வெள்ளி, 30 மார்ச், 2018

உலகெங்கும் இட்லிகள்

நேற்று ( 30.03.2018 ) உலக இட்லி தினம் நேற்று இட்லியைப் பற்றி எழுதத் துவங்கி வேலைப் பளுவால் விடிந்து இன்றாகிவிட்டது … அதனாலென்ன தினமும் இட்லி சாப்பிடுவர்களுக்கு தினம் தினமே இட்லி தினம் தான் …


இட்லி நமது பாரம்பரிய உணவு … உலகம் முழுதும் இருக்கும் உணவு விரும்பிகளின் பட்டியலில் நிச்சயம் இட்லி இருக்கும். இந்திய வரைபடமே சிலருக்கு ஒரு பெரிய இட்லியாகத் தெரியக்கூடும்.
நம் எல்லோரின் வாழ்விலும் இட்லிகள் உண்டு. சிலருக்கு இட்லி ஆத்திகத்தைப் போல சிறு வயதில் விரும்பியோ விரும்பாமலோ அதுவே ஊட்டப்படும், வளர்ந்து விட்ட பின்பு அதன் மீது ஒரு வெறுப்பு வந்துவிடும், முதுமை நெருங்க நெருங்க நமது உடல்நலத்தின் மீது சந்தேகம் வரத்துவங்கியதும் அது நமது தவிர்க்க முடியாத துணையாகிவிடும்…

இட்லி தென்னிந்தியாவின் , தமிழகத்தின் உணவு என்று இப்போது நம்பப்பட்டாலும் அது இந்தோனேஷியாவில் இருந்து வந்த உணவு என்று சில வரலாற்றுத் தகவல்களும் உண்டு. இட்லியின் பெயர்க்காரணம் இட்டளி என்றும் இட்டரி என்றும் இட்டவித்து அளி என்று இருந்து இட்லியாக மருவியதாக கிடைக்கப்படுகின்றன.


தினமும் இட்லிகள் மலிவாகக் கிடைக்கிற இந்தக் காலம் போலல்லாமல் அந்தக் காலம் இட்லிகள் அபூர்வமான காலம். சிறுவயதில் தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களின் காலை உணவாகத்தான் இட்லி செய்வார்கள். ஆகவே இட்லி செய்கிற நாட்களே திருவிழாவாக இருக்கும் என நம்பலாம். அல்லது உறவினர்கள் வருகை என்றால் , மூலக்கடை அண்ணாச்சியிடம் சரக்குகள் கடன் வாங்கியாவது அடுப்பில் ஆவி பறக்க இட்லிகள் அவிக்கப்படும். அப்போதெல்லாம் ரேசன் அரிசியில் மாவரைத்து, ரேசன் வேட்டியை வெட்டி பாத்திரத்தில் பரப்பிச் செய்வதால் அது ரேசன் இட்லியாகத்தான் பார்க்கப்பட்டது எங்களுக்கு.
மதுரை இட்லி, செட்டிநாடு இட்லி, கர்நாடகா இட்லி,ராம்சேரி இட்லி என்று ஒவ்வொரு ஊரிலும் தனிச்சிறப்பு மிக்க இட்லிகள் தயாரானாலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இட்லி என்றதும் குஷ்பு இட்லி என்ற நினைவு வரும்படி அபத்த வரலாற்றையும் தமிழன் எழுதி வைத்தது தான் வேடிக்கையாகிவிட்டது.
இட்லி நமது உணவு அடையாளமாக மாறிப்போன பின் , அவற்றுக்குக் கூடுதல் மதிப்பு கிடைத்துவிட்டது. உலகெங்கும் தமிழர்கள் வியாபித்தும் வியாபாரித்தும் இருக்கும் காரணத்தினால் உலகின் அநேகப் பகுதிகளிலும் இப்போது இட்லிகள் அவிக்கப்படுகின்றன, ருசிக்கப்படுகின்றன , சிலாகிக்கப் படுகின்றன

இட்லியை அரசியல் குறியீடாக்கி நன்கு வேகவைத்து சுடச் சுடப் பரிமாறப்பட்ட ஒரு அற்புதமான கவிதை தோழர் செ.இளங்கோவன் அவர்களது கவிதை..
இட்லிகளின்  நிகழ்காலம்

இட்லிகள் மலிவானவை
உலக அளவில் விரைவாக அழிந்துவரும்
உணவு வரிசையில் இட்லிகள் உள்ளன
அவற்றுக்குத் தாம் இட்லிகள்
அறிந்துணர்வு எப்போதும் இருந்ததில்லை

அடுத்தவன் வயிற்றில் அடித்துப்
பிழைக்க அவற்றுக்குத் தெரியாது
ரொட்டி, சப்பாத்தி , கோங்குரா சட்னி, 
தேங்காய் புட்டு,
எல்லாவற்றுக்கும் இட்லிகளைக் கண்டால் 
இளக்காரம்.
அது குறித்து இட்லிகளுக்கும் கவலையில்லை.

பசித்த வயிறுகள் தேடி
தவ ஓட்டம் ஓடிச் செல்வதே 
இட்லிகளின் வரலாறு

அண்டார்டிகா தவிர 
அனைத்துக் கண்டங்களிலும்
இப்போது இட்லிகள் கிடைக்கின்றன

தற்காலிகப் பானைகளில் உருவாகி
தமைச் செரிக்கும் நொதிப்பைகள் தேடிச் சென்று
அடைக்கலமாகி உள்ளாற்றலழிந்து
தன்னை விழுங்குபவனுக்கே
உயிராற்றல் வழங்கி
மலமாய் மிஞ்சுதலே அவற்றின் வாழ்வு.

இட்லிகள் வெதுவெதுப்பானவை
என்று கவிஞர் நா.முத்துக்குமார் 
சொன்னது பொய்.
இட்லிகள் பனிப்பாறைகளைப் போன்றவை
இட்லிகள் ஆழிசூழ் உலகனைய ஆற்றல்
நிரம்பியவை
ஒரே குறை
கோடிக்கணக்கில் வெந்துகொண்டிருக்கும்
இட்லிகளுக்கு ஒரு தேசமில்லை

இந்தக் கவிதை அவரது ஆறெழுத்து மந்திரம் எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்று பலராலும் வெகுவாக ரசிக்கப்பட்ட கவிதை..

இட்லியைப் பற்றிய இன்னுமொரு பேராச்சர்யம் எனக்கு என்னவெனில், சிறுவயது முதல் இன்று வரை இட்லியை உப்புமாவின் இன்னொரு முகம் போல எண்ணி வெறுக்கும் ஒருவனை இட்லியைப் பற்றியே எழுதச் செயத இட்லியை நினைத்துத்தான் ….

டாட்

14 கருத்துகள்:

 1. குழந்தைங்களுக்கு,தாய்ப்பாலுக்கு அப்றம் சிறந்த உணவு இட்லிதான்..ஆறு மாசத்துக்கப்றம் அழகா குடுக்கலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இட்லிக்கு இவ்வளவு பெரிய வரலாறு இருக்கும் போது அது எப்படி சாதாரண இட்லி தான் சொல்ல முடியும்🤔 மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது

   நீக்கு
  2. இந்தியா பெரிய இடலியா? இட்லி பிடிக்காட்டி இந்தியா இட்லியாத்தான் தெரியும்

   நீக்கு
 2. விரும்பி உண்ணால் வெருப்பு எதற்கு வரப்போகிறது, விரும்பி உண்போம் விருந்தோம்புவோம் ! மிகவும் அருமையான கருத்துக்களை சுமந்திருப்பது அழகுடைத்து.

  பதிலளிநீக்கு
 3. இட்லியை விரும்பி உண்பவர் பலர். பெரிய குடும்பங்களில் சிலருக்கு சலித்துபோய்விட்ட சிற்றுண்டி. சில நாட்களுக்கு முன்பு மாடர்ன் பிரட் நிறுவனம் ஏன் இவர்களின் மாடர்ன் பிரட்' வடநாட்டில் விற்பனையாவது போல தமிழ் நாட்டில் விற்பதில்லை? என்ற கேள்வியை முன்னிறுத்தி நடத்திய சர்வேயில் கிடைத்த பதில். பிரட் தமிழ்நாட்டில் விற்பனையாகாது போனதன் காரணம் "இட்லி"

  பதிலளிநீக்கு
 4. அருமையான எண்ணங்கள்
  அடுத்து இந்தியா வரும்போது
  தங்கள் வீட்டு இட்லி சாப்பிட வரவுள்ளேன்!

  பதிலளிநீக்கு