வெள்ளி, 30 அக்டோபர், 2015

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் முப்பதாவது இலக்கிய சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் முப்பதாவது இலக்கிய சந்திப்பு 18.10.2015 அன்று பாலக்காடு சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

 வழக்கமாக சனிக்கிழமையே நிகழ்ச்சி நடக்கும் பள்ளிக்குச் சென்று வகுப்பறையைச் சுத்தம் செய்து இருக்கைகளை ஒழுங்கு படுத்தி துடைத்து வைத்து விட்டு வருவோம். இந்த முறை அப்படிப் போன போது பள்ளி பூட்டப்பட்டிருந்தது. காவலரின் வீட்டைத் தேடிப் போன போது தனக்குக் கொஞ்சம் வேலை இருப்பதாகவும் மாலை வந்து சுத்தம் செய்து வைத்து விடுவதாகவும் சொன்னார். மாலை வைரமுத்து அவர்கள் தலைமை ஏற்கும் மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு விருது வழங்கும் விழா பொள்ளாச்சியில் இருப்பதால் அங்கு சென்றுவிட்டோம். நிகழ்ச்சி முடியவே 8 மணிக்கு மேல் ஆகி விட்டதால் பள்ளிக்கு வந்து பார்க்க முடியவில்லை.
வைரமுத்து நிகழ்வில் ஆயிரம் பேருக்கு மேல் திரண்டிருந்தனர். வழக்கத்தை விடவும் மோசமான பேச்சு வைரமுத்து அவர்களிடமிருந்து. அரை மணி நேரத்துக்கு மேல் பேசினால் அதுவும் சுவாரஸ்யம் இல்லாமல் பேசினால் வைரமுத்துவாகவே இருந்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்பது நிரூபணமானது. நிகழ்ச்சியின் பின்னர் நான் பேசிய அனைவரும் இதையே சொன்னார்கள்.

முன் தினம் அரங்கம் தயார் செய்யப்படாததால் அடுத்த நாள் காலை 8 மணிக்கு நான் போய்ப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது அத்தனை குப்பை, நாற்காலிகள் இல்லை, பேனர் மாட்டவில்லை... நானும் தம்பி கார்த்தியும் மட்டுமே வந்திருந்தோம். அவசர அவசரமாக அறையைக் கூட்டிச் சுத்தம் செய்து, நாற்காலிகளை எடுத்துப் போட்டு தயார் செய்ய 9.30 ஆகி விட்டது. ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

நிகழ்ச்சியின் முதலில் படித்ததில் பிடித்தது. வாசகர்கள் தாங்கள் படித்ததில் பிடித்த கவிதை, கதை, செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருக்க தவமணி என்ற வாசகர் தனது மனைவியின் இழப்பை, தனது சொந்தக் கதையைச் சொல்லி அனைவரையும் அழ வைத்து விட்டார். இலக்கிய நிகழ்ச்சிகளில் நமது திட்டமிடல்களையும் தாண்டி இப்படியும் நடக்கும்.
கவிஞர் லாவண்யா சுந்தரராஜனின் மூன்று கவிதைத் தொகுப்புகள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. நீர்க்கோல வாழ்வை நச்சி என்ற கவிதைத் தொகுப்பை கவிஞர் க.அம்சப்ரியா அறிமுகம் செய்துவைத்தார். இரவைப்பருகும் பறவை என்ற கவிதைத் தொகுப்பை கவிஞர் வைகறை அறிமுகம் செய்து வைத்தார். அறிதலின் தீ என்ற கவிதைத் தொகுப்பை எழுத்தாளர் அசதா அறிமுகம் செய்துவைத்துப் பேசினார்.
கவிஞர் லாவண்யா சுந்தரராஜன் தனது ஏற்புரையில் நான் முதலில் இணையத்தில் தான் எழுதத் துவங்கினேன், தொடர் வாசிப்புப் பழக்கமும் தேடலுமே என் எழுத்துகளை செழுமைப்படுத்தியது..என்னுடைய கவிதையில் நான் யாருடைய பாதிப்பும் இல்லாது பார்த்துக் கொள்வதில் மிகக் கவனமாக இருக்கிறேன். புதிதாக கவிதைகள் எழுத வருவோர்க்கு எங்கே எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்ற வழிகாட்டுதலையும், அவர்களுக்கான தொடர்ந்து ஒரு இயங்கு தளத்தையும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் தந்து வருகிறது. தமிழ் இலக்கியச் சூழலில் கவிதை எழுதுபவர் அதிகம் ஆனால் வாசிப்பவர் குறைவு என்ற குறைபாட்டை பொள்ளாச்சி இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகள் தீர்த்து வைக்கும். தொடர்ந்து இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்தியும் அவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் இது போன்ற இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று பேசினார்.

ரசனை பகுதியில் லக்குமி குமாரன் ஞானதிரவியம் கவிதைகளில் ரசித்த கவிதைகளைப் பகிர்ந்து கொண்டார் புன்னகை ஜெயக்குமார்.

நிகழ்வில் படிகம் - கவிதைகளுக்கான சிற்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது.
கவிஞர் ரோஸ் ஆன்றா எழுதிய நிலமெங்கும் வார்த்தைகள் என்ற கவிதைத் தொகுப்பை நான் அறிமுகம் செய்துவைத்துப் பேசினேன். மேலும் படிகம் சிற்றிதழும் அறிமுகம் செய்தேன்.
வாசகர்கள் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது .

நிகழ்வில் முக்கியமாக, பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பாக அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுபவர்களுக்கு இலவசப் பயிற்சி மையம் துவங்குவதைப் பற்றிய அறிவிப்பை சையத் அவர்கள் வழங்கினார்.

கவிஞர் அம்சப்ரியா அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிது முடிந்தது


நிகழ்வில் செய்தி மடல் வெளியிடப்பட்டது. உங்கள் பார்வைக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக