புதன், 26 அக்டோபர், 2016

கழிவுகளின் தலைநகரம்

வீட்டிலிருந்து காலையில் கிளம்பி இருசக்கர வாகனத்தில் கோவில்பாளையம் வந்து ஸ்டேண்டில் நிறுத்திவிட்டு பேருந்தில் வேலைக்குச் செல்வது வழக்கம். எப்போதும் காலையில் அடித்துப் பிடித்து தான் வருவேன். எனவே கொஞ்சம் வேகமாக வருவேன். எவ்வளவு வேகமாக வந்தாலும் யாராவது லிப்ட் கேட்டால் நிறுத்தி ஏற்றிக்கொண்டுதான் வருவேன்.

ஒரு நாள் வேலைக்கு வரும்போது சாலையில் ஒருவர் பதட்டமாக கை காட்டி கிட்டத்தட்ட வழிமறித்தார். எங்க போகனும் ஏறுங்க என்றேன். இல்லை எங்கயும் போக வேண்டாம். உடனடியா வண்டியை ஓரம் கட்டுங்க என்றார். எனக்குப் புரியவில்லை. நேரம் வேறு ஆகிவிட்டது. கோபமாக  எதற்கு என்று கேட்டேன். அவசரம் வாங்க, அங்க பாருங்க ஒரு மினிடோர் வண்டி நிக்குதுல அதுல கேரளாவிலிருந்து கோழி இறைச்சிக் கழிவெல்லாம் சாக்கு மூட்டைல கொண்டு வந்து இங்க கொட்ட வந்திருக்காங்க. நான் நடந்து போய்ட்டு இருந்தேன் அவங்கள பாத்ததும் நின்னு கவனிச்சேன். அதைப் பார்த்த அவங்க சும்மா பாத்ரூம் போற மாதிரி நடிக்கறாங்க என்றார்.

வண்டியை ஓரம் கட்டினேன். நேரமானாலும் பரவாயில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இப்படி அந்தச் சாலையில் இரண்டு சாக்கு மூட்டை கோழிக் கழிவுகளைக் கொட்டிச் சென்றுவிட்டனர். ஒருத்தரும் அந்தப்பாதையில் நடக்க முடியவில்லை. குடலைப்புடுங்கும் துர்நாற்றம். நாய்கள் வேறு அவற்றைக் குதறி இழுத்து ஆங்காங்கே சிதறி விடுகின்றன. நோய் பரவும் அபாயம் வேறு உள்ளது.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மினிடோர் வண்டிக்காரனிடம் போய் என்ன இது என்று கேட்டோம். ஏதோ ஒரு ஊர் பேரை சொல்லி அங்கே போகிறேன் என்றான். பொய் சொல்கிறான் என்று தெரிந்து விட்டது. அவனிடம் சண்டை கட்டினோம்.( வாய்ச் சண்டை ஒன்லி )

நாங்கள் இருவரும் அவனிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்து இன்னொரு இருசக்கர வாகனத்துக்காரரும் துணைக்கு வந்தார். மூன்று பேரும் சேர்ந்து போலீஸ் ஸ்டேசன் போலாம் வா என்று அவனை இழுத்த போது பயந்து விட்டான். அய்யோ சாரே, மன்னிக்கனும், இந்தப்பக்கமே இனி வர மாட்டேன் என்றான். நாங்கள் விடவில்லை. ஆனால், அவன் காலில் விழாத குறையாகக் கெஞ்சியதாலும், புள்ள குட்டிக்காரன் என்று சென்டிமென்டாகக் கெஞ்சியதாலும் வேறு வழியில்லாமல் அவனை மிரட்டி திரும்ப அனுப்பி வைத்துவிட்டோம். அதற்கு பிறகு மீண்டும் அந்தப்பாதையில் அப்படி எதையும் பார்க்கவில்லை.

இதோ இன்று செய்தித்தாளில் பார்த்த இந்தச் செய்தி பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது.
கோவை, கேரள எல்லையில் இருப்பதால், கோவை, பொள்ளாச்சி , உடுமலை போன்ற பகுதிகளில் இப்படி கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுவது அதிகம். நம் வீட்டு வாசலை நன்றாகப் பெருக்கி பக்கத்து வீட்டு வாசலில் யாரும் பார்க்காத நேரத்தில் தள்ளிவிட்டு விட்டு வீராப்பாக நடந்து வருவோமே அப்படியான மனநிலையில் நிகழ்த்தப்படுவது.

கிட்டத்தட்ட 22 லாரி நிறைய இப்படி இறைச்சி,ரப்பர், தோல் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஒரு தோட்டத்தில் கொட்டி தரம்பிரித்து விற்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இதில் பலருக்குப் பங்கிருந்திருக்கும். பெரும் பணம் கூட கை மாறியிருக்கும். சோதனைச் சாவடி, காவலர்கள் என பலரையும் தாண்டி வந்திருக்கிறது.

இரண்டு மாநிலங்களுக்கிடையில் இப்படி தில்லுமுல்லு என்றால், நாடுகளுக்கிடையில் இதைவிட பெரிய தில்லுமுல்லுகள் நடக்கின்றனவாம்.

மேலை நாடுகளில், குப்பைகளாக சேகரிக்கப்படும் மின்னணுக் கழிவுகள் ( E-Waste) , மருத்துவக் கழிவுகள் எல்லாம் டன் கணக்கில், கண்டெய்னர் கண்டெய்னராக கப்பல்களில் வந்து இறங்குகின்றனவாம். அவற்றை இங்கிருக்கும் தரகர்கள் வாங்கி பல்வேறு வகையில் விற்றும் , எரித்தும் , புதைத்தும் காசு பார்க்கிறார்கள். சில சமயங்களில் அவர்களது கடல் எல்லைகளில் கொட்டுவதால் மீன் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படும் என்பதால், நமது கடல் எல்லைகளில் கொட்டிவிடவும் நிறையப் பித்தலாட்டம் நடக்கிறதாகப் படித்திருக்கிறேன்.

அவர்கள் குப்பையின்றி சுகாதாரமாக வாழ நமது நாட்டைக் குப்பைத் தொட்டியாக மாற்றிவிடுகின்றனர்.

மேலை நாட்டுக்காரனுக்கு நம் நாடு குப்பைத் தொட்டி, அண்டை மாநிலத்தவனுக்கு நம் மாநிலம் குப்பைத் தொட்டி, பக்கத்து வீட்டுக்காரனுக்கு நம் வீடு குப்பைத் தொட்டி..

வாழ்க பாரதம் , வாழ்க நின்புகழ்


6 கருத்துகள்:

 1. சுற்றுசூழல் மாசுபாடு பற்றி படிக்கும் போது "ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. சுற்றி இருக்கும் சூழலை மாசுபடுத்திவிட்டு நாம் அப்படி என்ன வாழ்ந்து கிழிக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே தான். மனிதன் இயற்கையை அழிப்பதன் மூலம் தனது அழிவைத் திட்டமிடுகிறான்

   நீக்கு
 2. i am very pained to read this article..
  every state country wants to dump the other one..
  in yercaud huge wastage ..mountainlike is existing very near the star hotel... there are many in tamil nadu in india in foreign countries also...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். தமிழகம் முழுக்க உள்ள மலை வாசஸ்தலம் அனைத்தையும் பாழாக்கியாயிற்று. இந்தியா முழுதுமே இது தான் நிலை

   நீக்கு
 3. குப்பைத் தொட்டியாக்க நினைப்போரை ஓட ஓட விரட்ட வேண்டும்.கூடி எதிர்க்கும் கலாச்சாரமே நம்மைக் காப்பாற்றும்!
  -தங்கத்துரையரசி
  கோவில்பட்டி

  பதிலளிநீக்கு