செவ்வாய், 11 ஏப்ரல், 2017

அடிவயிற்றில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை 

தேநீர் இடைவேளை # 12     அடிவயிற்றில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு


பொட்டைப்புள்ளைய வெளிய அனுப்பிட்டு, வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்க வேண்டி இருக்கு

- இது கொஞ்ச நாட்கள் முன்பு வரைக்கும் வயதுப்பெண்களை வைத்திருக்கும் அம்மாக்களின் அன்றாடப் புலம்பலாக நம் காதுகளில் கேட்டிருக்கும். இப்போது அப்படி இல்லையா ? நிலைமை மாறிவிட்டதா என்றால் மாறிவிட்டது தான். நேரும் எதிருமாக மாறியிருக்கிறது. வயதுப்பெண்களை வெளியில் வேலைகளுக்கும் கல்விக்கும் அனுப்பலாம் என்ற தைரியம் வந்திருக்கிறது. இரவு வேலைக்கும் பெண் பிள்ளைகளை அனுப்பும் துணிச்சல் வந்திருக்கிறது. எதிரான மாற்றம் என்னெவெனில், அம்மாக்கள் இப்படிப் புலம்புவதுதான் இல்லையேயொழிய இப்போதெல்லாம் வயதுப் பெண்களை மட்டுமல்ல சிறுமிகளையும் குழந்தைகளையும் கூட வெளியில் அனுப்ப நாம் பயந்து தான் இருக்கிறோம்.

வெளியில் செல்லும் குழந்தைகளும் சிறுமிகளும் பெண்களும் வீடு திரும்பும் வரைக்கும் வீடே அடி வயிற்றில் நெருபபைக் கட்டிக்கொண்டு இருக்கும்படி ஆகிவிட்டது இன்றைய நாகரீக உலகம். சமீப நாட்களாகப் பெருகி வரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் நாம் மிகத்தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைக் கண்கூடாகக் காட்டுகிறது.

கடந்த சில நாட்களில் மட்டும் நம் கண் முன்னால் கொன்று வீசப்பட்ட உயிர்கள் எத்தனை எத்தனை.? சென்னையில் வசித்து வந்த ஏழு வயதேயான ஹாசினி என்ற குழந்தையை நான்கு நாட்களாகக் காணவில்லை என்று தேடிவந்த நிலையில் பைபாஸ் சாலையொன்றில் எரிந்த நிலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. விசாரணையில், ஹாசினியின் அபார்ட்மெண்டில் பக்கத்து வீட்டுக்காரனாகக் குடியிருந்த ஜஸ்வந்த் என்ற இளைஞர் அக்குழந்தையைப் பாலியில் வல்லுறவு செய்து கொன்று எரித்துவிட்டது தெரிய வந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் மனம் நொந்த தருணத்தில் இன்னொரு அதிர்ச்சியான சம்பவம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்தேறியது.  அது சென்னை திருவொற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ரித்திகா, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது. மூன்று வயதுக் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை இந்தச் சமூகம். முதலில் இந்தக் கொலையை எதிர்வீட்டுப் பெண் ஒருவர் கொலுசுக்காகக் கடத்திச் சென்று கொன்றுவிட்டார் என்று தான் வழக்குப் பதிவு செய்து விசாரித்திருக்கிறார்கள்.


பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளுக்கு அவர்களின் உடை தான் காரணம் என்று பேசி வந்தவர்களின் முகத்தில் அறைகின்றன இப்படியான மரணங்கள். மூன்று மற்றும் ஏழு வயதுக் குழந்தைகளின் மீதான பாலியல் தூண்டலுக்கு எது காரணமாக இருக்க முடியும் ? அவர்களது உடலா, உடையா ?

அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது நந்தினி, டிசம்பர் 26 அன்று காணாமல்போனார். புகாரை போலீஸார் அலட்சியமாகக் கையாண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் தந்த அழுத்தத்தின் விளைவாக நடவடிக்கைகள் தொடங்கி, ஜனவரி 14 அன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து நிர்வாண நிலையில் இந்தச் சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது.

கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் நந்தினியும் காதலித்ததாகவும் விளைவாக, நந்தினி கருவுற்றதாகவும் திருமணத்துக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், நந்தினியைத் தன்னுடைய பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் பழகிய மணிகண்டன், தனது நண்பர்கள் மணிவண்ணன், வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகியோருடன் சேர்ந்து அவரைக் கொன்றதாகப் புகார் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நந்தினி கொல்லப்படுவதற்கு முன்பு, கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நான்கு இளைஞர்களும் இப்போது கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள்.

நந்தினி காணாமல்போய் 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பதும், 20 நாட்களுக்குப் பிறகுதான் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது என்பதும் 20 நாட்களுக்குப் பிறகுதான் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் காவல் துறையின் அலட்சியப் போக்குக்கு ஓர் உதாரணம். சாதியம் சார்ந்து நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கின்றனவே அன்றி குறையவில்லை.

பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளோடு சாதி, மத பின்புலத்தில் அவர்கள் நசுக்கப்படுவதும் இப்போது வெளிச்சமாகியிருக்கிறது. சாதியின் பெயரால் பெண்களுக்கு நடந்தேறும் வன் கொடுமைகள் நம்மை மேம்பட்ட நாகரீக சமூகத்திலிருந்து காட்டுமிராண்டிகளினும் கேவலமான இனமாக பின்னோக்கிக் கொண்டு சேர்க்கிறது.


இப்படி நாளைக்கு பல பெண்களும் குழந்தைகளும் சிதைக்கப்பட்டு நசுக்கப்படுகிறார்கள். டெல்லியில் நிர்பயாவுக்கு ஓடும் பேருந்தில் நடந்த வன்முறையின் பின்னர் நாடே கொந்தளித்ததன் விளைவாகவே கொஞ்சமேனும் தற்போது விழிப்புணர்வும், சட்டத் திருத்தமும் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாது, இப்போது இது மாதிரியான வன்கொடுமைகள் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன.

இன்றைய இளைஞர்களின் வாழ்வு முறையும் சுற்றுப்புறச் சூழ்நிலையும் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. கெட்ட தரவுகளும் , தவறான வழிகளும் எதிர்பார்த்ததைவிட அதிகம், எளிதில் கிடைக்கிறது. விளைவு செல்போனிலேயே ஆபாசப் படங்களைப் பார்த்து மனதைக் கெடுத்துக்கொள்கிறார்கள். பள்ளிக் கல்வியிலும் பெண் சமத்துவத்துக்கான விழிப்புணர்வோ, பாலியல் குறித்த விழிப்புணர்வோ இல்லை. பள்ளிக் கல்வி முடித்து வெளிவரும் மாணவர்கள் , முழுமையான மனிதனாக வெளிவருவதற்கான கூறுகள் பாடத் திட்டத்தில் இல்லை. யோசிக்கவே விடாத மனத்தையும், எதிர்காலத்தைப் பற்றிய பயமும் அற்ற வக்கிர மனம் படைத்தவர்கள் கையில் நலிந்த குழந்தைகள் சிக்குகிறார்கள். விளைவு... ஆங்காங்கே நாம் கேள்விப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் அரங்கேறுகின்றன. இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களில்  பாதிப்பேரே தண்டனைபெறுகின்றனர். மீதிப்பேர் தப்பித்து விடுகின்றனர். தப்பு செய்யத் துணிபவர்களுக்கு, இப்படித் தப்பிப்பவர்கள் பற்றிய எண்ணமே வருகிறது. ஆகவே, தண்டனைகளும் கடுமையாக வேண்டும். சட்டதிட்டங்களும் கண்டிப்பாக வேண்டும்.

பள்ளிக் கல்வி , கல்லூரிக் கல்விகள் மட்டுமல்லாமல், குடும்பத்தில் கிடைத்துக் கொண்டிருந்த அனுபவக் கல்வியும் சிதைந்து விட்டது. நாம் கூட்டுக்குடும்பமாக இல்லை. கூட்டுக்குடும்பங்களில் பல்வேறு உறவுகளுடன் பெண்கள் இருப்பர். அவர்கள் மீதான மரியாதையான அன்பு மற்ற பெண்களையும் மரியாதையாகப் பார்க்கச் செய்யும். அது இல்லாமல் போய்விட்டது. மேலும், குடும்ப அமைப்பில் நாம் ஒட்டியிருப்பதில்லை. அதற்கும் அவசர உலகமும் தொழில்நுட்பமும் காரணமாகிவிட்டது. ஒரே வீட்டில் வசித்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாகவே வாழ்கிறோம். ஒன்றாக அல்ல.

உலகம் முழுவதுமே பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றன. ஸ்போர்ட் ரிச் லிஸ்ட் (Sport Rich Iist) ஆய்வறிக்கை, உலகில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் எனப் பத்து நாடுகளைப் பட்டியலிட்டிருக்கிறது.முதலிடம் எந்த நாட்டுக்குத் தெரியுமா? பெண்ணுரிமையிலும் பெண் சுதந்திரத்திலும் முற்போக்கான எண்ணம் கொண்டது எனப் பலர் நினைத்திருக்கும் அமெரிக்காவில்தான் உலக அளவில் அதிகப் பாலியல் வன்முறைகள் நடக்கிறதாம். ஆனால், அதில் 16 சதவீதப் புகார்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன என்பது இன்னுமொரு அதிர்ச்சி. பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ராணுவத்தில் பணிபுரியும் பெண்களும் விதிவிலக்கல்ல. அவர்களும் பாலியல் அத்துமீறல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறதாம்.


மக்கள்தொகையில் மட்டுமல்ல, பெண்கள் மீது நிகழும் பாலியல் வன்முறைகளிலும் இந்தியாவுக்கே உலக அளவில் இரண்டாம் இடம். வளர்ந்துவரும் நாடான இந்தியாவின் தேசியப் பிரச்சினையாகவே இது விஸ்வரூபம் எடுத்துவிட்டது. நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில்தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடக்கின்றன என அறிக்கை சொல்கிறது.

ஆண்கள் மனதில் காலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கமும், பெண்ணை ஒரு போகப் பொருளாக நினைப்பதும், ஆணுக்கு அடிமைத் தொழில் செய்வதற்கே பிறப்பெடுத்தவள் பெண் என்கிற கோளாறான கற்பிதங்களுமே பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் தோற்றுவாய். முறைப்படுத்தப்படாத சட்டங்களும் இதுபோன்ற கொடுமைகள் அதிகரிக்கக் காரணம். கடுமையான சட்டங்கள் இருந்தும் அவற்றைச் செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதமே போதும், குற்றவாளிகள் அடுத்த தவறைச் செய்வதற்கு.

இந்தியா ஒளிர்கிறது முன்னேறிக்கொண்டிருக்கிறது என பீத்திக்கொண்டிருப்பவர்களும், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என இந்தியாவைத் தூக்கிப் பிடிக்க நினைப்பவர்களும் கவனம் செலுத்த வேண்டிய பகுதி இது.

ஊடக வெளிச்சங்களுக்கு வராமல் பணத்தாலும், பயத்தாலும், சாதி பிற காரணங்களாலும் இன்னும் நம் நாட்டின் மூலை முடுக்குகளில் தினம் ஒரு நந்தினியும் ஹாசினியும், ரித்திகாவும் கொல்லப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.  நாம் இதோ இந்த மார்ச் மாதத்திலும் மகளிர் தின விழா கொண்டாடிவிட்டு ஓய்ந்திருக்கிறோம். விடிவு என்பது நம் மனங்களில் இருக்கிறது. நாம் மனது வைத்தால் மட்டுமே இருக்கிறது.


கொலுசு மின்னிதழில் வாசிக்க :

http://kolusu.in/kolusu/kolusu_apr_17/index.html#p=26 

3 கருத்துகள்: