கவிதை என்பது ஒரு மகாகருவி, ஒரு மந்திரக்கோல் என்பதை கண்களை மூடிக்கொண்டு உங்களைப் போலவே நானும், என்னைப்போலவே ஏராளமானோரும் நம்புகிறோம். ஆகவே தான் நம் நாட்களின் எல்லா உயிர்ப்புகளிலும் ஏதாவதொரு வகையில் கவிதை இருந்துகொண்டே இருக்கிறது. அப்பெருங்கருவிதான் போராளிகளின் ஆயுதமாகவும், கேடயமாகவும் இருக்கிறது.அதைக்கொண்டு தான் பூக்களை மலரச் செய்கிறோம்,குழந்தைகளைப் புன்னகைக்கச் செய்கிறோம், சமுதாயத்தின் சட்டைக்காலரைப் பிடிக்கிறோம், அகம் உருக அன்பு செய்கிறோம்,அதி தீவிரமாகக் காதலிக்கிறோம்., தேம்பிக் கொண்டிருப்பவர்களை ஓடோடிப் போய்க் கட்டிக்கொள்கிறோம். இப்படி வாழ்வின் யாவுமாக இருக்கத் தெரிந்த ஒன்றைத்தான் கவிதை என்கிறோம்.
இப்படி, கவிதைகளைக் கைக்கொண்டு தன் இனம், மொழி, சமூகம் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் ஆழப் பதிந்து விடுபவர்களைக் காலம் ஒரு போதும் மறப்பதில்லை.
அப்படியான ஒரு மாபெரும் மக்கள் கவிஞனைத்தான் இன்று நாம் இழந்திருக்கிறோம்.
கவிதைகளில் புல்லாங்குழல் இசையையும் இசைக்க முடியும், பறையிசையையும் இசைக்க முடியும், புல்லாங்குழல் இசை தன் மென் குரலால் தாலாட்டும் உறங்கச் செய்யும். பறையிசை அதிர வைக்கும், உறங்கவிடாது. கவிஞர் இன்குலாப் அவர்களின் கவிதை பறையிசையைப் போலத்தான். ஒலித்த ஒரு கணத்தில் மட்டுமலலாது நீண்டு எதிரொலித்து அதிர்ந்து கொண்டேயிருக்கும்.
கவிதை எழுதுபவன் கவியன்று
கவிதையே வாழ்க்கையாக உடையோன்
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்
அவனே கவி
- பாரதி
இந்த பாரதியின் வரிகளை, நமக்கு முன்பும் நம் காலத்திலும் பல கவிதைக்காரர்கள் உண்மையாக்கியும் நியாயம் செய்தும் இருக்கிறார்கள். அப்படி ஒரு பெருங்கவியாகத்தான் இன்குலாப் அவர்களைப் பார்க்கிறேன்.
இன்குலாப் அவர்கள் தனது கவிதைகளுக்கு ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதையும் கவிதையிலேயே தந்துள்ளார். தனது கவிதைகள் யாவும் மொழிபெயர்ப்புதான் என கர்வமாக ஒப்புக்கொண்டார். எங்கிருந்து அவற்றை மொழிபெயர்த்திருக்கிறார் என்பதையும் இந்தக் கவிதையில் சொல்லியிருக்கிறார்.
எழுதியதெல்லாம்
மொழிபெயர்ப்புத்தான்.
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்,
போராடுவோரின்
நெற்றிச் சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று
மொழிபெயர்த்திருக்கிறேன்!
இளைஞர்களின் விழிகளில் எரியும் சுடர்களையும், போராளிகளின் நெற்றிச் சுழிப்புகளையும் மொழிபெயர்த்தால் கிடைப்பது நெருப்புக் கவிதையாகத் தானே இருக்க முடியும். அப்படித்தான் இருந்தது.
இந்த தேசம் கட்டமைத்திருக்கிற போலிக் கட்டுப்பாடுகளையும், அது சாட்டும் போலிக் குற்றச்சாட்டுகளையும் சாட இவருக்கு மூன்றே மூன்று வரிகள் போதுமானதாக இருக்கின்றன
பருந்தை எதிர்க்கிற
தாய்க்கோழியைப் பார்த்தா சொன்னாய்
தீவிரவாதமென்று
இந்த மூன்று வரிகள் போதுமானதாக இருக்கின்றன. தீவிரவாதமென்று ஒரு இனத்தின் போராட்டத்தைச் சாடும் இன விரோதிகளுக்கு பதிலாக.
எதை எழுத வேண்டும் என்ற தேர்வை விட எதை எழுதக் கூடாது என்பதற்கான தேர்வை ஒரு எழுத்தாளன் மிகத் தெளிவாகத் தேர்வதில் தான் அவனது சுயம் ஒரு சூரியனைப்போல ஒளிரும். அப்படியான ஒரு தெளிவில் இருந்தவர் தான் கவிஞர். எதை எழுத மாட்டேன் எனச் சொன்ன கவிதை இது .
எழுதமாட்டேன்
எழுதமாட்டேன்
ஒருவரி கூட
நீ
ஒப்பும்படி
எழுத்திலும் அதிரும்
என் பறையொலி
நாராசமாய்
உன்
செவியில் இறங்குதல் போல்
உன்
மெளனவரியும்
அருவருக்க ஊரும்
என்
கண்ணிலூம் மனசிலும்
ஒரு
கம்பளிப் புழுவாய்
என்
கவிதை முளைவிடும்
மனுசங்க வெளியை
உன்
கால்விரல் நகமும்
தீண்டாதது போலவே
மேட்டிமைத் திமிரும்
உன்
சபை வாசலில் கூட
நீளவே நீளாது
என் மயிரின்
நிழலும்
இன்குலாப் அவர்களின் கவிதைகளில் அழகியல் இல்லை என்பது தான் குறையென சில இலக்கியவாதிகளின் விதண்டாவாதத்தைக் காணமுடிகிறது. அழகியல் இல்லை என்றெல்லாம் குறை சொல்லிவிட முடியாது. இருக்கிறது. அது ஒரு மெல்லிசையைப் போல மெல்ல ஊடுருவியல்லாது ஒரு பறையிசையைப் போன்று
சற்று தூக்கலான அழகியல் இருந்தது எனச் சொல்லலாம். அவரது கவிதைகளில் அழகியலுக்கு உதாரணமாய் இந்தக் கவிதையையும் சொல்வேன்.
வேண்டுதல்
ஏந்திய கைகளுக்கு மேலே
எப்பொழுதும்
சலனமற்றிருக்கும்
வானம்
இந்தக் கவிதை விரியும் காட்சி எவ்வளவு அழகானது. ஆனாலும் இதனுள்ளும் அரசியல் இருக்கிறது என்பது இன்னொரு கோணம்.
மீண்டும் பாரதியின் வரிகளைக் கடன் வாங்குகிறேன்,
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்
என்று மரணத்தைத் துச்சமென மதித்தவன் பாரதி. இன்குலாப் அவர்களும் இப்படித்தான் எழுதுகிறார். அவர் வாழ்வையே தன் காலடியில் கிடக்கப் பணிக்கிறார்.
வாழ்க்கை காத்திருக்கட்டும் உன் மிதியடியில் என்கிறார்.
கவிஞர் இன்குலாப், தனது கவிதையை, கவிதை ரசனையை அறிவிக்கிற அறிவிப்பாக இந்தக் கவிதையைப் பார்க்கிறேன். அதற்கு ரசனை பயங்கரம் எனத் தலைப்பிடுகிறார்..
ரசனை பயங்கரம்
மல்லாக்கப் படுத்தபடி
நூறு தூண்களால்
வானம் துழாவினேன்
என்றாலும்
தகிக்கும் வெயிலில்
சரளைக்கல் அள்ளும் சட்டியில்
உருகும் தாரால்
மை தீட்டலாம் என்றாலும்
உச்சுக் கொட்டும்
ரசனை உனது
எனக்குத்தான் தெரியவில்லை
கசடு பிடித்துச்
சீழ் வடியும் காயத்தைத்
தோலின் புன்சிரிப்பென்று
புனையவும்
இன்னும்
அறுசுவையுடன்
ஒரு கண்ணீர்த்துளியைச் சமைக்கவும்
தனது கவிதைகளுக்கான ஒட்டுமொத்த அறிவிப்பாகவே அவர் இந்தக் கவிதையைப் படைத்துள்ளார். கசடு பிடித்துச் சீழ் வடியும் காயத்தைத் தோலின் புன்சிரிப்பென்று அழகாகப் புனையத் தெரியாதவர் பாவம் எப்படி அழகியல் கவிதைகளை நிறையத் தந்திருக்கக் கூடும்.
கவிஞன் காலங்களற்றவன், இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்துக்குமான பயணி. இறந்த காலத்துக்குச் சென்று வரலாற்றின் புரட்டுகளைப் பகடி செய்யவும், நிகழ்காலத்தின் சமுதாயப்பிறழ்வுகளைச் சாடுபவனாகவும், எதிர்காலத்துக்குமான இயங்கு திட்டங்களை வகுக்கத் தெரிந்தவனாகவும் கவிஞன் இருப்பான். ஆக, இன்குலாப் காலமாகவே முடியாது. எல்லாக் காலங்களிலும் கவிதையாக வாழ்வார்.
இன்குலாப் காற்றின் திசைகளெங்கிலும் வாழட்டும் கவிதையாக உயிர்ப்புடன்.
குறிப்பு : பொள்ளாச்சியில் தீ இனிது இலக்கிய இயக்கம் ஒருங்கிணைத்த கவிஞர் இன்குலாப் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்
"கவிதை எழுதுபவன் கவியன்று
பதிலளிநீக்குகவிதையே வாழ்க்கையாக உடையோன்
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்
அவனே கவி
- பாரதி" என்ற கருத்தை வரவேற்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி
நீக்குArumayana pathivu :)
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்கு/// எங்கிருந்து அவற்றை மொழிபெயர்த்திருக்கிறார் என்பதையும் இந்தக் கவிதையில் சொல்லியிருக்கிறார்....///
பதிலளிநீக்குஇதற்கே ஒருவித தைரியம் வேண்டும்...
பாராட்டுகள்...
மிக்க மகிழ்ச்சி வலைச்சித்தரே. நன்றியும் அன்பும்
நீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்குஆனந்த விகடன் செல்வனம் கவிதைக்கு பிறகு உங்கள் கவிதை அனைத்தையும் பருக விழைகிறேன். Muppidathi Nellai
பதிலளிநீக்கு