வியாழன், 10 நவம்பர், 2016

தீபாவளி - ஒரு நாள் கூத்தின் ஊழித்தாண்டவம்

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையின் எட்டாவது பாகம் இந்த மாதம் ....

தேநீர் இடைவேளை # 8

தீபாவளி - ஒரு நாள் கூத்தின் ஊழித்தாண்டவம்












எப்போது வேண்டுமானாலும்
ஆகலாம் ஞானியாக
இனி எப்போது மாறுவேன்
குழந்தையாக

- .அம்சப்ரியா

கவிஞர் க.அம்சப்ரியா அவர்களின் இந்தக் கவிதை எனக்குப் பிடித்தமான ஒன்று. இந்த பிரபஞ்ச இயக்கம் முன்னோக்கி நகர்வது. காலம் தான் இந்த பிரபஞ்ச ரகசியங்களில் கணிக்க முடியாத, கலைக்க முடியாத ஒரு அமைப்பு. நிகழ்காலம் மட்டும் தான் நம் வசம். நிகழ் காலம் என்பது என்ன ? இந்த வருடமோ , இந்த மாதமோ, இந்த வாரமோ ஏன் இந்த நாளோ கூட அல்ல. இந்த நொடி. இந்தக் கணம் மட்டும் தான் நிகழ்காலம். இந்தக்கணத்தைத் தாண்டிய எதுவுமே நம் கைகளில் இல்லை. அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களும், போன நொடி தந்துவிட்டுப் போன அனுபவங்களும் தான் இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கின்ற தொய்வற்ற சக்தி. மனித இனத்தை ஓடு ஓடு என விரட்டிக்கொண்டேயிருக்கிற மகாசக்தியும் அதுவே.

நமக்கு எப்போதுமே நாஸ்டால்ஜியா கொஞ்சம் தூக்கலாக இருக்கும். நமது பாரம்பர்யம், தொன்மை , அந்தநாள் ஞாபகங்கள் என மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்போம் முடிவற்று. அப்படி இந்த தீபாவளிக்கு ஊரிலிருந்து வாழ்த்துச் சொல்ல அழைத்த நண்பன் ஒருவன் நாஸ்டால்ஜியா கணக்கைத் துவங்கிவைத்தான்.

சிறுவயது முழுமையும் கிராமமும், கொண்டாட்டமும், நண்பர்களும் நிறைந்தது. கூடவே வறுமையும் . அந்த நாளில் தீபாவளி , பொங்கலுக்கு ஏங்குவோம். மற்ற நாட்களில் கிடைக்காத இனிப்பு, உடைகள் , கொண்டாட்டங்களைக் கொண்டுவருபவை இந்தப் பண்டிகைகள் தாம்.

தீபாவளிகளில் கொஞ்சம் பட்டாசு வாங்கித் தருவார்கள், பசங்களுடன் சேர்ந்து கொண்டாட்டமாக அதை வெடித்துவிட்டு , வெடிப்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டும், சேட்டைகள் செய்தபடியும் ஊர்சுற்றுவோம். விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் தெரிந்த அண்ணன், தலைவர் படம் ரிலீஸ் ஆனால் இலவச டிக்கெட் தந்து விடுவார். பிரதியுபகாரமாக சாக்குப்பைகளில் லாட்டரி டிக்கெட்களைக் கிழித்து நிறைத்துத் தருவார்கள். தலைவர் திரையில் தோன்றும் காட்சிகளிலெல்லாம் ஹேய் என கத்தியபடி தூக்கி வீசி ஆரவரிக்க வேண்டும். அப்படி சில திரைப்படங்களுக்குப் போனதுண்டு. உறவினர்கள் வீட்டுக்கு வருவார்கள் , ராக்கெட் விட்டு அடுத்த வீட்டில் விழுந்து பஞ்சாயத்தான கதை, யாருடைய வேட்டியிலாவது பட்டாசு தெறித்து ஓட்டையாக அவர் துரத்திய கதை, கையிலேயே வெடி வெடிப்பதாக சீன் போட்டு கை வெந்த கதை என தீபாவளிக் கதைகள் நிறைய உண்டு. இப்படி பால்யத்துக்குத் திரும்பமுடியாத ஏக்கம் எப்போது மனதில் வந்தாலும் கவிஞர் அம்சப்ரியாவின் இந்தக் கவிதை நினைவுக்கு வரும்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு வெடி வெடிப்பது படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தபின்பு சூழலியலில் கவனம் செலுத்திய பின்பு சுத்தமாக விட்டுவிட்டேன். திருமணமாகி குழந்தை பிறந்தபின்பு அவளுக்காக கொஞ்சமே கொஞ்சம் வெடி, மத்தாப்பூ விடுவதோடு சரி. சென்ற வருடம் பாரதியிடம் சொல்லி இருந்தேன் இந்த வருடம் தான் கடைசி வெடிகள் வேண்டாம் , பறவை விலங்குகளெல்லாம் பயந்து ஓடுகின்றன பார் என்று. அவளும் அடுத்த வருசம் வேண்டாம் என்று சொல்லி இருந்தாள். இந்த வருடம் கேட்ட போது ஆமாம் இந்த வருடம் பசுமை தீபாவளி கொண்டாடலாம் என முடிவு செய்துவிட்டோம். ஆனாலும் அவளுக்குக் கொஞ்சம் ஆசையிருப்பதை உணர்ந்து கொண்டேன். குழந்தை தானே. இரண்டு பெட்டிகள் கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம் மட்டும் வாங்கித்தந்துவிட்டேன். மகிழ்ந்தாள். அடுத்த வருடம் இன்னும் வளர்ந்துவிடுவாள். இதுவும் தேவையிருக்காது..

நான் பார்த்த வரைக்கும், வழக்கத்தை விடவும் இந்த வருடம் பட்டாசு விற்பனை, வெடிப்பது எல்லாம் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவே தோன்றியது. இதை உறுதிப்படுத்திக்கொள்ள செய்திகளில் தேடினால், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கடந்த ஆண்டை விடவும் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு இருபது சதவீதத்துக்கும் மேல் குறைந்து விட்டதாக செய்தி வெளியிட்டிருந்ததைப் பார்த்தேன். அதற்கு அவர் பல்வேறு காரணங்கள் சொல்லியிருந்தார். ஆர்வமின்மை, விடுமுறைகள் அதிகமின்மை, மேலும் சீனப்பட்டாசுகளின் ஆதிக்கம் என பல்வேறு காரணங்கள்.

சென்ற ஆண்டை விடவும் சீனப்பட்டாசுகளின் விற்பனையும் இறக்குமதியும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. காரணம், இணையம், முகநூல், வாட்சப் என அனைத்து ஊடகங்களிலும் சிவகாசிப் பட்டாசுகளை வாங்குங்கள் சீனப்பட்டாசுகள் வேண்டாம் என தொடர்ந்து விழிப்புணர்வு தந்ததின் விளைவாகக் கூட இருக்கலாம். ஒட்டு மொத்தமாக பட்டாசு வெடிப்பது குறைந்ததற்கும் இப்படியான விழிப்புணர்வு விளம்பரங்களும் ஒரு காரணமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. நல்ல விஷயம் தானே.

சென்ற ஆண்டை விடவும் பட்டாசுகளின் விற்பனை குறைந்திருந்தாலும் அதன் விளைவுகள் அதிகரித்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் விளைவுகளில் இரண்டு முக்கிய விளைவுகள் சென்ற ஆண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளன.. ஒன்று தீபாவளியை ஒட்டி பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள். இரண்டு பட்டாசுகளால் ஏற்படும் ஒலி மாசு. விபத்துகளும், ஒலி மாசுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகம். எப்படி ? கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை செய்தித்தாள்கள் தருகின்றன.

தீபாவளியன்றும் அதற்கு முந்தைய தினமும் பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் 781 பட்டாசு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகமாகும்.

தீபாவளி பண்டிகையான சனிக்கிழமை மற்றும் அதற்கு முந்தைய தினத்தில் பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் மொத்தம் 781 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சென்னையைப் பொருத்தவரை 141 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இதில், 24 பேர் காயம் அடைந்துள்ளனர். இரண்டு தினங்களிலும் ராக்கெட் பட்டாசுகள் மூலம் 446 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சாதாரண பட்டாசு மூலம் 335 விபத்துகள் நடந்துள்ளன.

இவற்றை முன்பே கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 900 தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். 39 தீயணைப்பு நிலையங்கள் தவிர மக்கள் நெருக்கம் அதிகமுள்ள 34 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டாசு விபத்து குறித்து மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கூற்றின்படி, “2012-ல் 911 பட்டாசு விபத்துகளும், 2013-ல் 301 விபத்துகளும், 2014-ல் 62 விபத்துகளும், 2015-ல் 84 பட்டாசு விபத்துகளும் நடந்துள்ளன”.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீ விபத்துகள் பல மடங்கு அதிகமாகியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் மழையின்மை. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பே மழை பெய்ததால் பல இடங்களில் ஓலைக் குடிசைகள் உள்ளிட்டவை நனைந்து இருந்தன. எனவே அதிக தீ விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு மழை தாமதமானதால் பல இடங்களில் பட்டாசு தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.. 

இரண்டாவது விளைவு ஒலிமாசு , தீபாவளிப் பண்டிகையின் போது வெடிக்கும் பட்டாசுகளின் காரணமாக காற்றில் ஒலி மாசு அதிகமாகும் . இந்த ஆண்டு அது மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. சென்னை உட்பட சில நகரங்களில் ஒலி மாசு முன்பைவிடவும் குறைந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அதிகரித்தே இருந்திருக்கிறது.

ஒலி மாசு, பகல் நேரத்தில் அதிகபட்சமாக 55 டெசிபல் அளவும்; இரவில் 45 டெசிபல் அளவும் இருக்கலாம். ஆனால், தீபாவளிக்கு முன்பு 73 டெசிபல் என்றிருந்த ஒலி அளவு, தீபாவளியன்று 88 லிருந்து 90 டெசிபல் வரை உயர்ந்திருக்கிறது. இதற்கும் மழை இல்லாமல் போனது காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. காற்றில் ஈரப்பதமின்மை, தூசிகள் நிறைந்திருப்பது போன்றவை முக்கிய காரணங்கள்.

ஆக , மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களும் இயற்கையால் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகிறது. மரங்களை வெட்டி வீழ்த்துவதன் மூலம் மழையை இழக்கிறோம், மழையை இழப்பதன் மூலம் அனைத்தையுமே இழக்கிறோம். நாளுக்கு நாள் புவி வெப்பமயமாகி வருகிறது. மேலும் அனைத்து விதத்திலும் நாம் வாழ்வாதாரங்களை இழந்து வருகிறோம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது முற்றிலும் உண்மைதான்.

அது மட்டுமா , தீபாவளிக்கு நாம் வெடித்துத் தீர்க்கும் பட்டாசுகள் கக்கும் புகை நமக்கு மிகப்பெரிய பகை. அதன் மூலம் காற்று மாசு கடுமையாக இருக்கிறது. டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் அல்லாடிக் கொண்டிருப்பதை செய்திகளில் பார்க்கிறோம் அல்லவா. அப்படி ஒரு நிலை நம் ஊருக்கும் வர அதிக காலம் ஆகாது. தொழற்சாலைகள், வாகனங்கள், பட்டாசுகள் எல்லாமே பெருகி காற்றை காலி செய்ய ஆரம்பித்துவிட்டன. நாம் விழிப்புணர்வுடன் செயல்படவில்லை என்றால்.. விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

இவை நேரடியாக பட்டாசுகளின் பாதிப்புகள் இவற்றைத் தாண்டி மேலும் ஒரு செய்தியைப் படித்தேன் அது இன்னும் அதிர்ச்சியைத் தந்தது. பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் டன் கணக்கில் ஒரே நாளில் நாம் சாலைகளில் குப்பைகளைக் குவிக்கிறோம். அதுவும் பெரிய ஆபத்து தானே. சென்னை நகரில் மட்டும் தெருக்கள், சந்துகள் மற்றும் சாலைகளில் சேர்ந்த பட்டாசு குப்பைகள் 91 டன். அவை இரவுக்குள் அகற்றப்பட்டன. எப்படித் தெரியுமா ? கூடுதலாக 1,120 துப்புரவுப் பணியாளர்களைப் பணியமர்த்தி மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். ஊரே தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்க நமது குப்பைகளை அவர்கள் அள்ளிக் கொண்டிருந்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்ல ஓட்டுநர்கள், நடத்துனர்கள், காவலர்கள், மின் ஊழியர்கள், இப்படி முக்கியப் பணியில் இருக்கும் பலருக்கும் ஏது பண்டிகைகள் ?

இப்படியாக ஒரே ஒரு நாள் கூத்துக்காக , பணத்தை வாரியிறைத்து, பட்டாசுகள் வெடித்து காசைக் கரியாக்குகிறோம், அதன் மூலம் விபத்துகளை ஏற்படுத்தி உயிர்,உடமைகளைச் சேதப்படுத்துகிறோம், அதன் மூலம் ஒலி மாசு ஏற்படுத்தியும், புகைகளைக் கக்கியும் காற்றைக் களங்கம் செய்கிறோம், அதன் மூலம் டன் கணக்கில் குப்பைகளைக் கொட்டி நிலத்தைக் களங்கம் செய்கிறோம்,

ஒரே ஒரு நாளுக்காக அதன் பாதிப்புகளை வருடம் முழுதும் ஏற்றுக்கொள்ளவும் தயாராகிவிட்டோம் … நமது கொண்டாட்டங்களை மறுபரிசீலனை செய்தால் தான் என்ன ? வெடிகள் இல்லாமல் அல்லது இயற்கையை பாதிக்காத மருந்துகளற்ற நவீன வெடிகளைக் கண்டுபிடித்தால் தான் என்ன ?





கொலுசு மின்னிதழில் இந்தக் கட்டுரையை வாசிக்க :

http://kolusu.in/kolusu/kolusu_nov_16/index.html#p=14 

2 கருத்துகள்: