவு இனிமையாக இருக்கிறது. நல்ல உச்சரிப்பு. மேலும் எனக்குப் பிடித்தமான பாடல்களையே தேர்வு செய்தும் ஒலிபரப்பியிருக்கிறார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இங்கு நான் பேசிய எனது அனுபவங்களையும் கவிதைகளையும் தட்டச்சி பதிவு செய்துள்ளேன் இருக்கட்டும் என்று. ஒலிப்பதிவையும் இணைத்துள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்தும் கேட்டும் விட்டு கருத்துகளையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளுங்கள் …

ஒலிப்பதைவைக் தரவிறக்கிக் கேட்க இங்கு சொடுக்கவும் 


கோடை பண்பலை நேயர்களுக்கு இனிய வணக்கங்கள். நான் இரா.பூபாலன். பொள்ளாச்சியிலிருந்து பேசுகிறேன். கவிதைகளின் மீது தீராக் காதல் கெண்டவன், இதுவரை பொம்மைகளின் மொழி, பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு , ஆதிமுகத்தின் காலப்பிரதி என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். கோவை கணபதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்தில் இளநிலை மேலாளராகப் பணிபுரிகிறேன். படித்ததெல்லாம் பொறியியல் என்றாலும் சிறுவயது முதலே புத்தக வாசிப்பில் ஆர்வம் அதிகம். அதுவே தமிழ் மீதும் கவிதைகளின் மீதும் பெரும் காதலைக் கொண்டு வந்தது. பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற அமைப்பைத் துவங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக நண்பர்களுடன் இணைந்து  நடத்தி வருகிறேன். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை எங்களது இலக்கிய நிகழ்வு நடைபெறும்.

இன்று எனது கவிதைகளில் சிலவற்றையும் அது சார்ந்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மழை இந்த மண்ணின் உயிர்களுக்கெல்லாம் ஆதார சக்தி. மழைத்தூறல்கள் மண்வாசத்தைக் கிளர்த்துவது போலவே கவிஞர்களின் மன வாசத்தையும் சற்றே கிளர்த்தி விட்டு விடும். ஆகவே தான் மழைத்தூறல்கள் மண்ணை நனைக்கத் துவங்கிய மறுகணத்திலேயே கவிஞனின் மனது கவிதைகளை மலர்த்தத் துவங்கி விடுகிறது. மழையை பல்வேறு கோணங்களில் கவிதைகளாகப் படம் பிடித்திருக்கிறேன் என்றாலும் இந்தக் கவிதையில் நான் ஒரு மழை இரவின் சில நிகழ்வுகளைப் படம் பிடித்திருக்கிறேன். மழை ரசிக்கச் செய்கிறது, சபிக்கவும் செய்கிறது, குழந்தைமையை, காதலை, காமத்தை, கிளர்த்தி விடுகிறது என்கிற அனுபவம் தான் இந்தக் கவிதை.

மழையிரவு நிகழ்வுகள்

மழை கொட்டிக்கொண்டிருக்கிற
இந்தச் சாலையில்
குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
எதுவும் நிகழவில்லை
இவ் விரவில்

வழக்கம் போலவே
மழையை ரசித்துக்
கொண்டும், சபித்துக்
கொண்டும் கடந்து
கொண்டிருந்தார்கள் மனிதர்கள்

மெல்லிய விளக்கொளியில்
மழைக்கு ஒதுங்கிய
ஒரு ஜோடியின்
முத்தத்தை சமன்
குலைத்தபடிக் கடந்தன
வாகனங்கள்

சன்னலில் கைநீட்டி
மழையை ஏந்திக்
குதூகலித்துக் கொண்டிருந்த
குழந்தையை சிநேகத்துடன்
முத்தமிட்டுக் கொண்டிருந்தது மழை

மழைக்கு முந்திய அந்தியில்
நிகழ்ந்த பெருவிபத்தொன்றில்
அடிபட்டு
இறந்து போன
யாரோ ஒருவனின்
குருதியைச் சத்தமின்றிக்
கழுவிக் கொண்டிருந்தது
மழை

மழையின் ஓசையோடு மட்டும்
                           ( பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு )                                                       

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நவீன உலகில், உலகமே நமது கைகளுக்குள் சுழலத் துவங்கிவிட்டதாக நம்புகிறோம். நமது தூரங்களை இணையமும் அலைபேசியும் இன்ன பிற தகவல் தொழில்நுட்பக் கருவிகளும் வெகுவாகக் குறைத்து விட்டது என்று நம்பினாலும், அது உலகின் வெவ்வேறு மூலைகளில் வெகு தூரத்தில் இருப்பவர்களை இணைத்து வைத்திருப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் அருகில் இருப்பவர்களைக் கூட அந்நியமாக்கி வைத்திருக்கிறது. இணையம் மற்றும் சமூக ஊடகங்கள்  ஒரு நிழல் உலகம் இங்கு பலர் பல்வேறு வகையான முகமூடிகளுடன் தான் உலவி வருகிறார்கள் . ஒரு வேளை வேற்று முகமூடியுடன் நமக்குப் பிரியப்பட்டவர்களையே நாம் எதிர்கொள்ளும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் இந்தக் கவிதையின் சாரம்..

நிழல் உலகம்

உனக்குத் தெரியாமல் ஒரு
உலகில் உலவிக் கொண்டிருக்கிறேன்

பொம்மை,பூக்களின் முகங்கள்
கொண்ட அழகான பெண்களுடன்
உரையாடிக் கொண்டிருக்கிறேன்

அவர்களிடம் என்
வலிகளை, அந்தரங்கங்களைப்
பருகத் தருகிறேன்

வெயிலின் வெம்மை மறைத்த
அப் புதிய உலகில்
யாவும் மகிழ்ச்சியாகவே
நிகழ்ந்து கழிகின்றன

இளைப்பாறுதல்களும்
எல்லை மீறுதல்களும்
மலிந்து கிடக்கும்
இவ்வுலகில்

பொய் முகத்துடனும்
புனை பெயருடனும்
ஒரு வேளை
நீயுமிருக்கலாம்
என்ற எண்ணம்
வரும் போது மட்டும்
ஒரு கணம் நின்று - பின்
துடிக்கிறது இதயம்

( பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ).


எப்போதாவது வரும்  மழையை எப்போதும் ரசிக்கும் நாம் எப்போதும் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒளியை, வெயிலை என்றாவது சிலாகிக்கிறோமா என்றால் இல்லை. உண்மையில் வெயிலும் மழையும் பருவகாலத்தின் இரண்டு பக்கங்கள். இரண்டும் இல்லாமல் நாம் வாழ இயலாது. எப்போதும் மழைக்குப் பின் வெயிலும் வெயிலுக்குப் பின் மழையும் தேவைப்படுகிறது. இங்கு மழையையும் வெயிலையும் குறியீடாகக் கொண்டால் வாழ்வின் இன்பம் துன்பம் இரண்டையும் ஒப்பிட்டு நாம் சமமாக பாவிக்க வேண்டும் என்பதைப் பேசுகிற கவிதை இந்தக் கவிதை.

மழையும் வெயிலும்

மழையின் இரைச்சலைப் போல
எந்தச் சத்தமுமில்லாமல்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
வெயில்

மழை வருவதற்கான
அறிகுறிகள் அறிந்த
நாம் அறிந்திருக்கவில்லை
வெயிலுக்கான அறிகுறிகள்

மழையைப் போல
இரு கைகளாலும்
வாரியெடுக்க முடிவதில்லை
வெயிலை

வெயிலின் வெம்மையை
மழை போக்க
மழையின் சிலிர்ப்பை
வெயில் நீக்கவென
எப்போதும் தேவைப்படுகிறது
மழைக்குப் பின் வெயிலும்
வெயிலுக்குப் பின் மழையும்

( பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு )

ஒரு பிரிவு என்பது எந்த வகையில் பார்த்தாலும் வன்முறை தான். ஒரு நெருக்கமான உறவைப் பிரிவது என்பது உயிரை விட்டு உடல் பிரிவது போலான கொடுமை. நமது விரல்களை நமக்கு விருப்பமான விரல்களிடமிருந்து பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது அசாத்தியமானது. அதைச் சாத்தியப்படுத்த நாம் கல்லாக சமைய வேண்டும். இறுகி இறுகி பின் தான் பிரிவைத் தாங்கும் பக்குவத்தைக் கொண்டு வர வேண்டும் என்கிற உணர்வு தான் இந்தக் கவிதை

அத்தனை சுலபமில்லை
கோர்த்திருக்கும் விரல்களிடமிருந்து
நமது விரல்களை
சடக்கெனப் பிரித்துக்கொள்வது

கோர்த்திருக்கும் விரல்களிடமிருந்து
பிரிக்கையில் முதலில்
நாம் சமாதானம் செய்ய
வேண்டியது நம் விரல்களை

பிரிவுகளின் வலியின்றி
பிரிவின்றி வேறு வழியின்றி
நமது விரல்களை
மென்மையாக விடுவித்துக்
கொள்வது எத்தனை கொடுமை
என்ற எண்ணத்தை முதலில்
துடைத்தழிக்க வேண்டும்

அவ்விரல்கள் நமக்கு
அசூயை என்று நம் விரலுக்கு
அறிவுறுத்தல் அவசியம்

மென்மையாகப் பிரித்தெடுத்த
அடுத்த கணம்
நாம் செய்ய
மறக்கக் கூடாத ஒன்று

உடனடியாக நம்
விரல்களில் வலுக்கட்டாயமாக
ஒரு கத்தியைத் திணிப்பது தான்நமது நிகழ்காலத்தில் நமது சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிற பேராபத்து குடி. மது அமுதமா என்ன ? அது விஷம் தான். அது குடிப்பவர்களை மட்டுமா கொல்கிறது, குடும்பத்தையே கொல்கிறது, இந்தச் சமுதாயத்தையே சீரழிக்கிறது. மதுவைக் குடிக்கத் துவங்கிய கணத்தில் மனிதன் சாத்தானாக மாறிவிடுகிறான் என்கிற எனது அச்சமும், கவலையும் தான் இந்தக் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.... உண்மைதான் மனிதனை சாத்தானாக்க வந்த விஷம் தான் மது ..

சாத்தானின் கதை

யாரின் சாபமோ
திரவ வடிவில்
புட்டியடைத்துக்
கிடக்கிறது சாத்தான்

நெற்றி வியர்வை சிந்தி
சம்பாதித்த
பணம் கொடுத்து
வாங்குகிறீர்கள் சாத்தானின்
குடுவையை.

மூடியைத் திறக்கையில்
நுரை பொங்க
மகிழ்ச்சியுடன்
உங்கள் கோப்பையில்
நிறைகிறது

ஒரு மிடறு
விழுங்குகிறீர்கள்
முகம் சிவக்க
உங்கள் நரம்புகள் வழி
வேகமாக ரத்தத்தில் கலங்கி
மூளையில் கலக்கிறது
சாத்தான்.
மெல்ல மெல்ல
அதன் கட்டுப்பாட்டில் நீங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
உங்கள் மூளை
சூடேற
கொஞ்சம் கொஞ்சமாக
வடிவம் மாறிக் கொண்டிருக்கிறீர்கள்
முடிவில் ஒரு
சாத்தானாக மாறிவிட்ட நீங்கள்
முதலில் என்ன செய்வீர்கள் ?


ஆதிமுகத்தின் காலப்பிரதி

மரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு கனவுகளில் இருப்பான் இளமையில். முதுமை நெருங்க நெருங்க மரணம் பற்றிய பயம் வரும். மரணம் சமீபத்துவிடுகிற சமயத்தில் ஞானமும் கூட வரும். நிச்சயக்கப்பட்ட ஒரு முடிவை நோக்கி தான் நாம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகிறோம். எனது மரணத்தை நான் ஒரு புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்கிற எனது விருப்பம் தான் எனது இந்தக் கவிதை

அகோரன்

எனது அந்திமத்தின்
கடைசிக் கணத்தில்
எதைப் பிரதிபலித்துக்
கொண்டிருக்குமென் முகம் ?

கடைசி நொடிவரை
கை பற்றி வந்த நட்பையா

நுரைத்துப் பொங்கிப்
பிரவகித்த காமத்தையா

நாட்கள் அனைத்தையும்
நகர்த்தி வந்த காதலையா

கடைசி நொடியைக்
கண்டு நடுங்குகின்ற
அச்சத்தையா

எதுவாகினும் என்
முகமப்போது ஒளிர வேண்டும்
ஒரு சிறு புன்னகையுடன்

அன்பின் நீரூற்றி ஊற்றி
கவிதைகளால்
கட்டமைத்துக் கொண்ட
இம்முகத்தின்
ஆதி அகோரத்தை
மீண்டும் எதுவும்
மேலெழுப்பி விட வேண்டாம்


காதலில் பிரிவு வந்த பிறகு வரும் இரவு நமது உறக்கத்தைப் பறித்து விடும். காதலி இல்லாத ஒரு இரவை உறக்கமாக மாற்ற பெரும் பிரயத்தனப்படும் காதலன் ஒருவனின் இரவு முழுவதுமான போராட்டம் தான் இந்தக் கவிதை

இந்த இரவைப்
புலம்பல்களாக்குகின்றேன்
அவை உன்
காலடியில் மன்றாடுகின்றன

இந்த இரவைக்
கண்களாக்குகின்றேன்
அவை உன் மேல்
கண்ணீர் சொரிகின்றன

இந்த இரவை
ஒரு பெருமூச்சாக்குகிறேன்

அப்போதும் அடங்க மறுத்த
இவ்விரவை
ஒரு நாய்க்குட்டியின் கழுத்தென
நீவிப் பார்க்கிறேன்

உறக்கமாக்க
வழிகளேதுமறியாத
நீயற்ற இந்த இரவை
வேறு வழியின்றி
ஒரு கொடுஞ்சாபமாக்கி
எனக்கே
கையளித்துவிட்டு
அமர்ந்திருக்கிறேன்
கொட்டக் கொட்ட விழித்தபடி


பேசும் சக்தி உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே கிடைத்த வரம். ஆகவே தான் அவனுக்கு பேச்சு ஆயுதம். பேச்சு என்பது குரல். குரல்கள் ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொரு உணர்விலும் தனித்தனி ஒலியமைப்புகளில் வெளிப்படும். ஒரு குரல் நமது வலிகளைக் குறைக்கக் கூடும், ஒரு குரல் ஒரு தற்கொலையைக் கூட தடுத்து நிறுத்தக் கூடும். ஆகவே நமது பேச்சில் நமது குரலில் எப்போதும் அன்பின் ஊற்று பொங்கிப் பெருகட்டும் என்பது தான் இந்தக் கவிதையின் விருப்பம்

குரல்கள்

ஒரு குரல்
பெரும் வாதையின் ஒற்றை
நிவாரணியாகிவிடுகிறது

ஒரு குரல்
காலாதி காலக் கனவுகளின்
ஒலிரூபமாகிறது

ஒரு குரல்
பிறழ் பொழுதுகளின்
கூர் முனைகளை
மழுங்கச் செய்துவிடுகிறது

அசரீரியாகிறது ஒரு குரல்
வாழ்வாகிறது ஒரு குரல்
கள்ளத் தோணியாகிறது ஒரு குரல்

வேறு வேறு முகங்களுக்கு
வெவ்வேறு குரல்களுண்டு

ரட்சிக்கும் குரல்களுக்கு
வேறு வேறு
முகங்களில்லை

அன்பின் குரல்களுக்கு
எப்போதும் ஒரே முகம்
குழந்தைகள் நமக்குத் தரும் வரங்கள் முத்தங்கள்.. ஒவ்வொரு முறையும் வீட்டுக்குச் செல்லும் போதும் முத்தங்களால் வரவேற்பாள் மகள். அழுக்குப் படிந்து ஒரு வேலை நாளில் வீடு திரும்புகையில் ஓடி வந்து முத்தமிட வந்தவளை, இரு பாப்பா முகம் கழுவி வருகிறேன் என்று மறுதலித்து விலகினேன். அவள் முத்தத்தை வைத்துக்கொண்டு கன்னத்தில் கை வைத்தபடி காத்திருந்தாள். அந்தக் காத்திருப்பு எனக்கு கவிதையானது. அந்தக் கவிதையைத் தான் நான் எழுத்தாக்கினேன்.

வருகையை தூரத்திலேயே
பார்த்துவிட்டவள்
வாசலுக்கே ஓடி வந்து
கழுத்தைக் கட்டிக்
கொள்கிறாள்
குளித்து விட்டு வருவதாகச்
சொல்லி விலக்கி
நடக்கிறேன்

குளித்து முடித்து வரும்
வரைக்கும்
குளியலறை வாசலிலேயே
கன்னத்தில் கைவைத்துக்
காத்திருக்கிறது
ஒரு குட்டி முத்தம்3 கருத்துகள்:

 1. அருமையான பதிவு. இன்னுமின்னும் உங்கள் கவிதைகள் உலகம் முழுவதும் வலம் வர வாழ்த்துகிறேன். கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்!
  https://goo.gl/QsFZ11
  பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
  #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #thirukkural
  #சிகரம்
  #SigarambharathiLK

  பதிலளிநீக்கு