சனி, 12 நவம்பர், 2016

வைகறையும் பொள்ளாச்சி இலக்கியவட்டமும்

கடந்த மே மாதம் கந்தகப்பூக்கள் இதழ் கவிஞர் வைகறை சிறப்பிதழாக வந்தது. அதில் வைகறையும் பொள்ளாச்சி இலக்கியவட்டமும் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்கிறேன் ...

வைகறையும் பொள்ளாச்சி இலக்கியவட்டமும்கவிஞர் வைகறை இப்போது நம்மோடு இல்லை. கவிதைகளாகவும், கவிதைகளின் மீதான தீராத வேட்கையுடனும், கவிதை இலக்கிய செயல்பாடுகள் மீதான கொள்ளைக் கனவுகளோடும் வாழ்ந்த ஒரு மனிதன், சக கவிஞன், நெருங்கிய ஸ்நேகிதன் வைகறை தனது 36ஆவது வயதிலேயே மிக அவசரமாக வாழ்வை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

வைகறையோடு எனக்கும், எங்களது பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கும் மிக நெருக்கமுண்டு.
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் 17.03.2013 அன்று நானும், கவிஞர் க.அம்சப்ரியா அவர்களும் இன்னும் சில நண்பர்களுடன் இணைந்து துவக்கினோம். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிறு இலக்கியக் கூட்டம் நடைபெறும். எட்டாவது இலக்கியக் கூட்டத்துக்கு முதன் முதலில் கவிஞர் வைகறை வந்திருந்தார்.

வைகறை அநேகமாக தமிழ்நாட்டின் அனைத்து நல்ல இலக்கியக் கூட்டங்களுக்கும் ஒரு முறையாவது போயிருப்பார், நல்ல கவிஞர்களுடன் ஒரு முறையாவது எப்படியாவது பேசியிருப்பார். கவிதைகளின் மீது அவ்வளவு அன்பும் ஈடுபாடும் கொண்டவர். ஹைக்கூக்களின் மீதும் மிகுந்த ரசனையும் ஈடுபாடும் கொண்டவர். ஹைக்கூ எழுதுவதற்கென்றே தனியே ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்திருந்தார். ஒரு நல்ல கவிதையைப் படித்துவிட்டால் பொறுக்க மாட்டார். படைப்பாளிக்கு அழைத்தோ அல்லது செய்தியிலோ பேசிவிடுவார் அல்லது நண்பர்களுக்கு அழைத்து அதைச் சிலாகிப்பார். அப்படி என்னிடம் நிறையப்பேரைப் பற்றி நிறைய முறை பேசியுள்ளார். முதன் முறையாக பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வந்து விட்டுச் சென்ற இரவே பேருந்தில் செல்லச் செல்ல அலைபேசியில் பேசினார். இலக்கியவட்டம் மிகச் சிறப்பாக நடந்தது எனவும் வேறெங்கும் பார்க்காத கூட்டம் வந்ததாகவும் குறிப்பாக பெண்களின் கூட்டம் இங்கு அதிகம் வந்திருப்பது மிகச் சிறப்பான ஒன்று எனவும், படித்ததில் பிடித்தது, கவியரங்கம், செய்தி மடல் வெளியிடுவது என ஒவ்வொரு செயல்பாடுகளையும் பாராட்டினார்.அவருக்கு அப்போதே இலக்கிய வட்டம் மிகப்பிடித்தமானதாகிவிட்டது.

தர்மபுரியில் பணியில் இருந்த போது ஒவ்வொரு மாதமும் தவறாமல் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வந்து விடுவார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைப் பற்றி பல இடங்களில் பல மேடைகளில் குறிப்பிட்டுப் பேசியும் இருக்கிறார். வரும் போதெல்லாம் அவர் வந்து சேர்வது நள்ளிரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணியாக இருக்கும். அழைக்க மாட்டார். பேருந்து நிலையத்திலேயே அமர்ந்திருந்துவிட்டு காலையில் தான் அழைப்பார். நீங்கள் நன்றாகத் தூங்கும் நேரம் ஏன் தொந்தரவு செய்யனும்னு அழைக்கலை என்பார். பலமுறை திட்டியுள்ளேன். ஒரு முறை நானாக இரவு ஒரு மணிக்கு அழைத்து அவர் வந்து விட்டார் எனத் தெரிந்த பின்பு போய் வீட்டுக்கு அழைத்து வந்தேன். இன்னொரு முறை காலை 4 மணிக்கு அழைத்து வந்தேன். பின்னர் நகருக்குள் நண்பர் சோலைமாயவன் அறையெடுத்துவிட்டதால் எப்போது வந்தாலும் அவரது அறைக்குச் சென்று விடுவார்.

ஒரு கூட்டத்தில் அவரது நந்தலாலா இணைய இதழை அறிமுகம் செய்து வைத்தோம். பொள்ளாச்சி இலக்கிய வட்டப் படைப்பாளிகளை நந்தலாலாவுக்கு படைப்புகள் அனுப்பச்சொல்லிக் கேட்டுக் கொண்டோம். அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து ஜனனன் பிரபு, லாவண்யா சுந்தரராஜன் என சிலரது நூல்களை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கக் கேட்டுக் கொண்டோம். உற்சாகமாக வந்து சிறப்பாக அறிமுகம் செய்து பேசிச்சென்றார்.

சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு எங்களது தொகுப்பைக் கொண்டு வரலாம் என்று முடிவானவுடன் வைகறையும் இணைந்தார். கவிதைத் தொகுப்பின் ஆரம்ப வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்ள, இறுதிக்கட்ட வடிவமைப்பில் இரவு முழுதும் எங்கள் கூடவே இருந்தார். அவரது ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு எழுத்திலும் நாங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். சென்னையில் புத்தகங்கள் அச்சடிக்க கூடவே வந்தார். நான் , நிலாரசிகன் மற்றும் வைகறை மூவரும் மணி ஆப்செட் சென்றது புத்தகங்களை அச்சுக்குத் தந்துவிட்டு ஒரு சிறிய கடையில் வியர்க்க வியர்க்க பிரியாணி சாப்பிட்டது எல்லாம் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. கவிதைகளின் மீது மட்டுமல்ல கவிதை நூல் வடிவமைப்பிலும் அவரது ஆர்வமும் அறிவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்தார்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் ஆறு நூல்களும் முதற்கட்டமாக சென்னையிலும் பின்னர் பொள்ளாச்சியிலும் வெளியிட்டோம். சென்னையில் அவரது தொகுப்பை திரை இசையமைப்பாளரும் வைகறையின் சகோதரருமான என்சோன் பாக்கியநாதன் வெளியிட கவிஞர் யாழி பெற்றுக்கொண்டார். கவிஞர் செந்தில்பாலா அவரது தொகுப்பை மிகச்சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தார். பொள்ளாச்சியில் அவரது தொகுப்பை இளஞ்சேரல் அவர்கள் வெளியிட பூக்குட்டி கண்ணனுடன் விழாவுக்கு வந்திருந்த அனைத்துக் குழந்தைகளையும் மேடைக்கு அழைத்துப் பெற்றுக்கொள்ள வைத்தார். அது தான் வைகறை. அன்றைய நிகழ்வுக்கு தனது மனைவி மற்றும் மகன் ஜெய்குட்டியுடன் வந்திருந்தார். அவரது தொகுப்பை சுரேஷ் மான்யா அறிமுகம் செய்துவைத்தார்.

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் தொகுப்புகளை பல்வேறு இடங்களில் அறிமுகம் செய்து வைத்தார். எனது மற்றும் கவிஞர் அம்சப்ரியா அவர்களின் தொகுப்புகளை புதுக்கோட்டை வீதி அமைப்பில் அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்தார். வலைப்பதிவர் திருவிழாவில் பொள்ளாச்சி இலக்கிய வட்டக் கவிஞர்களை கவிதைப்போட்டியில் கலந்துகொள்ளச் சொல்லி ஊக்குவித்தார். இப்படி அவர் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.

இந்த வருடம் பத்து நண்பர்கள் தொகுபபு வெளியிடலாம் என்றிருக்கிறோம் உங்களது தொகுப்பையும் வெளியிடலாமா எனக் கேட்டேன். இல்லை நண்பரே கொஞ்சம் பொருளாதாரத்தைத் தயார் செய்து விட்டுச் செய்யலாம் என்றார். பொருளாதாரம் எப்போதும் நமக்குப் பிரச்சினை தான் சொல்லுங்கள் தயார் செய்கிறேன் என்றேன். வேண்டவே வேண்டாம் என்று சொன்னார். ஆனால் ஒரு தொகுப்புக்குக் கவிதைகள் தயார் என்றார் அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இன்னொரு தொகுப்பும் தயார் அதை மின்னூலாக்கலாமா என்றார். நான் இதை அவரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன் எனது ஒரு கவிதைத் தொகுப்பு, கட்டுரைகள் மற்றும் அம்சப்ரியா அவர்களது கட்டுரைகள் ஆகியவற்றை மின்னூலாக்கி பதியலாம் என்று. இப்போது அவரும் தனது கவிதைகளைத் தயார் செய்திருந்தார். எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அதன் தலைப்பு " மரணத்தின் இசைக்குறிப்புகள்". அப்போது அது உறுத்தவில்லை. இப்போது உறுத்துகிறது. இன்னும் மின்னூல் வடிவில் என்னிடம் உள்ளது. ஜூன் அல்லது அதன் பின்னர் வெளியிடலாம் என்று சொல்லியிருந்தேன். மேலும் இன்னொரு தொகுப்புக்கான கவிதைகளையும் சிறப்பாகத் தொகுத்து அனுப்பியிருந்தார் அதன் தலைப்பு " நான்காவது தோட்டாவுக்கான குறி ". ஆக, இரண்டு தொகுப்புகளுக்கான கவிதைகள் என்னிடம் உள்ளன. அவற்றை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலமாக வெளியிட வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. அந்தக் கனவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும். அவரது நூலை வெளியிடுவது மட்டுமல்லாது, அவரது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாகவும் பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளோம். விரைவில் அதையும் செய்ய வேண்டும்.

மே மாதம் 22ம் தேதி பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் குழந்தைகள் கலைக்கொண்டாட்ட நிகழ்வுக்கு குடும்பத்துடன் வரவேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவசியம் வருகிறேன் உங்கள் வீட்டில் தான் தங்குவோம் எனச் சொல்லியிருந்தார். மே 22 வந்துவிட்டது. வைகறைதான் வர முடியாத தூரத்துக்குப் போய்விட்டார்..


காலம் அவரை வெகு சீக்கிரத்தில் அழைத்துக்கொண்டுவிட்டது. அவரது கவிதைகள் இருக்கின்றன காலம் இருக்கும்வரைக்கும் வைகறையின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்க...

4 கருத்துகள்:

  1. நண்பர் கவிஞர் வைகறையின் நினைவுகள் மனதை கணக்கச் செய்கின்றன

    பதிலளிநீக்கு
  2. வைகறை உடனான உறவினைப் பகிரும் போது வைகறை கண்முன்னே வருகிறார். வைகறைக்காகத் தங்கள் குழு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு