புதன், 13 ஏப்ரல், 2016

கடவுளின் பிள்ளை

இன்று மாலை பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில் ஏறினான் ஒரு மாணவன். பேருந்தின் முன்பக்கத்தில் ஏறியவன் ஓவெனக் கத்தியபடியே கடைசி இருக்கைக்கு ஓடினான். பேருந்தே அவனைத் திரும்பிப் பார்த்தது. நடத்துனரும் அவனைப் பார்த்து சிரித்தபடி எதுவும் சொல்லாமல் முன்னால் யாருடனோ கத்திக்கொண்டிருந்தார். கடைசி இருக்கைக்கு ஓடிவந்தவன் படிக்கட்டுக்குப் பின்னால் இருக்கும் நீள் இருக்கையில் இருந்த பெரியவரிடம் "ணா ஜன்னலோரம் நா உக்காந்துக்கறேன்" என்று உரிமையாய்க் கேட்டான். அவரும் வழிவிட்டு அமர்ந்து கொண்டார். அந்த இருக்கையே காலியாகத்தான் இருந்தது.

பார்த்ததுமே தெரிந்தது அவன் ஒரு சிறப்புக் குழந்தை என்று. ஆம், மன வளர்ச்சி குன்றியவன்.

அடுத்த ஒரு நிறுத்தத்தில் இன்னொரு பெரியவர் அவன் அருகில் ஏறி அமர்ந்தார்.
அவன் பாட்டுக்கு பாடிக்கொண்டும் பேசிக் கொண்டும் வந்தான். அருகில் அமர்ந்த பெரியவர் பத்து ரூபாயை நீட்டி பயணச்சீட்டு வாங்கினார். நடத்துனர் அவரிடம் சத்தமாகக் கத்தினார். "மூணு ரூபாய்க்கி எல்லாரும் பத்து ரூபா குடுத்தா சில்லறைக்கு நான் எங்க போறது? எங்கயாவது கொள்ளையடிச்சுட்டுத்தான் வரணும். சில்லறை இருந்தா குடுங்க. இல்லனா இறங்கிக்கங்க " என்று. பெரியவர் பாவமாக அவர் முகத்தைப் பார்த்தபடி இருக்க, அந்தப்பையன் மூணு ரூபாயை எடுத்து நடத்துனரிடம் நீட்டினான். நடத்துனர் " நீ ஏண்டா குடுக்கற ?” எனக் கேட்க, உடனே ஒரு மனப்பாடச் செய்யுளைச் சொல்வதைப் போல சொன்னானே பார்க்கலாம்.
“ நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவி " என்று ஒப்பித்துவிட்டு நடத்துனரிடம் மூன்று ரூபாயைத் தந்து பயணச்சீட்டை வாங்கிப் பெரியவரிடம் கொடுக்கும் போது ஒரு புன்னகை செய்தானே.. சொக்கி விட்டேன். பதிலுக்கு பெரியவர் பத்து ரூபாய்த் தாளை அவனுக்கே தந்து விட , மறுப்பேதும் சொல்லாமல் அதே புன்னகையுடன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான்.
நான், படியில் சென்று நின்று கொண்டேன். அவனிடம் பேச வேண்டும் போலத் தோன்றியது.

 "தம்பி உன் பேர் என்ன ..?”
"அக்கீம் ( ஹக்கிம் ) ணா. உங்க பேரு என்ன ணா ?”
"“பூபாலன். எத்தனாவது படிக்கிற"
"ணா. நான் ஹேண்டிகேப் ( Handicapped) ஸ்கூல்ல படிக்கிறேன்.”
"அது எனக்கே தெரியும் டா. எத்தனாவது படிக்கிற னு கேட்டேன்.”
"ணா, சொல்றத முழுசா கேளுங்க. அங்க எத்தனாவதுனு எல்லாம் இல்ல ணா. பதினெட்டு வயசு வரைக்கும் படிக்கலாம். எல்லாமே சொல்லிக் குடுப்பாங்க. அப்புறம் வேலைக்குப் போலாம்.”
" நீ அப்ப ஒன்னு சொன்னயே உதவி செய்யனும் னு. அதைச் சொல்லு "
“ நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவி "
இவன் கடவுளின் பிள்ளை. அவனுக்குக் கை கொடுத்தேன். "ரொம்ப நல்லது நல்லா இரு" என்று சொல்லிவிட்டு சட்டைப்பையில் இருந்த மிட்டாய் ஒன்றை அவனுக்குத் தந்து விட்டு இறங்கினேன்.
இந்த நடு நிசியில் என்னைத் தூங்க விடாமல் செய்கிறது அவன் முகமும், குரலும். ஆகவே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அவனது பெற்றோர்களை வணங்குகிறேன்.

“ நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவி " 

11 கருத்துகள்:

 1. என்னைத் தூங்க விடாம செஞ்சுட்டீங்களே.!

  பதிலளிநீக்கு
 2. “ நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவி " நிஜம் தான்!

  பதிலளிநீக்கு
 3. அருமையான குழந்தை....மனதில் நிற்கின்றான்.

  பதிலளிநீக்கு
 4. இப்படிப்பட்டவர்களைத்தான் மனவளர்ச்சி குறைந்தவர்கள் என இந்த சமூகம் சொல்கிறது! ஓ... இதனால்தான் 'மனம் எனும் அழுக்கினை நீக்கினால்தான் இறைதரிசனம் கிட்டும்' என சித்தர்கள் கூறினார்களோ!!

  பதிலளிநீக்கு
 5. கடவுளின் அறிவுறுத்தல் இதுபோல ஏதாவது ஒரு சம்பவத்தில் படிப்பினையாக இருக்கும் என கேள்விப்பட்டுள்ளேன். இணைந்தே படிப்போம். அருமை.

  பதிலளிநீக்கு