வியாழன், 28 ஆகஸ்ட், 2014

கதை சொல்லி அப்பத்தா சரஸ்வதி (எ) அழகம்மாளுக்கு ...

அன்பு அப்பத்தா,

நான் இங்கு மிகவும் நலமாகவே இருக்கிறேன். நீ நலமாக இருக்கிறாயா என்று கேட்க முடியாத தொலைவுக்கு நீ சென்றிருக்கிறாய் இந்த உலகத்துடனான எல்லாத் தொடர்புகளையும் முற்றிலுமாக அறுத்துக் கொண்டு.

எப்போதும் உன்னை நினைத்துக் கொண்டே இருக்கும் எனக்கு கொஞ்ச நாட்களாக உனது நினைப்பு அதிகமாகியிருக்கிறது.தினமும் இரவு தூங்குவதற்கு கதை சொல்லச் சொல்லிக் கேட்கும் பாரதிப் பாப்பாவுக்கு தினமும் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது. அல்லது கதை சொல்லாமல் தப்பிக்கவே ஒரு கதை சொல்ல வேண்டி இருக்கிறது. கதைகளைப் பற்றி நினைக்கும் போதே எனக்கு இயல்பாகவே உனது நினைவு வந்து விடுகிறது.உனது நினைவுகளை, உன்னுடன் நான் பேச விரும்புவதை, உனக்கு நான் சொல்ல விரும்புவதை வேறு யாருடன் சொல்ல.? உனக்கே சொல்லிவிட விருப்பம் இந்தக் கடிதம் மூலமாக.

எனது பால்யத்தை எத்தனை சுகமாக்கி வைத்திருந்தாய் உனது கதைகளால்.. அண்ணமார் கதை (பொன்னர் சங்கர் கதை),நள தமயந்தி கதை,நரி,சிங்கம்,புலிக் கதைகள் என நீ கட்டமைத்துக் கொடுத்த உலகம் அத்தனை சுவாரஸ்யமானது. உனக்கு அருகில் என்னையும், நித்யாவையும் படுக்க வைத்துக் கொண்டு ஒருக்களித்துப் படுத்தவாறு நீ சொல்லும் கதைகளும், நீ கதை சொல்லும் பாவமும், உனது மொழியும் நான் எங்குமே கேட்டிராதது இந்த வயது வரையிலும்.

யோசித்துக் கொண்டேயிருக்கிறேன், இப்போது எத்தனை குழந்தைகளுக்கு
உன்னைப் போல அப்பத்தாக்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.? எத்தனை வியப்பான அந்த உலகம் இப்போது யாருக்குக் கிடைக்கிறது.?
கணிப்பொறியிலும், கார்ட்டூன் மொழியிலும் குழந்தைகள் இப்போதெல்லாம் பெட்டிக்கு முன்னால் கிடக்கிறார்கள் அல்லது புத்தகச் சுமைகளாலும் வீட்டுப் பாட நெருக்கடிகளாலும், போட்டி மனப்பான்மை உலகத்தில் தங்கள் பால்யத்தை, குழந்தைமையை இழந்து கொண்டே யிருக்கிறார்கள்.

உண்மையில், நீ சொல்லி நான் வியந்த அந்தக் கதைகள் தான் எனது தேடலுக்கு விதை விதைத்து நீர் வார்த்தது. உனது கதைகளை நூலகங்களில், புத்தகத்தின் பக்கங்களில் தேடலானேன். விக்ரமாதித்தன் கதைகள்,1001 அரேபிய இரவுக் கதைகள்,பீர்பால்,முல்லா,தெனாலிராமன்,ஈசாப் நீதிக் கதைகள் என எழுத்து வடிவில் கதைகள் எனக்கு அறிமுகமானதுக்கு நீயும் தான் காரணம். அந்தத் தேடலின் தொடர்ச்சி தான் காமிக்ஸ்,வார மாத இதழ்கள் என வளர்ந்து கவிதை வரைக்கும் வந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

மேலும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக நான் மேடையேறிப் பேசியதும், அதற்கு மாவட்டக் கல்வி அலுவலர் பாராட்டியதும் வெறும் நிகழ்வு எனக்கு. ஆனால் அதை நீ எத்தனை முறை என்னைப் பேசச் சொல்லி பேசச் சொல்லிக் கேட்டிருக்கிறாய். பப்பாளி மரத்தின் மேல் நின்று, மாமரத்தின் மேல் அமர்ந்து, என என் அந்தப் பேச்சை உனக்காக எத்தனை முறை நான் பேசியிருக்கிறேன். வீட்டுக்கு யார் சொந்தக்காரர் வந்தாலும் அவர்களிடம் பெருமையாக என்னைப் பேசச்சொல்லிக் காட்டுவாய்.
இதோ அடுத்த மேடையில் எனது பேச்சு உன்னையும் உன் கதைகளையும் பற்றித்தான். நீ எப்படிக் கேட்பாய் அப்பத்தா..?

