புதன், 27 ஜூலை, 2016

நெற்றி சுருங்கிய புத்தர் - ஹைக்கூ கவிதைத் தொகுப்பு


தமிழ்க்கவிதை வரலாறு மிக நெடியது. அது கிட்டத்தட்ட தமிழ் மொழியின் வரலாறு. தமிழ் மொழியின் முதல் இலக்கிய வடிவம் கவிதையாகவே இருக்க முடியும். ஒரு வரிக்கவிதையில் அவ்வையும், இருவரிக்கவிதையில் வள்ளுவரும் உலகையே அளந்துவிட்டனர். தமிழ் இலக்கியத்தில் அத்தனை நவீன வடிவத்தையும் முயற்சித்து அறிமுகப்படுத்தியது பாரதி தான். சிறுகதை,புதுக்கவிதை,கட்டுரை,சுயசரிதை என அனைத்தையும் அடியெடுத்துக்கொடுத்தது பாரதிதான். அந்த வகையில் தமிழுக்கு ஹைக்கூவையும் அறிமுகப்படுத்தியதும் பாரதிதான். அவர் அறிமுகப்படுத்திவிட்டுப் போய்விட்டார். நாம் தான் ஹைக்கூவை வாழ(?) வைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஹைக்கூ, மூன்று அடியில் ஒரு மிக அழகிய காட்சியை நம் கண்முன்னால் விரியச் செய்வது. அதுதான் என்னளவில் ஹைக்கூவுக்கு நான் தெரிந்து வைத்திருக்கும் விளக்கம். ஹைக்கூவின் மிக முக்கியப் பாடுபொருள் இயற்கைக்கூறுகள் தாம். இயற்கையின் அழகியலை அப்படியே ஒரு ஓவியத்தைப்போல வரிகளில் பதிவு செய்பவை நல்ல ஹைக்கூக்களாக மிளிர்கின்றன. ஜப்பானிய ஹைக்கூக்கள் ஒரு வரியில் மிளிர்பவை.5-7-5 என்ற அசையில் இருப்பவை என நிறைய விதிமுறைகள் உண்டு. நாம் வசதியாக அவற்றைத் தள்ளிவைத்து விட்டு ஆங்கிலத்தில் ஹைக்கூ எழுதுவது போல மூன்று வரி என்ற விதிமுறையை வகுத்துக்கொண்டோம். அதில் மூன்றாம் வரி ஒரு மின்னல் தெறிப்பாக , ஹைக்கூவின் உயிர்ப்பாக இருக்கலாம் எனவும் வைத்துக்கொண்டோம். மிகக் குறைந்த பட்சம் இந்த விதிமுறைகளுமற்று நாம் எழுதும் ஹைக்கூக்கள் வெறும் செய்திகளாகவும், சொற்றொடற்களாகவும் ஆகி பரிகசிக்கப்படுகின்றன.நெற்றி சுருங்கிய புத்தர் எனும் தலைப்பில் கவிஞர் மணி சண்முகம் வெளியிட்டிருப்பது இருமொழி ஹைக்கூ தொகுப்பு. தமிழில் தான் எழுதிய ஹைக்கூக்களை தானே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து இருமொழி நூலாக மிக அழகான வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளார். டிராட்ஸ்கி மருது அவர்களின் அட்டைப்பட ஓவியம், கு.கவிமணி அவர்களின் உள் ஓவியங்கள் மற்றும் வடிவம் இந்த ஹைக்கூ கவிதைத்தொகுப்பை ஆவி பறக்கும் ஒரு தேநீர்க்கோப்பையாக நமது கைகளில் தருகின்றன.

இருப்பைப் பற்றி எழுதுவதை விடமும் இல்லாமை தான் எழுத்தாகும் போது அழகாகிறது. விஷ்ணுபுரம் சரவணனின் ஒரு கவிதை இருக்கிறது, தரிசாகிப்போன விவசாய நிலத்தைத் தடவிப்பார்க்கிறான் விவசாயி, கருக்கலைந்த பெண் தன் வயிற்றைத் தடவிப்பார்ப்பது போல என. இல்லாதது, இழந்தது எப்போதும் வலியாகிறது.

வீடு திரும்புகையில்
பூக்கூடையென்னவோ காலிதான்
அந்த மணம்..

இந்தக் கவிதையில் கடைசி வரி தருவது நிஜ மணத்தை. பூ சுமந்து வீடு திரும்பும் பூக்காரியின் சித்திரத்தை. மேலும் மூன்றாம் வரியில் ஒரு மின்னல் தெறிப்பென்றெல்லாம் இல்லாமல் அதைக் கட்டுடைத்து கொஞ்சம் நெகிழ்வாய் ஹைக்கூ முடிகிறது.


குழந்தை
வரைந்த மழையில்
குடைக்கு உள்ளேயும் மழை

குழதைகளின் உலகத்தைக் காட்டும் கவிதைகள் நிறைய. இதில் மழையை வரையும் குழந்தை, குடையின் விதிமுறைகளை விட்டு, குடைக்குள்ளும் மழையை பொழியச் செய்கிறது என்பதை அழகாக கவிதையாக்கியுள்ளார்.

அவ்வளவு பெரிய கடல்
சின்னஞ்சிறிய படகு
சின்னஞ்சிறிய அசைவு

நான் ரசித்த ஹைக்கூக்களில் இதுவும் ஒன்று. எந்த நோக்கமுமற்று, ஒரு காட்சியை நம் கண்முன்னால் நிறுத்தும் கவிதை இது. மிகப்பெரிய கடலில் ஒரு சிறிய படகு, அதன் சிறிய அசைவு நம் மனக் கண் முன்னால் காட்சியாகிறது , அது ஒரு அனுபவத்தைத் தருகிறதல்லவா அதுதான் ஹைக்கூ அனுபவம்.

நிலவைக்கடக்க
ஒரு நொடி போதும்
அந்தப் பறவைக்கு

இந்தக் கவிதையைப் படித்ததும் அந்தக் காட்சி நம் கண்களுக்குப் புலப்பட்டுவிடுகின்றது. இது ஒரு ஜென் தத்துவத்தைப்போல மனதில் இறங்குகிறது. ஹைக்கூவுக்கும் ஜென்னுக்கும் தொடர்பிருக்கிறது. எனக்கு பாப்பா ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது. ஒரு அழைப்பிதழில் பெயர் தவறாக அச்சடித்துவிட்டேன் சே, என்ன செய்வது என்று சொல்கிறேன் உடனே பாப்பா சொல்கிறாள் இதிலென்ன இருக்கு அடிச்சுட்டு மேல எழுத வேண்டியதுதானே என்றாள் சாதாரணமாக. அப்போது உடனிருந்த கவிஞர் கீதாப்ரகாஷ் சொன்னார், இதுதான் பூபாலன் குழந்தைகள் , நமக்கு தான் இது பெருசு, அழைப்பிதழ் தவறானால் அடித்து விட்டு எழுதலாம் என எவ்வளவு பெரிய விசயத்தையும் சாதாரணமாகப் பார்ப்பது குழந்தை மனம். அதுதான் ஜென் மனம். அப்படியாக பெரிய நிலவைக் குறுக்குவெட்டாக எளிதில் பறந்து கடக்கும் பறவையைக் காட்சிப்படுத்தியிருக்கிறது கவிதை.

ஹைக்கூ தத்துவமும் பேசுகிறது என்பது வியப்பு,

எனது முன் இருக்கும் உலகம்
அதில் இல்லை
நான்

நமக்கு முன்னால் இருப்பது நமது உலகம் தான் அதில் நாம் இருக்கிறோமா என்ன ..? இருக்கிறோம் என்கிறது வாழ்க்கை. இருந்தும் இல்லை என்கிறது ஞானம்.

குறிப்பிட்ட ஹைக்கூக்கள் ஒரு பிடி மலர் தான், இந்தத் தொகுப்பில் இருப்பது இன்னும் கூடை நிறைய ஹைக்கூப் பூக்கள்.

மற்ற கவிதைத் தொகுப்புகளைக்காட்டிலும் , வடிவமைப்பிலும், வடிவத்திலும் கூடுதல் சிரத்தையுடன் ஹைக்கூ திகுப்பு இருக்க வேண்டும். அது தரும் மன நிலையுடன் ஹைக்கூவை வாசிப்பது அலாதியான அனுபவம்.

அப்படி வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் சிறப்பான தொகுப்பாக நெற்றி சுருங்கிய புத்தர் ஹைக்கூத் தொகுப்பைத் தந்த கவிஞர் மணி சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....
விலை : ரூ 80/-

வெளியீடு : விஜயா பதிப்பகம், கோவை.
தொடர்புக்கு : 0422-2382614


ஆசிரியர் : மணி சண்முகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக