ஞாயிறு, 17 ஜூன், 2018

குரலற்றவனின் எதிர்க்குரல்

தகவு மின்னிதழில் நான் எழுதிய நூல் விமர்சனம் வெளியாகியுள்ளது இங்கு பகிர்கிறேன் .

தகவு மின்னிதழ் வாசிக்க : http://padaippu.com/ta/thagavu-2

குரலற்றவனின் எதிர்க்குரல் 

- கவிஞர் சோலை மாயவனின் விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி கவிதைத் தொகுப்பை முன்வைத்து


 ஒரு கவிதையை நாம் முழுமையாக உணர்ந்து கொள்வது என்பது ஒரு கவிஞனை அவனது உணர்வுகளோடு முழுமையாக உள்வாங்கிக் கொள்வது என்பதையும் சேர்த்தது தான். ஒரு கவிதையை நாம் புரிந்து கொள்வது என்பது வாசக மனநிலையை ஒத்தது. வாசிப்பின் சூழல்,காலம்,மனோநிலை என அத்தனையையும் உள்ளடக்கிய ஒன்றுதான் ஒரு நவீன கவிதையை நாம் புரிந்துகொள்ளுதல் என்பது. ஒரு கவிதை, படைப்பாளனால் என்ன தொனியில் எழுதப்பட்டதோ அதே தொனியில் வாசகன் அதை உள்வாங்கிக் கொள்ளும் இடம் படைப்பாளனின் வெற்றி உறுதி செய்யப்படும் இடம். போலவே, படைப்பாளன் சொல்லாத அல்லது பூடகமாக வைத்திருக்கும் பொருள் அனைத்தையும் சேர்த்து வாசகன் உள்வாங்கிக் கொள்ளும் இடம் என்பது அந்தப் படைப்பின் வெற்றியை உறுதி செய்யும் இடம். ஒரு கவிஞன் தான் சொல்ல நினைத்ததை வாசகனுக்குக் கடத்துவதும், சொல்லாமல் விட்டு வைத்திருக்கும் செய்தியையும் வாசகனுக்குக் கடத்துவதும் கவிதையில் சாத்தியம் தான்.

ஒரு கவிதைத் தொகுப்பு அதனளவில் மனநிறைவைத் தர, குறைந்தபட்சம் ஐந்து கவிதைகளாவது நினைவில் நிற்கும் கவிதைகளாக இருந்தால் போதுமானது. ஒரே ஒரு கவிதையாவது முத்திரைக் கவிதையாக தொகுப்பின் அடர்த்தியைச் சொல்லும்படி அமைவது இன்னும் சிறப்பு.

கவிஞர் சோலை மாயவனின் விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி கவிதைத் தொகுப்பின் கவிதைகள் நவீன மொழிதலில் சொல்லப்பட்ட நூற்றாண்டு கால பழைய வலிகள். அவற்றை இந்த நூற்றாண்டிலும், அதிலும் கவிதையில் பேச வேண்டி வைத்திருக்கிற நம் காலத்தைத் தான் சபிக்க வேண்டியிருக்கிறது.


தேயிலை நிழலில்
உறங்குகிறது
வனமிழந்த சிறுத்தை

இந்த ஒரு கவிதை தரும் அழுத்தமும் இந்த ஒரு காட்சி விரியச் செய்கிற பெரும் வரலாற்றுப் பிழையின் கொடூரச் சித்திரமும் தான் ஒரு கவிதையில் ஆவணப்படுத்தப் பட வேண்டிய காலச் சித்திரம் என உணரச்செய்கிறது. வனத்தை அழித்து தேயிலைச் செடிகளை நட்டு பன்னாட்டு வணிகத்தைப் பெருக்கச் செய்ய நம் வயிறு கிழித்து இடம் கொடுத்த பின் வனத்தின் உயிர்கள் போக்கிடமின்றி சமநிலத்துக்கு வருவதும் அவற்றை நாம் விரட்டுவதுமான விலங்குகளுக்கும் மனிதனுக்குமான போரை வேதனையுடன் நினைவு கூறச் செய்கிறது இந்தக் கவிதை.
தேயிலை குத்துச் செடிக்கடியில் படுத்துக்கிடக்கும் சிறுத்தை ஒரு குறியீடு தான். அது ஒரு மிகப்பெரிய வன உயிர்க் கூட்டத்தை, செழித்த பெருங்காட்டை தனது உருவத்துக்குள் அது மறைத்து வைத்திருக்கிறது. தேநீருக்கு நாம் விலை போன கதையையும் நமது குறிஞ்சிக் காடுகளை அழித்து தேயிலைச் செடிகள் வேரூன்றிய கதையையும் நாம் அறிந்திருந்தால் இந்தக் கவிதை நம் நெஞ்சத்தைத் தைக்கும்.

எம் நூற்றாண்டின்
தாகம் தீர்க்க மறுத்த
ஆதிக்க சாதியின்
சாபத்தின் அடையாளமாக

எம் குழந்தையின்
பீ துடைத்த துணியை
தூக்கி வீசும்
குப்பைத் தொட்டியாக இருக்கிறது

ஊரின் நடுவே
பொதுக்கிணறு

பொதுக்கிணறு தூர்ந்து போனதன் காரணம் கோடையும், நிலத்தடி நீர் வற்றியதும் என நாம் நினைத்துக்கொண்டிருக்க, அதன் பின்னாலும் இப்படி ஒரு சாபம் இருக்கிறது எனச் சொல்லும் இந்தக் கவிதை நம் காலத்தின் சாட்சிதானே ? குடிநீர் மறுத்த ஆதிக்க சாதிக்கான சாபத்தில் தான் நீரின்றி வறண்டு தூர்ந்து போயிருக்கக் கூடும் பொதுக்கிணறு என்ற உண்மை நம்மை இன்னும் பல காலத்துக்கு முகத்திலறைந்து கொண்டே இருக்கட்டும்.

காலகள் இடறி
தலைகுப்புற விழுந்து கிடந்தேன்
கூடவே
சிதறியது கழனி வேலைக்குப் போன
அம்மாவுக்குக் கொண்டு சென்ற
கேழ்வரகுக் கூழ்
மீதமான கூழில் ஆற்று நீரை நிரப்பி
அம்மாவின் பசி போக்கினேன்
அம்மா இருக்கிறாள்
நான் இருக்கிறேன்
காணாமல் போயிருந்தது
பசி தீர்த்த
ஆறு


இந்தக் கவிதை நம் மனக்கண் முன்னால் கொண்டு வரும் சித்திரம் ஒரு விவசாய வாழ்வு அதை நீங்கி நாம் இப்போது நகரத்துக்கு நகர்ந்துவிட்டோம். மேலும் இரண்டாவது தலைமுறைக்கே ஆறு என்ற ஒன்று இல்லை எனக் கவிஞர் பதிவு செய்கிறார். என்றால், அடுத்த தலைமுறைக்கு நீராவது இருக்குமா என்ற அச்சத்தைக் கிளப்புகிறது இந்தக் கவிதை. தமது படைப்புகளில், தமது நிலம், தமது வாழ்க்கை முறை, தமது மண் சார்ந்த காட்சிகளைப் பதிவு செய்யும் எழுத்தாளர்கள் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் தாம் நமது வரலாற்றை இலக்கியங்களின் வழி ஆவணப்படுத்துகிறார்கள். அப்படியான கவிதைகளை கவிஞர் நிறையத் தந்திருக்கிறார் இந்தத் தொகுப்பின் வழி.

நீர் நிலைகள் வற்றிவிட்டதன் கொடுமைகள், அதிகாரத்தின் ஒடுக்குமுறைகள், தீண்டாமையின் கொடுஞ்செயல்கள், என சமூகத்துக்கான புறக் கவிதைகளோடு சில அகக் கவிதைகளையும் சேர்த்து தொகுப்பாக்கியிருக்கிறார்.

தாய்மையடைந்திருக்கும் ஒரு பூனையின் வருகைக்காக சன்னல்களைத் திறந்து வைத்துக் காத்திருக்கும், தட்டு நிறைய பாலுடன் காத்திருக்கும் மனிதம் தான் இந்தக் கவிதைகளின் அடிநாதம். மனிதமும், சாதீய ஒதுக்குதலுக்கெதிரான உரத்த குரலும், இயற்கை, உயிர்களின் மீதான வன்முறைகளைச் சாடும் குரலாகவும் இந்தக் கவிதைகள் ஓங்கி ஒலிக்கின்றன.

இரண்டாவது தொகுப்பிலேயே இவ்வளவு அடர்த்தியான கவிதைகளோடும் இவ்வளவு செங்கோபத்துடனும் வந்திருக்கும் கவிஞர் சோலைமாயவனை வாழ்த்தி வரவேற்போம்.  நல்ல கவிதைகள் காலத்தின் அத்தியாவசியாமாக இருக்கின்றன. நல்ல படைப்பாளர்கள் காலத்தின் பெரும் தேவையாயிருக்கின்றனர்.

ஆசிரியர் : கவிஞர் சோலைமாயவன் -  9597014283
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
தொடர்புக்கு : 9095507547 , 98422 75662

4 கருத்துகள்:

 1. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிவு இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  https://www.tamilus.com

  – தமிழ்US

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் நண்பர்களே,

  Pothigai News

  Facebook Pothigai News

  Twitter Pothigai News

  Instagram Pothigai News

  உங்களுக்கு பிடித்திருந்தால் பின்தொடரவும் மற்றும் நண்பர்களுக்கும் பகிரவும்.

  நன்றி!!

  பதிலளிநீக்கு