செவ்வாய், 12 ஜூலை, 2016

கேக்குறவன் கேனையனா இருந்தா ...

கொலுசு மாத இதழில் வெளியாகும் எனது கட்டுரைத்தொடரான தேநீர் இடைவேள்யின் நான்காம் பகுதி ..

தேநீர் இடைவேளை # 4

கேக்குறவன் கேனையனா இருந்தா ...

நான்காம் வகுப்போ ஐந்தாம் வகுப்போ படிக்கும் போது என நினைக்கிறேன். வேலைக்கு போய்விட்டு வரும்போது ஆத்தா முந்தானையில் முடிந்தபடி ஒரு மஞ்சள் நிற துண்டுப்பிரசுரத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள். தம்பி இது என்னனு பாரு என்று. நான் படித்துக்காட்டினேன். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் திடீரென இரவில் அம்மன் ஒருவருக்கு அருள் தந்து காட்சி தந்ததாகவும், அம்மனின் சொற்படி அவர் இந்தத் தகவலை நோட்டீஸாக அச்சடித்து ஆயிரம் பேருக்கு விநியோகித்ததாகவும், அன்று முதல் அவருக்கு வாழ்வில் திரும்பிய திசையெங்கும் அதிர்ஷ்டம் என்றும் குறிப்பிட்டிருந்தது.அதுமட்டுமல்ல, இந்த நோட்டீஸைக் கண்டவுடன் மதிக்காமல் அலட்சியம் செய்த ஒரு செல்வந்தன் போண்டியானதாகவும், இதை ஏளனம் செய்த ஒருவன் நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்து விட்டதாகவும், எனவே இந்த நோட்டீஸைக் கண்டவுடன் குறைந்தது ஐநூறு பிரதிகளாவது அச்சடிக்க வேண்டும் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. இதைப் படித்ததும் ஆத்தா புலம்ப ஆரம்பித்துவிட்டார். என்னடா இது வம்பாப் போச்சு எவனோ குடுத்தான்னு வாங்கிட்டு வந்தேன், வேலில போனத எடுத்து வேட்டில விட்ட கதயா ஆயிடுச்சு என. பிறகு கொஞ்ச நேரத்தில் சமாதானமானவள், அத தூக்கி வீசுடா சாமி வந்துச்சாமா கத சொல்லுச்சாமா என்றாள். ஊரில் நிறைய பேருக்கு அந்த மஞ்சள் காகிதம் போயிருக்கிறது என்பது அடுத்த நாள் பள்ளிக்குப்போன போது தெரிந்தது. ஒரு பையனுடைய வீட்டில் அச்சடத்துத் தரவும் தயாராகிவிட்டார்கள். அப்போது இது பொய் என்று நான் சொன்ன போது, காரணம் கேட்டவர்களிடம் பிரின்டிங் கடைக்காரர்களின் வியாபார யுத்தி என்று நானாக ஒரு காரணம் சொல்லியிருந்தேன். இருக்கவும் செய்யலாம்.

அவ்வப்போது, வெவ்வேறு சாமி பெயர்களுடன், வெவ்வேறு கதைகளுடன் அந்த மஞ்சள் காகிதம் சில வருடங்களுக்கு முன்பு வரைக்கும் வலம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு படத்தில் வடிவேலு சாலையோரத்தில் நடக்கும் மந்திர வித்தைக்காரனிடம் மாட்டிக்கொண்டு பணத்தைப் போடலனா ரத்தம் கக்கிச் சாவாய் என்று அவன் சொல்ல விழிபிதுங்குவாரே அப்படியான வித்தையை நான் சிறு வயதில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஒரு பத்துப்பேர் சுற்றி நிற்கிறோம். அதில் ஒருத்தன் இதெல்லாம் பொய்டா கருமம் இவனுகளுக்கு வேலை இல்லை என்று சொல்கிறான். வித்தைக்காரன் ஜெய் ஜக்கம்மா என்று ஒரு சிலுப்பி சிலுப்பி அவன் மீது திருநீறை வீச அவன் ரத்தம் கக்கியபடி விழுந்துவிட்டான். பிறகு கொஞ்சநேரத்தில் அனைவரிடமும் பண வேட்டை நடத்தி அனைவருக்கும் ஒரு கயிறும் திருநீறும் தந்துவிட்டு அவனை எல்லோர் முன்னாலும் எழுப்பி உன்னை மன்னிச்சு விடறேன் ஓடிப்போயிடு என்று சொல்லி அனுப்பியதை பயந்தபடியே பார்த்திருக்கிறேன். அவர்கள் இருவரையும் சிலநாட்கள் கழித்து ஜோடியாக பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்று ..

ஆறாவது அறிவை மந்தமாக்கி அதைக் காசாக்கும் இப்படியான முயற்சிகள் தொடர்கின்றன எல்லா காலங்களிலும். இன்றைய காலகட்டம் தொழில்நுட்பத்தில் படுவேகமாக வளர்ந்துவிட்ட காலகட்டமல்லவா..? நமது மூட நம்பிக்கைகளும் அதற்கேற்றாற்போல வளரவேண்டுமல்லவா. நன்றாகவே வளர்ந்திருக்கிறது.

இப்போதெல்லாம் வாட்சப்பில் இந்த மாதிரி மஞ்சள் நோட்டீஸின் நவீனப்பிரதிகள் நிறைய உலவி வருகின்றன. இதை ஷேர் செய்யுங்கள் அதை ஷேர் செய்யுங்கள் என்று. பெருமாள் படத்தை அனுப்பி இதை அடுத்த இரண்டு விநாடிகளுக்குள் பகிருங்கள் என்கிறார்கள். சாய்பாபாவின் ஒரிஜினல் படம் இது இதைத் தொட்டு வணங்கினால் புண்ணியம் என்று ஒரு படத்தை அனுப்புகிறார்கள். ஏசுபிரானின் உருவம் மேகத்தில் தெரிகிறது என்கிறார்கள், நபிகளின் பாதம் இது என்கிறார்கள்... மதமெல்லாம் கணக்கில்லை. எல்லா மதத்தினரும் இந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் இப்படிப் பகிர்பவர்கள் மீது கடும் கோபம் வரும். இப்போதெல்லாம் பரிதாபம் ஏற்படுகிறது.

இதற்கும் இப்படிச் செய்பவர்கள் படிப்பறிவில் குறைந்தவர்களும் அல்லர். மெத்தப்படித்தவர்களும் இப்படியான மூட நம்பிக்கைகளுக்கு மூளையைக் கொடுத்துவிடுகின்றனர் என்பதுதான் வேதனை. சமீப காலங்களாக இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளும் , வியாபார தந்திரங்களும் பெருகி விட்டன. 5 ஜிபி இலவச இண்டர்நெட் கிடைக்கும் என்று சும்மா ஒரு லிங்க் சுற்றி வருகிறது. அதை நம்மவர்களும் நூறு பேருக்கு கை வலிக்க அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சாம்சங்க் தொலைக்காட்சி இலவசம் இந்த லிங்கை சொடுக்குங்கள் என்று ஒரு விளம்பரம் வந்தது, நமது ஆட்கள் வரிசை கட்டி அதைப்பகிர்ந்தார்கள். எனக்கே 16 முறை வந்தது. தொடவே இல்லை. அப்படியான ஒரு லிங்கை தொட்ட ஒரு பெண் தோழியின் அலைபேசியில் வைரஸ் புகுந்து அத்தனை தகவல்களையும் அழித்துவிட்டது. நானும் அதை மீட்க என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. பின்பு அவர், சர்வீஸ் சென்டரில் கொடுத்து ஃபார்மேட் செய்து வாங்கிக்கொண்டார். தகவல்கள்,புகைப்படங்கள் அனைத்தும் போனது போனதுதான்.

இந்த நடிகருக்குப் பிறந்தநாள் அதனால் இத்தனை ரூபாய் உங்களுக்கு ஏறும் , இந்தத் தகவலை இந்த லிங்கை எட்டு பேருக்குப் பகிருங்கள் என்று அடிக்கடி வருவதை நீங்களும் பார்த்திருக்கலாம். நடிகர்களுக்கெல்லாம் அல்லது அரசியல்வாதிகளுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா. உங்கள் ஒவ்வொருவர் கணக்குக்கும் பணம் போட்டுதான் பிறந்தநாள் கொண்டாடுவார்களா ..? இதைவிடக் கொடுமை ஒரு நடிகரின் ரசிகன் இப்படி அனுப்ப, இது எங்க நடிகன் அனுப்பினதுடா, அதை எடிட் பண்ணி நீங்க விளம்பரம் பண்றீங்களா என்று ரசிக சிகாமணிகள் சண்டைக்கட்டுவதையும் தலையில் அடித்துக்கொண்டு பார்க்க வேண்டியிருக்கிறது.

இதை மட்டுமா பரப்புகிறார்கள், எதெல்லாம் உண்மை என நாம் அவசரத்துக்கு நம்பக்கூடுமோ அதையெல்லாம் பரப்புகிறார்கள். ரத்தம் தேவைப்படுகிறது என்று முதலில் எப்போது வந்தாலும் உயிர் விசயம் ஆயிற்றே என உடனடியாகப் பகிர்ந்துகொண்டிருந்தேன். பிறகு தான் அதிலும் சில விஷமிகள் விளையாடுகிறார்கள் தவறான எண்களைக் கொடுத்து மற்றும் நிறைய பழைய தகவல்களை தேதியின்றி பகிர்கிறார்கள் இதனால கால விரயமும் அலைச்சலும் தான் மிச்சமாவதால் இப்போது கொஞ்சம் உஷாராக இருக்கிறேன்.

சமூக வலைதளங்கள் தரும் சுதந்திரம் அலாதியானது. பெரிய கட்டுப்பாடுகளோ, கண்காணிப்புகளோ இல்லாததால் யாரும் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் எளிதில் எழுதிவிட முடிகிறது. சமூகத்தில் ஏதாவது ஒரு துர்நிகழ்வு நிகழ்ந்தால் போதும் ஆளாளுக்கு ஒரு கதை வைத்து எழுதத் தொடங்கிவிடுவார்கள். எது உண்மை எது பொய் என ஆராய்வதெல்லாம் இல்லை. அக்கணத்தில் உணர்வு மேலோங்க உணர்ச்சிவசப்பட்டு பகிர்வதுதான் பிரச்சனை. சுயகட்டுப்பாடும் எதையும் ஆராய்ந்து பகிர்தலும் ஒன்றே தான் இதற்கான தீர்வு. நன்றாக இருக்கும் பெரிய மனிதர்களை ஏதோ பழைய புகைப்படங்களைப் போட்டு இறந்து விட்டதாக எத்தனை முறை பகிரப்பட்டிருக்கும் ? சமீபத்தில் ஐடி துறையைச் சார்ந்த ஸ்வாதியின் கொலை விசயத்திலும் பெரிய மனிதர்கள் உடபட அனைவரும் எத்தனை பேர் எத்தனை தவறான தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். சில சமயங்களில் எது உண்மையான தகவல் எது பொய்யான தகவல் என்பது கூடத் தெரிவதில்லை.

மூடநம்பிக்கை அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும் தவறான தகவல்களால் நமது அறிவு மழுங்கிக் கொண்டே வருவதும், நமது நேரம் உட்பட அனைவரது நேரமும் விரயமாவதும் பாதிப்பு தானே. பத்து தலை பாம்பு, அனகோன்டா வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்படும் ஆண், சிவலிங்கத்துக்கு பூ போடும் பாம்பு, என போட்டோஷாப்பில் புனையப்பட்ட புகைப்படங்களை எத்தனை பேருக்கு இன்னும் அனுப்பிக் கொண்டே இருக்கிறோம்.

இதற்கெல்லாம் எப்போது முற்றுப்புள்ளி வைப்பது.. ? அது சாத்தியமா..? ஒன்று போனால் ஒன்று புதிய முகமூடியுடன் முளைத்துக்கொண்டே தான் இருக்கும். நாம் தான் நமது ஆறாவது அறிவுக்கண்ணை அகலத் திறந்து வைத்திருக்க வேண்டும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து ஆராய்ந்து நம்பவும் பகிரவும் வேண்டும்... நாம் அறிவாலும் செயலாலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும்...

கொலுசு மின்னிதழில் வாசிக்க

http://kolusu.in/kolusu/z_want_to_see_book.php?parameter=12K19K415 கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக