புதன், 5 நவம்பர், 2014

இந்தியா ஒளிர்கிறதென்று சொன்னால் நம்பவா போகிறோம்

இந்தியாவின் மானத்தை அவ்வப்போது இப்படிக் கப்பலேற்றுபவர்களையும், விமானத்தில் ஏற்றுபவர்களையும் குறை பட்டு என்ன செய்ய.? பெண்களின் மீதான நமது பார்வையை நாம் எப்படிக் கொண்டுள்ளோம். அதன் குறைபாடுகளைக் களைந்து நமது புத்தியில் சமத்துவத்தையும் நற்பண்புகளையும் வளர்க்கும் பாங்கு நமது கல்வி முறையிலோ அல்லது சமூகச் சூழலிலோ உள்ளதா என்பது விடையில்லாத ஒரு கேள்விதான்.
சென்ற பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்வுகள் குறித்து எதுவுமே எழுதவில்லை நான். நேரமின்மை மட்டுமல்ல காரணம். ஒருவித சோர்வு. ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக நல்ல படைப்புகளை, நல்ல படைப்பாளர்களை, புதிதாக எழுத வருகின்ற நண்பர்களை அனைவருக்கும் அறிமுகப் படுத்த நினைக்கிறோம். நிகழ்வுகளையும், நிகழ்த்துனர்களையும் சரியாகத் திட்டமிட்டுவிடலாம். ஆனாலும், சமயங்களில் நிகழ்ச்சி நாம் திட்டமிட்ட திசையைத் தாண்டி வேறுபக்கம் போய்விடுகிறது.

கவிஞர் கெளதமி சுப்பிரமணியம் அவர்களின் கவிதை நூலை அறிமுகம் செய்த கவிஞர் கீதாப்ரகாஷ், தனது உரையில், நூல் அறிமுகத்துக்கு வெளியே ஆரம்பித்தவர் பாடகர் ஜேசுதாஸ்அவர்களின் ஜீன்ஸ் பற்றிய கருத்துக்கு எதிர்க் கருத்தைப் பதிவு செய்தார். அடுத்தடுத்து வரிசையாக இதைப் பற்றிப் பலர் பேசினார்கள். ஜீன்ஸ் நமது உடையே அல்ல, அது சரியல்ல, கண்களை உறுத்தாத மாதிரி உடுத்த வேண்டும் என்றெல்லாம். நான் ஒரே வார்த்தையில் மட்டுமே அவர்களுக்கு பதிலளித்தேன் உடை அவரவர் சுதந்திரம் என்று.

நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாள் கெளதமியுடன் பேசும் போது அவர் சொன்னது என் மனதை இன்னும் உறுத்தியது. உடையைப் பற்றி இலக்கியக் கூட்டத்தில் பேசியது தேவையற்றது. எனக்கு மிகவும் அசெளகர்யமாக இருந்தது என்றார். ஒருவேளை நான் ஜீன்ஸ் அணிந்து அன்று அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தால் அவர்களின் பார்வை என் மீது எப்படி இருந்திருக்கும் என்றார். சுரீர் என்றது.

உடை நாகரீகமா , கலாச்சாரமா என்ற கேள்வி எனக்குள் உண்டு. கலாச்சாரம் என்றால், கல் தோன்றி முன் தோன்றாக் காலத்தே முதலில் தோன்றிய நமது மக்கள் என்ன உடைகளை உடுத்தியிருப்பார்கள்.? ஏன் அங்கிருந்து நாம் இவ்வளவு தூரம் வந்தோம். நமது பண்பாட்டு உடை சேலையும், வேட்டியும் தானென்றால், சேலை எத்தனை நூற்றாண்டுகளாக நமது உடையாக இருந்தது? அதற்கு முன் நாம் என்ன உடுத்தினோம். அந்த முந்தைய உடையிலிருந்து நாம் சேலைக்கு மாறிய போது இப்படி எதிர்க்குரல்கள் எழுந்தனவா.? இன்று ஜீன்ஸ் நமது விருப்ப உடையாக இருக்கிறது, நாளை நிச்சயம் இது மாறும். வேறொரு உடை நமது தினங்களை நிறைக்கக் கூடும். அதையும் நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.

நண்பரொருவர் சொன்னார், உறுத்தாத மாதிரி உடை அணியுங்கள் என்று கெளதமியின் குரலில் இதைக் கேட்க வேண்டுமானால், இப்படிக் கேட்பேன் " உறுத்தும் அளவுக்கு உங்கள் கண்கள் இருக்கின்றனவா, நான் உங்கள் கண்களைக் குறை சொல்லவா.?” என்று.

உடை ஒரு விவாதப் பொருளானது அன்றைய துரதிர்ஷ்டமே. தொடர்ந்து கொளதமி சொன்ன தகவல்கள் என்னை மனதளவில் வெகுவாகப் பாதித்தன.

அவர் வெளிநாட்டில் இரண்டொரு வருடங்கள் தங்கிப் படித்து, பணி செய்தவர். அங்கு தங்கியிருந்த காலங்களில் இரவு நேரமாகி விட்டாலும் தனியாகவே வீட்டுக்குப் போவாராம். இங்கு அப்படிப் போய்விடமுடியுமா என்று கேட்கிறார். நிர்பயாக்களைச் சிதைத்து விட்டு எந்த முகத்துடன் இந்தக் கேள்விகளை எதிர் கொள்வது. வெளிநாடுகளில் உடை ஒரு பொருட்டே இல்லை, எந்த உடையாக இருந்தாலும் வெறித்து வெறித்துப் பார்ப்பதில்லை என்று சொன்னார். அவருடன், அவரது வெளிநாட்டுத் தோழிகளும் சென்னையில் தங்கி இப்போது பணி புரிகின்றனர். அவரது வெளிநாட்டுத் தோழிகள் இவரிடம் புலம்புகின்றனராம். தனியாகவெல்லாம் வெளியே போக பயமாக இருக்கிறது என்று. ஒரு மாதிரிப் பார்ப்பது, கேலியும் கிண்டலுமாகப் பேசுவது என்று ஆண்களைக் கடந்து போவது இங்குதான் அவர்களுக்கு அந்நியமாக இருக்கிறது என்று.அவர்களுக்கு இவர் என்ன பதில் சொல்லி சமாளித்திருப்பார்.

மேலும், பெண்களே பெண்ணியத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இன்னமுமின்றி இருக்கும் இந்தச் சூழலில், ஆண்களும் பெண்களும் சமம் தான் என்ற புரிதல் வர இன்னும் பல காலமாகுமோ?

நமது தேசம் பெண்களுக்கான பாதுகாப்பற்ற தேசம் எனவும், நமது நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என மேலை நாட்டு மக்களிடம் அந்நாட்டு அதிபர் சொன்னதாகவும் ஒரு செய்தி படித்தேன். எத்தனை வேதனையானது. இன்று உண்மையில் பெண்களை பல வகையிலும் சீரழித்து வருகிறோம் பிறகு பழம்பெருமை பேசி என்ன பயன்.?

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு சமயம் இப்போதெல்லாம் பெண்கள் சடை போடுவதே இல்லை கூந்தலை முடிவது கூட இல்லை அப்படியே விரித்துப் போட்டுத் திரிகின்றனர் என்று குறைபட்டுக் கொண்டார். ஏன் நன்றாகத்தானே இருக்கிறது இதுவும் அவர்களது விருப்பம் தானே என்றேன். முன்பெல்லாம் பெண்கள் வாரிப்பின்னி எப்படி இருந்தார்கள் தெரியுமா என்றார். முன்பெல்லாம் நாமும்தான் சடாமுடியுடனும், தாடியுடனுமே திரிந்து கொண்டிருந்தோம்....?????


எப்போதும் குற்றவாளிகளை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களின் குறைகளையும், தவறுகளையும் சொல்லிச் சொல்லியே குற்றங்களை மறைப்பதும் மறப்பதும் தானே நமது வழக்கம். அப்படித்தான் இத்தேசத்தின் எல்லா நகரங்களிலும் குருதி வாடை வீசுகிறது, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்றித் தவிக்கின்றனர்.

தினமும் செய்திகளில் பள்ளிக் குழந்தைகள் முதல், ஏதாவக்தொரு பெண் நாட்டின் மூலைகளில் சிதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறாள். பெண்வழிச் சமுதாயத்தில் தோன்றிய , பெண் கடவுள்கள் நிறையக் கட்டமைக்கப்பட்டிருக்கிற நம் நாட்டின் இன்றைய போக்கு நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. எதிர்காலம் குறித்த கேள்விகளை நம் முன் விசிறியடிக்கிறது. அறிவியலில், சுகாதாரத்தில், தொலைதொடர்பில் என எல்லாத் துறைகளிலும் நாம் பண்பட்டுக் கொண்டே வருகின்றோம். இருப்பினும் இன்னும் பல இடங்களில் இருண்மைதான் நிறைந்து கிடக்கிறது. வெளிச்சத்துக்கு ஏங்குகிறோம் ….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக