புதன், 29 ஜூலை, 2015

I love my family

சென்ற மாதம் மகள் பாரதியின் பிறந்தநாள். காலையில் இலக்கிய வட்டத்துக்கு அவளை அழைத்துச் சென்று அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்துவிட்டு வந்தோம். மாலையில் கேக் வெட்டுவதாக ஏற்பாடு.

விழாவாகவெல்லாம் அல்லாமல்,  குடும்பத்தினர் மட்டும் கேக் வெட்டுவோம். கேக் வெட்டி அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் பேசிக் கொண்டிருக்கையில் பாரதி ஒரு பலூனில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தாள் தனியாக வெளியே அமர்ந்து. என்னவென்று போய்ப் பார்க்கலாம் என்றால் எழுந்து வேறுபக்கம் போய் அமர்ந்து கொள்வாள். யாருக்கும் தெரியாமல் எழுதுகிறாளாம். சரி பார்க்கலாம் என்று மறைந்து நின்று பார்த்தோம். அவள் அதை எழுதி மொட்டை மாடிக்குச் சென்று பறக்கவிட்டாள். அது என்ன ஹீலியம் பலூனா என்ன. நான் வாய் வைத்து ஊதியதுதானே வீட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டின் பின் புறம் விழுந்துவிட்டது. நாங்கள் அதை ஓடிப் போய் எடுத்துப் பார்த்தால் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி.

இன்னைக்கு என்னோட பிறந்தநாள்
இன்னைல இருந்து நான் நல்லா படிக்கனும்
I love my family
என்னோட Family நல்லாயிருக்கனும்
இது இறைவனிடம் போய் சேரட்டும்

என்று எழுதித்தான் வான் நோக்கிப் பறக்க விட்டிருக்கிறாள். அதைப்பார்த்ததும் வீட்டில் அனைவருக்கும் அத்தனை பூரிப்பு.

குழந்தைகள்தான் எத்தனை அன்பானவர்கள். எல்லாக் குழந்தைகளும் குழந்தையாயிருக்கும்போது இப்படித்தான் இருக்கிறார்கள்.

வளர்ந்த பின்புதான் மாறி விடுகிறார்கள் அல்லது மாற்றப்பட்டு விடுகிறார்கள். குழந்தைகளால் எல்லோரிடமும் அன்பாக இருக்க முடிகிறது.
நம்மால் தான் கொஞ்சநேரம் கூட குழந்தையாக இருக்க முடியவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக