ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

உலக புத்தக தினம்

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம். உலகம் கொண்டாடும் நாடகங்களை எழுதிய ஷேக்ஸ்பியர் நினைவு தினத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக புத்தக தினமாக  அறிவித்துள்ளது.

புத்தகங்கள் - நம் நண்பர்கள், நம் ப்ரியத்துக்குரிய காதலிகள், நம் ஆலோசகர்கள், வலிநிவாரணிகள், தனிமைத் துணைகள், ஆசான்கள் இப்படி எல்லாமுமாக இருப்பவை.

வாசிப்பின் வசம் நம்மை ஒப்படைத்துவிட்டால் புத்தகங்கள் நம்மை வளர்த்துவிடும் நல்ல பெற்றோர்களைப் போலவே.

நான் எப்போது இருந்து வாசிக்கத் துவங்கினேன் ..?

நான்காம் வகுப்பிலிருந்து என்பது என் ஞாபகத்தில் இருப்பது. கிராமத்தில் புத்தகங்களை வீடு நிறைய அடுக்கி வைத்திருக்கும், தினமும் வேலைக்குச் சென்று விட்டு வரும் போதெல்லாம் கை நிறைய இதழ்களையும் புத்தகங்களையும் வாங்கி வரும் ஜெயபால் அண்ணனின் வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஆனந்தவிகடன், குமுதம், தேவி, ராணி என வார இதழ்களில் இருக்கும் குட்டிக் குட்டித் துணுக்குகள், கதைகள், நகைச்சுவைகளை வாசிப்பேன்.

பின்பொருமுறை காமிக்ஸ் பரிச்சயமானது. பிறகு சனிக்கிழமைகளில் பேப்பர் போடுபவர் தன் சைக்கிளில் தொங்கவிட்டபடி வரும் தினத்தந்தியின் லச்சினை அச்சிடப்பட்ட துணிப்பையிலிருந்து எடுத்துத் தரும் ராணி காமிக்ஸை வாங்க அவர் பின்னாலேயே ஓடுவேன். அதற்கான காசை வாரம் முழுதும் கிடைக்கும் பாக்கெட் மணியிலிருந்து சேமித்து டவுசர் பாக்கெட்டிலேயே வைத்திருப்பேன். மேலும், அண்ணாச்சி கடையில் பழைய காமிக்ஸ் பாதிவிலைக்குக் கிடைக்கும் அதையும் வாங்கிப் படிப்பேன். இன்னொரு அண்ணாச்சிக்கு நான் ராணி காமிக்ஸ் கொடுத்தால் அவர் அம்புலிமாமா அல்லது பூந்தளிர் மாதிரி பழைய புத்தகங்களைத் தருவார். இப்படி பண்டமாற்று முறையிலும் படிப்பேன்.

பெரியப்பா ஒருவர் டீக்கடை வைத்திருந்தார். வெள்ளிக்கிழமை சாயங்காலம் போனால் தினத்தந்திக்கு இணைப்பாக வரும் தங்க மலர் இதழை எடுத்து வைத்திருந்து தருவார். அதைப் படித்து முடித்துவிட்டு மறக்காமல் சனிக்கிழமை தந்துவிட வேண்டும்.

பின்னர், வார இறுதிகளில் செந்தில் மாமாவுடன் உறவினர் வீடுகளுக்கு அல்லது திரைப்படங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அவர் அவருக்குப் பிடித்தமான பாக்யாவும் எனக்கு லயன், முத்து காமிக்ஸ் இதழ்களையும் வாங்கித் தந்துவிட இரண்டையும் இருவரும் மாற்றி மாற்றி பேருந்திலேயே படித்து முடித்துவிடுவோம்.

ஏழாம் வகுப்புக்கு வடக்கிபாளையம் எனும் கிராமத்தின் பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். அப்பா,அம்மாவின் வேலையின் பொருட்டு. மிகவும் தனிமையான நாட்களை அது தந்தது. அந்தச் சமயத்தில் தான் அங்கொரு நல்ல நூலகமும் அதைவிடவும் அருமையான நூலகர் தாத்தாவும் கிடைத்தார்கள். நான் ஆர்வமாகப் போய் அவரிடம் விசாரித்ததும், என் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் உறுப்பினாரன பின் , இரண்டு மூன்று நாட்களுக்கொருமுறை அங்கு புத்தகங்களை எடுத்து வந்து வாசிப்பேன். நூலகர் மிகுந்த ஆர்வமாக புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்க எடுத்துத் தருவார். ஈசாப் நீதிக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள், 1001 அரேபியக் கதைகள், என மிகச் சிறந்த சிறுவர் நூல்களையும் அறிவியல் நூல்களையும் தந்து படிக்கச் செய்தார்.

அதன் பின்னர் பாரதியார் கவிதைகளில் நாட்டம் அதிகமாக, பின்னர் தான் கவிதைகளாகத் தேடித்தேடி வாசித்தது.

நடக்கும் போது, உட்காரும் போது, சாப்பிடும் போது, நள்ளிரவு வரை என வாசிப்பின் அத்தனை சுகங்களையும் அனுபவித்து வாசித்தேன். 

அப்போதெல்லாம் புத்தகங்கள் அதிகம் கிடைக்காது, இப்போது புத்தகங்கள் ஏராளம் கிடைக்கின்றன. வாசிக்க நேரமும் மனநிலையும் வாய்ப்பது தான் பெரும்பாடாக இருக்கிறது.

பெரும்பாலும் பரிசாகத் தருவது புத்தகங்களைத்தான். பரிசாக வருவதும் புத்தகங்கள் தாம். இது ஒரு ஆரோக்கியமான பழக்கம் என்றே நினைக்கிறேன்.

வாசிப்பின் மீதான தாகம் தான் எழுத்து வரைக்கும் கொண்டு வந்தது. அவ்வப்போது இதழ்கள் நடத்துவது, இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது, போன்ற அத்துணை முனைப்புகளின் மூல வேர் அதுதான்.

வாசித்தல் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமன்று. அது அதையும் தாண்டிய ஒரு அறிவார்ந்த செயல் என்றே நினைக்கிறேன். நம்மை செதுக்கிக்கொள்ள, நம்மை உணர்ந்து கொள்ள, நம்மைத் தற்காத்துக்கொள்ள நமக்கு  ஒரு கருவி.

நாம் திரை ஊடகத்துக்குத் தரும் அதீத முக்கியத்துவத்தை வேறெதற்கும் தராமல் போனதுதான் நாம் நம்மை கீழ்மைப்படுத்தத் துவங்கிய காலம். நாம் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களை நம்புகிறோம், அவர்கள் ரட்சகர்கள் என நினைக்கிறோம். திரைப்படங்களைப் பார்த்தே வளர்கிறோம். அதற்குத் தரும் முக்கியத்துவத்தில்  கொஞ்சம் கூட புத்தக வாசிப்புக்குத் தருவதில்லை. புத்தகங்களுக்குச் செய்யும் செலவு நம் அறிவின் மூலதனம் என நாம் முழுமையாக நம்புவதில்லை.  

இன்றும் யாவரும் கைவிட்டுவிடும் நிலையிலும் புத்தகங்கள் தரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் வேறெதுவும் தந்துவிட முடிவதில்லை.

குழந்தைகளை வாசிக்கச் சொல்வோம். காட்சிகள் தரும் கற்பனையை விட கதைகளும் புத்தகங்களும் தூண்டி விடும் கற்பனைகள் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. 

வாசிப்போம், வாசிப்பு தரும் அழகிய உணர்வை, அது தரும் ஒரு துளி போதையை நேசிப்போம். 


உலக புத்தக தின வாழ்த்துகள்


8 கருத்துகள்:

 1. ...பெற்றோர்கள் வாசித்தால் மட்டுமே பிள்ளைகள் வாசிக்கப் பழகுவார்கள். பள்ளிப் புத்தகத்தை படி படி என்று ஏவாமல், கதைப் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கும் பழக்கத்தை உண்டாக்கவேண்டும்.புத்தக கடைகளுக்கு குழந்தைகளை அடிக்கடி அழைத்துப்போய் புதிதாக வரும் புத்தகங்களை கண்ணில் காட்ட வேண்டும். மாதத்தில் புத்தகங்களுக்கு என்று தொகை ஒதுக்கவேண்டும். முடிந்தபோது நூலகங்களுக்கு அவர்களை அழைத்துச்சென்று அவர்களுடன் சிலமணி நேரமாவது செலவழிக்கவேண்டும்.அடுத்த தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய பெரும் கடமை இது.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சரிதான் அய்யா. பெற்றோர்கள் வாசித்தால் தான் பிள்ளைகள் வாசிப்பார்கள். நாம் தான் முன் மாதிரியாக இருக்க வேண்டும்

   நீக்கு
 2. வாசிப்போம்,
  வாசிப்பு தரும் அழகிய உணர்வை,
  அது தரும்
  ஒரு துளி போதையை நேசிப்போம்.
  அந்த
  உண்மையை மறவோம்!

  பதிலளிநீக்கு
 3. வாசிக்காத நாட்கள் எல்லாம் சுவாசிக்காத நாட்கள்
  என்பர் நம்முன்னோர்
  வாசிப்பை நேசிப்போம்

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி தங்கள் பதிவு க்கு மிக நன்றி

  பதிலளிநீக்கு