வேலை,பயணம்,என ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் பயணத்தில் இளைப்பாறுதலாக இப்போது நீயும் உனது கதைகளும் கிடைத்தால் எத்தனை ஆசுவாசமாய் இருக்கும்.

அப்பா அம்மா உன்னோடு சண்டை போட்டு யாரும் உன்னுடன் பேசாதிருந்த போதும் நீ ஒளித்து எடுத்து வந்து தரும் மாம்பழங்களின் சுவையை இப்போதெல்லாம் எந்த மாம்பழங்களும் தருவதேயில்லை.

நீ எப்போதும் என்னிடம் எதுவும் கேட்டதேயில்லை. நானாக எதாவது வேண்டுமாவெனக் கேட்டாலும் தலையசைப்பாய் வேண்டாமென்று. நானாக எதாவது வாங்கித் தந்தால் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொள்வாய். மாத்திரையாக இருந்தாலும் நானாகத்தான் வாங்கி வரவேண்டும்.

ஆனால் என்னிடம் முதன் முறையாக ஒரு சுவர்க் கடிகாரம் கேட்டாய் பழையது பழுதாகி விட்டது என்று. அடுத்த ஞாயிற்றுக் கிழமை வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்றேன்.. முதன் முறையாக நீ கேட்டதுதான் கடைசி முறையென்று எனக்கு அப்போது தெரிந்திருந்தால் அப்போதே வாங்கி வந்திருப்பேனே. அடுத்த ஞாயிறு வரைக்கும் காத்திருக்கவேயில்லை நீ. அடுத்த ஞாயிறு உனக்கு வரவேயில்லை.

எனக்காக, இலவசத் தொலைக்காட்சி வாங்கி விட்டு வந்து வீட்டுக்குள் வைத்து விட்டு அப்பாடா என்று வாசலில் அமர்ந்தாயாம்... அப்படியே சாய்ந்தாயாம்... கடைசி நாள் வரைக்கும் திடமாய் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்த நீ இப்படித்தான் எழுதிக் கொண்டாய் உன் கடைசிப் பக்கத்தையும். நான் கேவிக் கேவி அழுத போது அத்தை சொன்னது நீ தூங்குவது போலவே படுத்திருக்கிறாய் என்று. நீ தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாயா எழுந்து விட்டால் எத்தனை நன்றாக இருக்கும் என்றே நினைத்தேன் சிறு பிள்ளையாக. உன் கடைசி ஆசையாக நீ கேட்ட சுவர்க் கடிகாரத்தை வாங்கி வரச் சொல்லி மாமா சொல்ல. உன் தலை மாட்டில் வாங்கி வந்து வைத்தேன் நீ முதலும் கடைசியாகக் கேட்ட அப்பொருளை.

அது ஓடிக் கொண்டேயிருந்தது. நீ தான் பார்க்கவேயில்லை உன் காலத்தை அந்தக் கடிகாரத்தில். அந்தக் கடிகாரம்தான் என் பொம்மைகளின் மொழியில் கவிதையானது என்பதும் உனக்குத் தெரியாது.

உன்னையும் உனது கதைகளையும் இந்த மனதில் சுமந்து கொண்டே பயணிக்கிறேன் எனவே எனது பயணத்தில் நீயும் இருக்கிறாய்.

இந்தக் கடிதத்தை இப்போது அந்த மாமரத்தின் மேலேறி நின்று கொண்டு உரக்கப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பேசச்சொல்லி நீ கேட்டது போல. காற்றில் மிதந்து வரும் எனது சொற்களை இங்குதான் காற்றோடு எங்கோ இருக்கும் நீ மொழி பெயர்த்து படித்துக் கொள்வாய் என்ற நம்பிக்கையில்.....

- இரா.பூபாலன்


கடிதங்களால் பேசுவோம் நண்பர்கள் வட்டம் நடத்திய கடிதப் போட்டியில் ஆறுதல் பரிசுக்குத் தேர்வான கடிதம்.

நன்றி : கடிதங்களால் பேசுவோம் நண்பர்கள் வட்டம்
நண்பர் தாய் சுரேஷ்,

கடிதத்தைப் பிரசுரித்த ஆலம்பொழில் - கடித இலக்கிய இதழுக்கும் அதன் ஆசிரியர் வலம்புரி லேனா அவர்களுக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக