செவ்வாய், 9 மே, 2017

கோடைக் குழந்தைகள் ...

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை ... 

கோடைக் குழந்தைகள் ...

கோடை விடுமுறை துவங்கிவிட்டது. காலியாக இருந்த வீடு குழந்தைகளால் நிறையப்போகின்றது . குழந்தைகளைச் சமாளிப்பது பெரிய வேலையாயிருக்கிறது இப்போதெல்லாம். அவர்கள் சளைக்காமல் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது, அவர்களது குறும்புகளை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கான கோடை வகுப்புகளைத் திட்டமிட வேண்டியிருக்கிறது, எங்காவது சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அப்பப்பா எத்தனை கவலைகள்.

நமது குழந்தைப் பருவம் இப்படி இருக்கவில்லை. விடுமுறை நாட்கள் என்பது பெரிய எதிர்பார்ப்புதான் என்றாலும் மற்ற நாட்கள் பெரும் பாரமாகவெல்லாம் இல்லை. அப்போதும் விளையாட்டு குதூகலத்துக்குப் பஞ்சமில்லாமலே இருந்தது.

பொள்ளாச்சி ஆனைமலைக்கு அருகில் உள்ள பெத்தநாயக்கனூர் நான் பிறந்த ஊர். அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.

வீட்டில் அப்பத்தா, ஆத்தா என நிறைய பாட்டிகளும், பக்கத்து வீட்டுப் பாட்டிகளும் இருந்ததால் வீட்டிலேயே எப்போதும் விளையாடியபடி இருப்போம் அவர்களுடன்.

தாயம்,பல்லாங்குழி, உமிக்காசு, ஆடுபுலி ஆட்டம் தான் பிரதானமான ஆட்டங்கள். தாயத்தில் கரம் போட்டு விளையாடுவது, வெட்டாட்டம்,  பரமபதம், காசு கட்டி தாயத்துக்கு ஆடுவது என பல கிளை விளையாட்டுகள் உண்டு. பல்லாங்குழியிலும் 12 முத்து, ஆறு முத்து, ஒன்னு விட்டு ஆட்டம் என பல கிளைகள். விடுமுறை நாட்களின் மாலைப்பொழுதுகளிலும், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரியில் இரவு விடிய விடிய கிழவிகளுடனும் அம்மா, அக்காக்களுடனும் விளையாடுவோம்.

அந்தச் சமயங்களில் கிழவிகள் சொல்லும் கதைகளும், சொலவடைகளும் அற்புதமானவையாக இருக்கும். ஊர்க்கதைகள், நீதிக்கதைகள், பேய்க்கதைகள், மந்திரக்கதைகள் எல்லாம் அவர்களது ஏற்ற இறக்கமான குரலில் கேட்டுக்கொண்டே விளையாடியது பொற்காலம்.

ஆடத்தெரியாதவ வீதி கோணல்னு சொன்னாளாம், அண்டப்புளுகன் காட்டுல கடுகு மொடாச்சோடாமா ( அண்டப்புளுகன் தன் காட்டில் கடுகு பானையின் அளவுக்கு இருக்குனு புளுகுவான் ), போன்ற கிராமியச் சொலவடைகளையும், ஊர்வம்புக் கதைகளையும் கேட்ட படி அவர்களுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறோம்.

வீட்டிலேயே பக்கத்து வீட்டு சிறுவர்கள், சிறுமிகள் கூடிவிடுவார்கள், டிரிங் டிரிங்.. யாரது? பேயது என்னா வேணும்? நகை வேணும் என்ன நகை? கலர் நகை என்னா கலர்? என்ற  உரையாடலில் பேயானவன் ஒரு நிறத்தைச் சொல்லுவான் அந்த நிறத்தை மற்றவர்கள் ஓடிப்போய்த் தொட்டுக்கொள்ள வேண்டும், தொடாதவர்களை பேய் தொட்டால் அவுட்.  வெள்ளை கலர் என்று சொன்னால் ஒருத்தன் பல்லைத் தொட்டுக்கொண்டு நிற்பான், அவனை பேய் தொட்டுவிட்டு நீ அவுட்டுடா உன் பல்லு வெள்ளை கலர் இல்லை மஞ்சள் கலர் என்று போங்காட்டம் ஆடுவோம்.. இப்படியான விளையாட்டுகள் திரும்பத் திரும்ப எத்தனை முறை விளையாடினாலும் அலுத்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குதூகல அனுபவம் கிடைக்கும்.

மாலை நேரங்களில் கிழவிகளுடன் விளையாட்டு எனில் விடுமுறை தினத்தின் பகல் நேரங்களில் பள்ளிக்கூட மைதானம் தான் கிடை.
வீட்டுக்கு அருகிலேயே பள்ளிக்கூடம் என்பதால் காலை சாப்பாடு முடித்தவுடன் கிளம்பி விளையாடப்போனால் மதியம் தான் வீடு திரும்புவோம் சில சமயங்களில் விளையாட்டு சுவாரஸ்யத்தில் மாலை ஆகிவிடும். உணவை மறந்து விளையாடிக்கொண்டிருப்போம். பையன்கள் பிள்ளைகள் என்ற பாகுபாடில்லை. அனைவரும் கூடுவோம்.

பையன்கள் மட்டுமெனில் கில்லி, பட்டம் விடுதல், மச பந்து, ஐஸ் பந்து என விளையாட்டு களை கட்டும்.
பிள்ளைகளும் சேர்ந்து கொண்டால், கோ கோ, நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, என விளையாட்டின் வண்ணம் மாறும்.
கபடி விளையாடுவோம். சிலை விளையாட்டு விளையாடுவோம்.
பல சமயங்களில் மண்ணில் புரண்டு அழுக்காகி, சட்டை கிழிந்து வீடு திரும்பிய கதையெல்லாம் உண்டு.

பள்ளி வளாகமெங்கும் வேப்பமரங்கள் பூத்துக்குலுங்கும். வெயிலின் கொடுமை துளியும் தெரியாது. இயற்கையாகவே பொள்ளாச்சி குளுமையான ஊர். எப்போதும் சில்லென்று தான் இருக்கும். எங்கள் பள்ளி மைதானத்தில் சுற்றிலும் மரங்கள் என்பதால் வெயிலின் தாக்கமோ, களைப்போ இருந்ததில்லை எங்களுக்கு. பசித்தால் வேப்பம் பழங்கள் தான் சமயங்களில் தின்பண்டம்.

அதுமட்டுமல்லாது, அங்கு கிடக்கும் வேப்பம் கொட்டைகளைப் பொறுக்கி அண்ணாச்சி கடையில் போட்டால் ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் தேறும். அதற்கு நெல்லிக்காய் , வத்தல் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு டவுசரில் துடைத்துக்கொண்டு விளையாட்டைத் தொடர்வோம்.

களிமண்ணை எடுத்து வந்து நாங்களே சமையல் சாமான்கள் செய்வோம், சட்டி பானை, அடுப்பு, கரண்டி எல்லாமே களிமண்ணில் நேர்த்தியாக தயாராகும். களிமண் காய்வதற்குள் வித விதமாக பூக்கள், இலை தழைகள் பறித்து வந்து வைப்போம். அதில் சமையல் நடக்கும். நான்கைந்து குழுவாக பிரிந்து இதைச் செய்வோம். ஒரு குழுவுக்குக் குறைந்தது ஒரு பெண்ணாவது இருப்பாள். வண்ண வண்ணமாக வித விதமாக சமையல் தயாராகும். அழகாக ( கவனிக்க சுவையாக அல்ல) சமையலைத் தயாரித்த குழுவுக்கு குச்சி ஐஸ் அல்லது கலர் சோடா பரிசு.

இப்போதெல்லாம் இந்த மாதிரியான விளையாட்டுகளுக்கு ஏங்குகிறேன். நம் பிள்ளைகளாவது விளையாடுவார்களா எனப் பார்க்கிறேன். நவீன விளையாட்டுகளிலும், கணினி, அலைபேசித் திரை விளையாட்டுகளிலும் தான் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

நமது மரபான கிராமிய விளையாட்டுகள் நமக்குத் தந்த உடல் பயிற்சியையும், மனப் பயிற்சியையும் இந்த விளையாட்டுகள் ஒரு போதும் தந்துவிட முடியாது. மண்ணில் புரண்டு விளையாடி நாம் மண்ணோடு மண்ணாக இருந்தோம். இப்போது நமது பாதங்கள் மண்ணில் பதிவதே இல்லை. மண்ணை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். சொந்த ஊரிலேயே அகதிகளைப்போல.

நாமும் அவர்களை சும்மா இருக்க விடுவதில்லை. ஒரு மாதம் விடுமுறையா ? மாலையில் இந்தி அல்லது ஃப்ரெஞ்ச் வகுப்பு, வார இறுதிகளில் கராத்தே குங்பூ வகுப்புகள். பத்தாவது அல்லது பன்னிரண்டாவது போகப்போகிறவர்கள் தீர்ந்தார்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது படி படி என்று பந்தாடிவிடுவோம்.

கோடை விடுமுறை நாட்களிலாவது மற்ற நாட்களில் அவர்களுக்குக் கிடைக்காத சிலவற்றை நாம் அவர்களுக்குத் தரச் செய்யலாமே. கிராமங்களுக்கு அழைத்துச் சென்று உறவுகளுடன், மனிதர்களுடன் அவர்களைப் பழகச் செய்யலாம், விவசாயம் காடுகழனிகளை அறிமுகம் செய்யலாம். ஆற்றிலோ நீரோடையிலோ கொஞ்சம் ஆடச் செய்யலாம். சிறுவர்களைக் குழுமச் செய்து விளையாடச் செய்யலாம். நல்ல கதைப் புத்தகங்களைத் தந்து வாசிக்கச் செய்யலாம். வழக்கமான உணவுமுறைகளுடன் கொஞ்சம் கம்பு சாதம், பழைய சாதம், கம்பு , கேழ்வரகுக் கூழ், என கோடைக்கான சிறப்பு உணவுகளை அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

குழுவாக குழந்தைகள் விளையாடுவதைத் தள்ளி நின்று சற்று பாருங்கள். பொறாமையாக இருக்கும். நாம் குழந்தையாகிவிட மாட்டோமா என்று தோன்றும். அந்த வாய்ப்பை, அந்த அனுபவத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவோம். குழந்தைகள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து பெரிய பெரிய மனிதர்களாவதெல்லாம் பிறகு.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடலாம். இந்தப் பருவம் போனால் கிடைக்காது. ஒரு போதும் வளர்ந்த மனிதர்கள் குழந்தைகளாகிவிட முடியாது.


கொலுசு மின்னிதழில் வாசிக்க :

கோடைக் குழந்தைகள்

3 கருத்துகள்:

  1. படித்தபின் நினைவுகள் பறந்தோடி வந்து அணைத்துக் கொள்கின்றன எழத்தாளன் என்ற முறையில் உங்களுக்கு ஒரு ஷொட்டு. ஸ்ரீநாத்.

    பதிலளிநீக்கு
  2. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....

    பதிலளிநீக்கு