வெள்ளி, 17 ஏப்ரல், 2015

அலோ யார் பேசறது - செல்போன் படுத்தும் பாடு


போன வாரத்துல சாயங்காலம் நண்பனொருவன் அழைத்தான், எடுத்துப் பேசினேன் " என்னடா, ரெண்டு ரிங் லயே எடுக்கற , போன் கையிலயே வெச்சுட்டு இருக்கியா " னு கேட்டேன்.

" ஏண்டா, மிஸ்டு கால் விடலாம்னு பாத்தியா, அட்டென் பண்ணிட்டனா " எனக் கேட்டேன். " இல்லை வேலை இல்லாம சும்மா இருக்கியோ அதான் உடனே எடுத்துட்ட" னு கேட்டான். கடுப்பாயிட்டேன்.

இன்னிக்கு காலைல கூப்பிட்டான், அட்டென் பண்ணலயே , கடைசி ரிங் ல எடுத்தேன். எடுத்த உடனே " என்னடா ரொம்ப பிஸி யா, இத்தன நேரம் ரிங் போகுது எடுக்க மாட்டிங்கற" னு கேட்டான். வந்துச்சு பாருங்க கோபம்,

நல்ல வார்த்தையில நாலு திட்டு திட்டினேன். மக்களே அது என்ன போன் உடனே எடுத்தா வெட்டியா இருக்கேன்னு கேக்கறீங்க, லேட்டா எடுத்தா ரொம்ப பிசியா இருக்கேன் னு கேக்கறீங்க. எப்ப தான் எடுக்கறது..?

இன்னொரு கூத்து. போன் பண்ணினா நேரடியா மேட்டருக்கு வரதில்ல, எப்படி இருக்கீங்க னு கூட கேக்கறதில்ல. முதல் கேள்வி " எங்க இருக்க" ஆமா அத தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க அய்யா. 

இன்னொரு நல்ல மனுசன் இருக்காரு. பேசிட்டு இருக்கறப்பவே வச்சிடுவாரு. ரெண்டு மூணு முறை கண்டுக்கல. ஒரு முறை கேட்டுட்டேன். " நீ தான் ஓ.கே னு சொன்ன அதான் வச்சுட்டேன் னு சொன்னார் " அப்ப தான் புரிஞ்சுது. எப்ப ஓ.கே னு சொன்னாலும் வச்சுடுவாரு.
" நாளைக்கு வரயா பூபால்"
'ஓ.கே"
டொக். 
வச்சுட்டாரு.. அடேய் அடேய் எங்க வரணும் எதுக்கு வரணும் சொல்லுங்கடா. 
அத அப்புறமா போன் பண்ணி மறுபடி கேக்கணும்.

தெரிஞ்சவங்களே இப்படினா ராங் கால் அன்பர்கள் சொல்ல வேண்டுமா,

ஒரு நாள் ஒருத்தர் போன் பண்ணினாரு " நல்லா இருக்கீங்களா" னு பண்பா கேட்டாரு. நானும் " நல்லா இருக்கேன்" னு சொல்லிட்டு யாருங்க னு கேக்கறக்குள்ள " நம்ம ஊர்ல மழைங்களா" னு கேட்டார். நானும் " ஆமாங்க, ஒரு வாரமா நல்ல மழை" னு சொன்னேன். சொல்லச் சொல்ல " அப்புறம் ஏண்டா தண்ணி இல்லனு புலம்புனியாமா கிணத்துல " னு சொன்னாரு. நான் அப்புறம் கேட்டேன் " ஏங்க யாருங்க, நான் பூபாலனுங்க பொள்ளாச்சிங்க" னு சொன்னேன்.
" அத மொதல்லயே சொல்லித் தொலைக்க வேண்டியது தான " னு திட்டிட்டு வச்சுட்டாரு. " எங்கீங்ணா சொல்ல விட்டீங்க..?

இன்னொரு நாள் ஒருத்தர் போன் பண்ணினாரு " அரிசிக் கடைங்களாண்ணா"
" இல்லைங்க ராங் நம்பருங்க"
மறுபடி போன் " அரிசிக் கடைங்களாண்ணா" 
" இல்லைங்க ராங் நம்பருங்க. மறுபடி எனக்கே கூப்பிட்டுட்டீங்க" என்றேன்.
நாலு முறை இப்படியே பண்ணினார். கடுப்பாயிடுச்சு. ஐந்தாவது முறை

" அரிசிக் கடைங்களாண்ணா"
" ஆமா, சொல்லுங்க"
" எத்தனை மூட்டை போடறதுணா, 20 மூட்டை பொன்னி போட்டுடலாமா"
" சரி போடுங்க" னு சொல்லிட்டு வச்சுட்டேன் பிறகு வரவே இல்ல.

ஒருநாள் ராத்திரி 2 மணி இருக்கும் போன் வந்துச்சு : " திண்டுக்கல்லுல அப்புச்சி ஒருத்தர் தவறிட்டாருனு சித்தப்பா போன் பண்ணியிருக்கார். அப்பா, மாமனார் ரெண்டு பேர்கிட்டயும் சொல்லிடுனு சொன்னார். சரினு சொல்லிட்டு தூங்கிட்டேன். எதோ கனவு மாதிரி இருந்துச்சு. காலைல வழக்கம் போல வேலைக்குப் போயிட்டேன். 11 மணிக்கு திட்டிர்னு ஞாபகம் வந்துச்சு. அவசர அவசரமா போன் பண்ணி அப்பாவுக்கும் மாமனாருக்கும் சொன்னேன். அடிச்சு புடிச்சு கிளம்பிப் போனாங்க.

ஒரு நாள் ஒரு போன் வந்துச்சு எடுத்த எடுப்புலயே ஒரு பொண்ணு இந்தியில எதோ பேசி அழுவுது. நான் ஹலோ ஹலோ னு சொல்றேன் எதுமே கேக்கல. அது பாட்டுக்கு கதறி அழுவுது. எனக்கும் அழுவாச்சியா வந்துச்சு.எனக்கு இந்தி தெரியல. கடைசியா 5 நிமிஷம் கழிச்சு ராங் நம்பர் னு மட்டும் சொல்லிட்டு வச்சுட்டேன். அன்னிக்கு ராத்திரி முழுக்க தூக்கம் வரல. எனக்கு மட்டும் தான் இப்படியா..?

மனைவி, தோழிகளின் தொல்லை வேற மாதிரி. விடிய விடிய ஆன்லைன்லயே இருக்கீங்க ஆனா வாட்ஸ் அப், மெசஞ்சர் எதுல அனுப்பினாலும் ரிப்ளை பண்ண மாட்டீங்கறீங்க என சலித்துக் கொள்வார்கள். நெட் ஆன்ல யே இருக்கும் அதுனால ஆன்லைன்னு வருதுனு சொன்னாலும் கேக்க மாட்டாங்க. கோவிலுக்குள்ள, மருத்துவமனைக்குள்ள, எதாவது கூட்டங்கள்ல, பள்ளி கல்லூரிகளுக்குள் போகும் போது எல்லாம் நான் எனது அலைபேசியை அமைதி அல்லது அதிர்வு நிலைக்கு மாற்றிவிடுவது தான் வழக்கம். அது தான் நல்ல பழக்கமும் கூட. ஆனா எழவு வீட்டுல கூட " ஏய் செல்ஃபி புள்ள கிவ் மீ உம்மா " என செல்போன் கதறும் போது செத்தவன் கூட எந்திரிச்சு உக்காந்து அழுவான். இப்படி பண்றீங்களேமா.

ஸ்மார்ட் போன் வச்சிருந்தா பத்தாது மக்கா, ஸ்மார்ட்டா உபயோகிக்கணும், ஸ்மார்ட்டா நடந்துக்கணும்.

சில வருடங்களுக்கு முன்னால் விகடனில் வெளியான எனது கவிதையொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான் ...

5 கருத்துகள்: