புதன், 20 நவம்பர், 2024

நின் நெஞ்சு நேர்பவள் - கவிஞர் ந.பெரியசாமி அறிமுகக் குறிப்பு

 



பெண் உடனான உறவு என்பதை காமத்தோடு மட்டும் தொடர்பு கொண்டு பார்ப்பது சமூகத்தின் சாபக்கேடு. அதிலிருந்து மாறுபட்ட சில குரல்களை கேட்பது நம்மை மகிழச் செய்யும். பூபாலன் நம்மை மகிழச் செய்துள்ளார்.

வெவ்வேறான பெண்களுடனான பழக்கம் புது புது உலகை திறப்புக்கொள்ளச் செய்யும். அபூர்வங்களையும் அசாத்தியங்களையும் நம்முள் நிகழ்த்தியபடி இருப்பர். மொழியை அவ்வளவு திறம்பட பயன்படுத்துவர். சின்னஞ்சிறு சொல்கூட நம் ஆயுளுக்கும் நம்முள் தங்கி மலர்த்தியபடி இருக்கும். நமக்கேயான சில பெண்களை நினைவில் அமரச் செய்தபடி இருக்கிறது இரா. பூபாலனின் இத்தொகுப்பு.

- கவிஞர் ந.பெரியசாமி



நின்நெஞ்சு நேர்பவள் - அறிமுகம் - விமர்சகர் ந.முருகேசபாண்டியன்

 அண்மையில் கவிஞர் இரா.பூபாலன் வெளியிட்டுள்ள நின் நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. பூபாலன் அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட பெண்கள் பற்றி கோட்டோவியமாகக் கவிதைகள் எழுதியுள்ளார்.


காலந்தோறும் அப்பாகளின் நினைவுகளில் மிதக்கிற மகள் பற்றிய பிம்பத்தை முன்வைத்து ஏற்கனவே சில கவிஞர்கள் கவிதை எழுதியிருந்தபோதிலும், இரா.பூபாலனின் ஊசல் கவிதை வரிகள் தனித்து விளங்குகின்றன.
மகள் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினாலும் அப்பாவின் பார்வை, மகள் என்ற வட்டத்திற்குள்ளேயே சுற்றுவதுதான் நடைமுறை. ஊசல் கவிதையின் எளிய வரிகள் வாசிப்பில் அப்பாகளைத் தொந்தரவு செய்யும்.

ஊசல்
மகள்கள் வெகு வேகமாக
வளர்ந்து விடுகிறார்கள்
அம்மாக்களின் செருப்பை
அணிந்துகொள்ளும் அளவுக்கு.
அவர்களின் உடையையும்
அணிந்துகொள்கிறார்கள்
அம்மாக்கள் தங்கள்
அணிகலன்களை
கைப்பைகளை
பங்கிட்டுக்கொள்கிறார்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
அப்பாவின் மடியிலிருந்து தூரமாகி
அம்மாவின் தோழியாகிவிட்ட
ஒரு சிறுமியை
அப்பாக்கள் கனவுகளில்
துரத்தித் திரிகிறார்கள்

- எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன்





-

அன்றில் இலக்கியம் - வலையொளி தளம்

கவிஞர் சோலைமாயவன் தனது எழுத்துப்பணியோடு, இலக்கியப் பணியாக அன்றில் எனும் தனது வலையொளி தளத்தில் தினமும் இலக்கியம் சார்ந்து காணொளிகள் இட்டு வருகிறார்.



பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்வுகளைப் பதிவிடும்பொருட்டுத் தொடங்கப்பட்ட அந்தப் பணி, கவிதை வாசித்தல், பிற இலக்கிய உரைகளைப் பதிவுசெய்தல், பிற அமைப்புகளின் நிகழ்வுகளைப் பதிவு செய்தல் எனத் தொடர்கிறது. இதற்காக நிறைய பொருளையும், நேரத்தையும் செலவு செய்கிறார்.
சமீபத்தில் 100 பெண் கவிஞர்களின் தொகுப்பை எடுத்துக்கொண்டு அவற்றிலிருந்து 100 கவிதைகளை சக ஆசிரியர் திவ்யா அவர்களை வாசிக்கச் செய்து பதிவேற்றியிருக்கிறார். நூறோடு நில்லாமல் இன்னும் தொடர்கிறது பணி.. இதை முக்கியமான செயலாகக் காண்கிறேன். ஆசிரியர் திவ்யா அவர்களுக்கும் இத்துணை கவிதை நூல்களை வாசிக்கவும், அவற்றிலிருந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்து குரல் கொடுக்கவுமாக அவரை வாசிப்பினுள் ஈர்த்து ஈடுபடுத்தியுள்ளார். நமக்கும் பல புதிய கவிஞர்களை அறிமுகம் செய்கிறார்.
அவரது எதிர்பார்ப்புகளற்ற இப்பணியை நாம் அங்கீகரிக்கவும், கவிதைகளைக் கேட்கவும் கீழே இருக்கும் சுட்டியைச் சொடுக்குங்கள்..



அன்றில் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள் தினமும் கவிதைகளும் இலக்கியமுமாகத் தகவல்கள் கிடைக்கும்..