செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

நினைவுகளின் வாதை

ஒரு நாளை நினைவு வைத்துக்கொள்வதில்
எப்போதும் பிணக்குண்டு
சதா நச்சரிப்பாள்
இந்த நாளை மறந்துவிட்டாயா
இந்த நாளைக் கூட மறந்துவிட்டாயா
என்றவள் கேட்கும் போதெல்லாம்
உள்ளுக்குள் குறுகிக் கொள்ளும் மனப் பறவை
அப்போதெல்லாம் 
தன் நினைவுகளைத் தானே
சபித்துக் கொள்வான்.
எந்த நல்ல நாளையும் எளிதில்
மறந்துவிடும் ஒரு முட்டாளுக்கு
வேறென்ன தர ?
இந்த நாளை
ஒரு
கொடுஞ்சாபமெனத் தந்துவிட்டுப்
போயே விட்டாள்
இந்த நாள்
ஒரு கருந்திட்டுப் போல
அப்பிக்கொண்டுவிட்டது
இனி
ஒவ்வொரு ஆண்டும்
என் முன் வந்து நிற்கும்
நான் அதன் காலில் விழுவேன்
கதறுவேன்
அது மேலும் மேலும்
துயரத்தை சிங்காரித்துக்கொண்டு
என்னைப்
பழிவாங்கும்
ஆம் 
நினைவுகளின் வாதைகள்
கொடுந்தண்டனை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக