ஞாயிறு, 17 ஜூன், 2018

தந்தையர் தினம்

மிகச் சன்னமாக வானம் மழைத் தூறல்களால் பூமியை ஆயிரமாயிரம்  கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிற இந்த நள்ளிரவிலும் நான் இதை எழுதியிருக்க மாட்டேன் தான்.

இன்று தந்தையர் தினம் என்பதால் மற்ற நாட்களை விடவும் அப்பாவின் நினைவுகள் அதிகதிமாக மேலெழுந்த படியே இருந்தது. அப்பாவைப் பற்றி எதையாவது எழுதத் துவங்கினால் அது இப்போது இருக்கிற மனநிலையை இன்னும் இறுக்கமாக்கி விடும் என்பதால் எதுவும் செய்யாமல் இருந்தேன். கோவையிலிருந்து மகிழுந்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் தமிழ்க் கலைஞர்கள் சங்கம் தந்த இலக்கிய நெறிச் செம்மல் விருது பெற்றுக்கொண்டு. உடன் விருது பெற்ற கவிஞர் அம்சப்ரியா அவர்களையும் உடன் வந்த மாமாவையும் வழியில் இறக்கிவிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்புகையில் நள்ளிரவு. வீட்டுக்குள் நுழையும் போது மகிழுந்தில் அந்தப் பாடல் ஒலித்திருக்க வேண்டாம். வாசலுக்கு வெளியில் வாகனத்தை நிறுத்திவிட்டு மழையிசையுடன் சேர்ந்து முழுதுமாக அந்தப்பாடலைக் கேட்டுவிட்டு தான் உள்ளே நுழைகிறேன்.

“ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே "

நா.முத்துக்குமார் என்ற காலம் அவசரமாக விழுங்கிவிட்ட கவிஞனின் நெகிழ்த்தும் வரிகள் என்னை இந்த இரவில் மேலும் மேலும் உருகச் செய்துவிட்டது.

சென்ற முறை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் விருது விழாவுக்குப் போய்விட்டு வந்ததை மகள் பாரதி இன்று காலையில் தான் நினைவுகூர்ந்தாள். அப்பா என்னுடைய ஒரு பேனாவை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தான் விருது விழாவுக்கு வந்தாராம். பேத்தியிடம் இது அப்பாவுடைய பேனா, நான் முன்பெல்லாம் அப்பா பிறந்தநாளுக்கு பேனா பரிசளிப்பேன் என்றெல்லாம் நிறைய சொல்லியிருக்கிறார். அவள் அதைச் சொன்ன போது நினைவில் வந்தது. சிறு வயதில் எனது பிறந்தநாளுக்கு உடை தவிர அப்பா தரும் அன்புப் பரிசு பேனா தான். எனக்கு பேனா பிடிக்கும் என்பது மட்டுமல்லாது நான் எழுத வேண்டும் , படிக்க வேண்டும் என்பது அப்பாவின் கனவாகவே இருந்தது. பள்ளிக்கே செல்லாத அப்பாவுக்கு என் கல்வியின் மீது பெரும் காதல் இருந்தது. இந்த நினைவுகளின் வழியே நான் முடிவு செய்திருக்கிறேன் இதோ வருகிற ஜூன் 21 மகள் பாரதியின் பிறந்தநாளுக்கு நான் ஒரு பேனாவைப் பரிசளிப்பேன் அது என் அப்பா எனக்குக் கொடுத்ததைப் போல என் கனவுகளை, அன்பை, அப்படியே தூக்கிக் கொடுப்பதாக. படி , எழுது பாரதி என்பதாக...

இன்னொன்றும் தோன்றியது... இது இன்று விருது விழாவில் நான் பேச நினைத்தது.. வாய்ப்பில்லாததால் இங்கு எழுதுகிறேன்.. இந்தத் தந்தையர் தினத்தில் அப்பா உடன் இல்லை, ஆனால் அப்பாவைப் போலவே என் மீது அன்பும் கண்டிப்பும் வழிகாட்டுதலுமாக என்னோடு  மாமா ச.தி.செந்தில்குமார் இருக்கிறார்.  அப்பாவைப் போலவே எனது எல்லா செயல்பாடுகளிலும் உடன் இருக்கிறார், உடன் வருகிறார், ஆற்றுப்படுத்துகிறார், இதோ இன்றும் விருது வாங்க காலையில் என்னுடன் வந்து நள்ளிரவில் தான் வீடு திரும்புகிறார், அப்பாவைப் போலவே பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு அப்படி ஓட்டு , இப்படி ஓட்டு என்று நல்வழி காட்டிக்கொண்டிருக்கிறார்....  அப்பாக்கள் தினத்தன்று அப்பா இல்லாத குறைக்கு முழுநாளும் என்னுடனே இருந்திருக்கிறார் ... அவருக்கானதும் தான் இந்த நாள்.

அப்படிப் பார்த்தால் , நாங்கள் நண்பர்கள் தினத்தையும் , சகோதர தினத்தையும் ஏன் காதலர் தினத்தையும் சேர்ந்து தான் கொண்டாட வேண்டும். கொண்டாடுவோம்.

அப்பாக்கள் அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவதில்லை தங்கள் பிள்ளைகளை...

8 கருத்துகள்:

 1. சிறப்புப் பதிவு அருமை இறுதி வரி மிக மிக அருமை வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு..மாமா மட்டுமல்ல..மகளும் காலம் காட்டும் தந்தையின் வடிவம் தான்

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு தோழர்.

  "அப்பாக்கள் அப்படியே விட்டுவிட்டுப் போய் விடுவதில்லை தங்கள் பிள்ளைகளை"

  பதிலளிநீக்கு