திங்கள், 21 செப்டம்பர், 2015

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி ஒன்பதாவது இலக்கிய சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி ஒன்பதாவது இலக்கிய சந்திப்பு 20.09.2015 அன்று பாலக்காடு சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கவிஞர் அய்யப்பமாதவன் அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பான புத்தனின் விரல் பற்றிய நகரம் தொகுப்பை அறிமுகம் செய்வது என்பது இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிவானது. அன்றிலிருந்து அடிக்கடி அய்யப்பமாதவனிடம் பேசி வந்தேன். பெரிய கவிஞர், மிகுந்த அனுபவசாலியாக இருந்த போதிலும் மிகவும் ஆர்வத்துடன் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வர மிகவும் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவ்வப்போது தங்கும் இடம், போக்குவரத்து பற்றிய தகவல்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் உங்களையெல்லாம் சந்திக்க வருவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அடிக்கடி சொல்வார். நாங்களும் ஆர்வமுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இருந்தோம்.

இலக்கிய வட்ட நிகழ்வுக்கு இரண்டு நாட்கள் முன்னர் அய்யப்ப மாதவனின் தாயார் காலமாகி விட்டார் என்ற செய்தியைச் சொன்னார். மிகவும் வருத்தமாக இருந்தது. அதற்கும் ஓரிரு நாட்கள் முன்னர் தான் அவர் அம்மாவைச் சென்று சந்தித்து விட்டு சென்னை திரும்பியிருப்பதாகச் சொல்லியிருந்தார். சென்னை வந்த வேகத்தில் தகவல் வந்திருக்கிறது. அழைத்து தகவல் சொன்னார். தன்னால் நிகழ்ச்சிக்கு வர இயலாது ஆனால் திட்டமிட்டபடி நிகழ்வு நடக்கட்டும் என்றார். கவிஞரின் தாயார் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

திட்டமிட்டபடி நிகழ்வை நடத்துவது என முடிவானது. மனுஷி சனிக்கிழமை இரவு கிளம்பி ஞாயிறு அதிகாலை பொள்ளாச்சி வந்து சேர்வதாகத் தகவல் அனுப்பியிருந்தார். கருணாப்ரசாத் அவர்கள் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பொள்ளாச்சி வந்து சேர்வதாகத் தகவல் சொன்னார். சோலை மாயவன் அவரை அழைத்துச் சென்று தங்கவைப்பதாக ஏற்பாடு.

இரவு பத்து மணி வரைக்கும் இருவருடனும் பேசி திட்டங்களைச் சொல்லிவிட்டு, மனுஷிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், தங்கள் செல்பேசி காலையில் சார்ஜ் இல்லாமல் போய்விடும் என்னை அழைக்க இயலாமல் போய்விடும் எனவே ஒரு தாளில் என் எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பினேன். அதே செய்தியை கருணாப்ரசாத் அவர்களுக்கும் அனுப்பி விட்டதாக நினைத்து அனுப்ப மறந்துவிட்டேன்.
மனுஷியின் செல்பேசி சார்ஜ் தீரவில்லை. கருணாப்ரசாத் அவர்களின் செல்பேசி தான் காலை வாரிவிட்டது. அவர் வரும் நேரத்தில் சோலைமாயவன் பேருந்து நிலையம் சென்றும் விட்டார். அழைத்துப் பார்த்தால் அவரது எண் அணைத்துவைக்கப்பட்டுள்ளதாக வருகிறது. இரவு 11.30 வரை அவரும் பேருந்து நிலையக் கடைகள் எங்கும் தேடிச் சலிக்க, நானும் அழைத்து அழைத்துப் பார்க்க, கருணாப்ரசாத் பேருந்து நிலைம் பக்கத்திலேயே ஒரு அறை எடுத்து தங்கி, சார்ஜ் போட்டுக் கொண்டு பின்பு அழைத்தார். நானே அறை எடுத்துவிட்டேன் காலையில் சந்திக்கலாம் என்றார். மணி இரவு 12 ஆகிவிட்டது. பின்னர் சோலை கிளம்பிச் சென்றிருக்கிறார். காலையில் 5.45க்கெல்லாம் மனுஷி வந்து சேர, அவரையும் சோலைமாயவனே அழைத்து அறையில் தங்கவைத்துவிட்டு வந்தார். சோலைமாயவன் நகரத்திலேயே வீடு பார்த்து இந்த மாதம் தான் குடிவந்திருந்தது நல்லதாகிப்போனது.

காலை 8.30 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடக்கும் பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு முன்னரே அம்சப்ரியா, சோலை மாயவன் வந்துவிட்டார்கள்.
திட்டமிட்டமடி நிகழ்ச்சி ஆரம்பம். அய்யப்பமாதவனின் தாயாரின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தினோம் நிகழ்வின் துவக்கத்தில். அடுத்ததாக படித்ததில் பிடித்தது நிக்ழச்சியில் வாசகர்கள் இந்த மாதம் தாங்கள் வாசித்ததில் பிடித்த கவிதை,கதைகளை வாசித்தனர்.பின்னர் எனது வரவேற்புரை. அடுத்ததாக, அய்யப்பமாதவன் அவர்களின் புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிதைத் தொகுப்பை கவிஞர்,ஓவியர் மோனிகா அவர்கள் அறிமுகப்படுத்திப் பேசினார். அய்யப்பமாதவனின் கவிதைகள் எளிமையானவை எனத் துவங்கி அவரின் நிறையக் கவிதைகளை வாசித்துக்காட்டி அறிமுகம் செய்துவைத்தார்.

அடுத்ததாக ந.முத்துசாமி நாடகங்களின் தொகுப்பை பொன்.சந்திரன் அவர்கள் அறிமுகப்படுத்திப்பேசினார். நீளமான உரை. கூத்துக் கலையைப் பற்றி விரிவாக அறிமுகம் செய்தார்.

அடுத்து சுரேஷ்வரனும் ந.முத்துசாமி நாடகங்களின் தொகுப்பை தனது பாணியில் அறிமுகப்படுத்திப்பேசினார். அவரது உரையை அப்படியே இங்கு வாசிக்கலாம் .
கருணாப்ரசாத் அவரது ஏற்புரையின் போது ஒலிவாங்கியைத் தவிர்த்துவிட்டார். ஒரு நாடகக் கலைஞனான எனக்கு ஒலிவாங்கி அனாவசியம் என்று தான் பேசவே ஆரம்பித்தார். .முத்துசாமி அவர்களின் நினைவலைகள், அவரது எழுத்து, நாடகங்களில் நவீனத்தைப் புகுத்தியது போன்றவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

மாணவி கிருத்திகா எட்வின் படைப்புகள் பற்றிப் பேசினார். அவரது தொகுப்பிலுள்ள ஒரு கதையைப் படித்துவிட்டு அடுத்த கதைக்கு நகரமுடியவில்லை. மிகவும் பாதித்துவிட்டது என்று குறிப்பிட்டார்.
மாணவி வே.கோகிலா தாமஸ் க்ரேயின் ஆங்கிலக் கவிதையை வாசித்து, அதற்கு விளக்கம் சொல்லி அந்தக் கவிதயை தான் மொழியாக்கம் செய்த தமிழ்க் கவிதையையும் வாசித்தார்.

சோலைமாயவன் கவிஞர் மனுஷியின் முத்தங்களின் கடவுள் கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்தார். வழக்கத்தைவிடவும் உற்சாகமாகவும் சிறப்பாகவும் இருந்தது சோலை மாயவனின் பேச்சு. பத்து நாட்களாகவே அவர் மனுஷியின் பாம்புப் பிடாரி கவிதையை அனைவரிடமும் வாசித்துக் காட்டி அவர்கள் பாம்புக்கு சொல்லும் உவமையைக் கேட்டுக் கொண்டிருந்தார். மனுஷி தன் ஏற்புரையில் இந்தக் கவிதைகள் என் இருத்தலுக்கான சாட்சி என்றார். மேலும் இந்தக் கவிதைகளில் இருக்கும் குரல் எனது குரல்மட்டுமல்ல என் சமூகப் பெண்களின் குரல். அவர்களின் கண்ணீர், வலி அனைத்தும் தான் என் வரிகள் என்றார்.

பின்னர் இயற்கை இயலாளர் முகமது அலி அவர்கள் சூழலியல் பிரச்சினைகளை சிறப்புரையில் ஆதங்கமாக வெளிப்படுத்தினார். இலக்கியங்களில் இயற்கையையும் உயிர்களையும் கொண்டாட வேண்டும். இலக்கியவாதிகளுக்கு சூழலியல் அக்கறை வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள இயற்கையின் படைப்புகளை அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ள வேண்டும். இலக்கியங்களை விடவும் அறிவியல் முக்கியமானது என்று சொன்னார். ராஜநாகம் மாணிக்கக் கல்லைக் கக்கும் போன்ற அபத்தங்களை இனியும் எழுதக் கூடாது, மாணிக்கம் நிலத்தில் கிடைக்கும் ஒரு விதக் கல். ராஜநாகம் அதைக் கக்காது என்று அறிவியல் நிரூபித்துள்ளது. இது போன்ற அறிவியல் உண்மைகளை, வன உயிரிகளின் வாழ்வை இலக்கியவாதிகள் உட்பட நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.

வாசகர்கள் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது 15 கவிஞர்கள் கவிதைகளை வாசித்தனர்.
இப்போதே மணி 2.30 ஆகிவிட்டிருந்தது நிகழ்வில் நாங்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்த நட்சத்திரப் பேச்சாளர் இளஞ்சேரல் அவர்கள்தான் கடைசியாகப் பேச வேண்டும். காலத்தைக் கணக்கில் கொண்டு அவரது நூல் அறிமுகத்தை மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அந்த மிகக் குறுகிய நேரத்தையும் தனது வழக்கமான பேச்சில் சிறப்பாகக் கையாண்டுவிட்டார். நிகழ்வில் வாசித்த கவிதைகளைச் சுட்டிக்காட்டியும், அய்யப்பமாதவனது கவிதைகளை அறிமுகம் செய்தும் சிறப்பாகப் பேசிவிட்டார். எங்களுக்குத்தான் சங்கடமாகிவிட்டது. அதிரடி ஆட்டநாயகனை கடைசி ஓவரில் இறக்கிவிட்டுவிட்டோமே என்று. இருந்தும் இளஞ்சேரல் அவர்கள் அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை பூபாலன் இலக்கியக் கூட்டங்களில் இப்படியும் நடக்கும் என்று ஆதரவாகப் பேசினார்.

கவிஞர் அம்சப்ரியா அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிது முடிந்தது
எப்போதும் அதிகபட்சம் இரண்டு மணிக்கு கூட்டம் முடிந்துவிடும் ஆனால் இந்த முறை கூட்டம் முடிய மூன்றாகிவிட்டது. ஒரு தொகுப்புக்கு இரண்டு பேர் பேசுவது இதுவே முதன் முறை. இருவரும் விஸ்தாரமாகப் பேசியதால் இந்தக் கால தாமதம். இனி அடுத்த மாதத்திலிருந்து காலவரையறை ஒவ்வொரு அமர்வுக்கும் கடைபிடிக்கலாம் என்று முடிவானது.
சாப்பிடும் போது மணி நான்கைத் தாண்டிவிட்டது, அதன் பின் அனைவரையும் வழியனுப்பிவிட்டு, கிணத்துக்கடவில் இலக்கிய வட்டத் தோழர் பானுமதி அவர்களின் தாயார் இறந்து ஒரு வாரமாகியிருந்தது. அங்கு சென்று அவருக்கு ஆறுதலாகப் பேசிவிட்டு வந்தோம் நான், அம்சப்ரியா,சோலைமாயவன் மற்றும் இன்பரசு ஆகியோர். வீட்டுக்குள் நுழையும் போது மணி இரவு ஒன்பது. காலையில் 7மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பிய ஒரு ஜந்து இப்போது தான் வந்திருக்கிறது என்பது போலெல்லாம் பார்க்காமல் சாப்பிடுறீஙகளா என்று கேட்டார் மனைவி " ம் " சொல்வதற்குள் தொலைபேசியில் சுரேஸ்வரன் மூன்றாவது முறையாக நினைவு படுத்தினார், "தோழர்.! நிகழ்வின் புகைப்படங்களை அனுப்புங்க வாட்ஸப்பில், நான் முகநூலில் பதிகிறேன்" என்று. கேமிராவிலிருந்து காபி செய்து, புகைப்படங்களை எடிட் செய்து, அதை வாட்ஸப்பில் அனுப்பிவிட்டுப் பார்க்கிறேன் மணி பத்தைத் தாண்டிவிட்டது.
சாப்பிட்டுவிட்டு மனுஷி,மோனிகா, கருணாப்ரசாத் ஆகியோரிடம் பேசி , கிளம்பிவிட்டார்கள் என்பதை உறுதி செய்துவிட்டுத் தூங்கப் போகிறேன்.
நாளை நமக்காகவே காத்துக்கொண்டு இருக்கிறது திங்கட்கிழமை ...
நிகழ்வில் செய்தி மடல் வெளியிடப்பட்டது. உங்கள் பார்வைக்கு




4 கருத்துகள்:

  1. நல்ல நிகழ்வை உடன் இருந்து பார்த்த நிறைவு...அடுத்த கூட்டத்திலாவது கலந்து கொள்ள முயற்சிக்கின்றோம்...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. அய்யப்பமாதவன் அய்யாவின் தாயாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

    எல்லாமே உங்களால்தான் சாத்தியமாகிறது பூபாலன்! அசாதாராணமான செயல்களை, அருமையாக செய்து முடிக்கும் திறன் கொண்ட உங்களை போன்றோரால் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இன்னும் இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும்...

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு